Images
  • thai airport
    (படம்:  Reuters/Athit Perawongmetha)

தாய்லந்து: புதிய வகைக் கொரோனா கிருமி பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட சீன மாது

சீனாவின் வூஹான் நகரில் பரவியுள்ள நிமோனியா காய்ச்சலுக்குக் காரணமான புதிய வகைக் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட சீன மாது ஒருவர் தாய்லந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சீனாவுக்கு வெளியே அந்தக் கிருமி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று தாய்லந்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அடையாளம் தெரியாத அந்தக் கொரோனா வகைக் கிருமியால் பாதிக்கப்பட்டுக் கடந்த வாரம் 61 வயது ஆடவர் சீனாவில் மாண்டார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கானோரை பலிகொண்ட சார்ஸ் (SARS) நோய்ப் பரவலுக்கும் கொரோனா வகைக் கிருமியே காரணம்.

சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சீனச் சுற்றுப்பயணிகளை எதிர்பார்க்கிறது தாய்லந்து.

அதனால் விமான நிலையங்களில் கண்காணிப்பு முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட 12 பேரில் 61 வயதுச் சீன மாதிற்கு மட்டும் corona கிருமி இருப்பது தெரியவந்தது.

சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்து சீனாவுக்குத் திரும்பத் தயாராகவுள்ளார்.

கிருமிப் பரவல் வூஹானில் உள்ள கடலுணவுச் சந்தைக்குத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

கிருமி மனிதருக்கு மனிதர் பரவுவதற்கான ஆதாரம் இதுவரை இல்லை.

தாய்லந்தில் உள்ள உலகச் சுகாதார நிறுவன அதிகாரிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

தாய்லந்துக்குச் சீனாவிலிருந்து ஆண்டுக்குச் சுமார் 10 மில்லியன் பயணிகள் வருகின்றனர். 

Top