Images
  • thai
    (படம்: REUTERS/Soe Zeya Tun/File Photo)

'எங்களுக்காகப் போக்குவரத்தை நிறுத்த வேண்டாம்': தாய்லந்து மன்னரின் உத்தரவு

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில், அரச குடும்ப வாகன அணிவகுப்பால் உருவாகும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் புதிய போக்குவரத்து விதிமுறைகளுக்கு மன்னர் மகா வஹீராலொங்கோன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இனிமேல், அரச குடும்ப வாகனங்கள் செல்லும்போது சாலையின் ஒருபகுதி மட்டுமே மூடப்படுமென மன்னரின் பேச்சாளர் தெரிவித்தார்.

அரச வாகன அணி செல்லும் சாலைக்கு எதிர்த்திசையிலுள்ள சாலையில் வாகனங்கள் செல்ல இனித் தடையில்லை.

அரச குடும்ப வாகனங்களை மீறிச் சென்று U-வளைவில் திரும்பவும் இனி வாகனமோட்டிகளுக்கு அனுமதியுண்டு.

அவசியம் ஏற்படும்போது, அரச வாகனங்கள் செல்லும் சாலைத் தடம், ஏனைய தடங்களில் இருந்து போக்குவரத்துக் கூம்புகள் மூலம் பிரிக்கப்படுமென்று பேச்சாளர் குறிப்பிட்டார்.

தாய்லந்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாலைகளில் செல்லும்போது, மற்ற வாகனங்கள் செல்லமுடியாமல் தடுக்கப்படுவதுண்டு.

அதனால் உருவாகும் போக்குவரத்து நெரிசல் குறித்து அண்மைக் காலமாகத் தாய்லந்துவாசிகள், இணையத்தில் அதிகமாகக் குறைகூறிவந்தனர்.

உலகில், ஆகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் பெரிய நகரங்களில் பேங்காக்கும் ஒன்று.


 

Top