Images
  • Thai boys
    (படம்: AFP / TANG CHHIN SOTHY)

தாய்லந்துக் குகையிலிருந்து மீட்கப்பட்ட மேலும் ஒரு சிறுவனிடத்தில் நிமோனியா அறிகுறிகள்

தாய்லந்தின் தாம் லுவாங் குகையிலிருந்து காப்பாற்றப்பட்ட மேலும் ஒரு சிறுவனிடம் நிமோனியா சளிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகச் சுகாதார அதிகாரிகள் நேற்று (ஜூலை 10) கூறினர்.

ஞாயிற்றுக்கிழமையன்று மீட்கப்பட்ட இரு சிறுவர்களுக்கு நிமோனியா தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்றாவதாக இச்சிறுவனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களின் உடல்நலம் நன்கு தேறிவருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நிமோனியாவுக்கான அறிகுறிகள் தென்பட்ட சிறுவர்கள் மட்டும் மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் அதன்பிறகு ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவர்களில் பெரும்பாலானோர் சுமார் 2 கிலோகிராம் உடல்எடை குறைந்து காணப்பட்டனர்.

திங்கட்கிழமை மீட்கப்பட்ட சிறுவர்களிடையே கடுமையான எந்தத் தொற்றும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

மீட்கப்பட்ட அனைவரின் உடலிலும் இரத்த வெள்ளை அணுக்கள் அதிகம் இருந்தது தெரியவந்தது. அதன் பாதிப்பு ஓரளவு இருக்கலாம். ஆனால் கவலைக்குரிய நிலையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Top