Images
  • thailand
     REUTERS/Soe Zeya Tun

தாய்லந்து: குறைவான கிருமித்தொற்று.. இருப்பினும், நெருக்கடிநிலையை நீட்டிக்கத் திட்டம்

தாய்லந்தில் கிருமித்தொற்று தொடர்பான நெருக்கடிநிலை, ஜூன் மாத இறுதிவரை நீட்டிக்கப்படக்கூடும்.

அரசாங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வேளையில், நெருக்கடிநிலை நீட்டிக்கப்படக்கூடுமென கிருமித்தொற்றுக்கு எதிரான பணிக்குழு தெரிவித்தது.

உலகளாவிய கொள்ளைநோய் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, அண்மை முடிவு பரிசீலிக்கப்படுவதாகத் தாய்லந்து அரசாங்கம் குறிப்பிட்டது.

தற்போது நடப்பிலுள்ள கட்டுப்பாடுகளை, மேலும் தளர்த்துவதற்குக் கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்பதும் அந்த நீட்டிப்புக்கு ஒரு காரணம்.

நெருக்கடிநிலையை நீட்டிக்கும் முடிவை ஏற்கலாமா வேண்டாமா என்பதை, வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை தீர்மானிக்கும்.

தாய்லந்தில் கடந்த ஒரு மாதமாக, பெரும்பாலான நாள்களில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே பதிவானது.

இன்று அங்கு புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று உறுதியானதாகத் தகவல் இல்லை.

தாய்லந்தில் மொத்தம் 3,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 மாண்டனர்.
சுமார் 2900 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பினர்.

 

Top