Images
  • turtle
    (படம்: Myo Min Win/WCS Myanmar)

சிரித்த முகம் கொண்ட ஆமைக்கு இனி அழிவில்லை

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட பர்மியக் கூரை ஆமையின் (Burmese roofed turtle) எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இயற்கையாகவே சிரித்த முக அமைப்பு கொண்ட அந்த ஆமைகள் சிலவற்றை உயிருடன் கண்டெடுத்த விஞ்ஞானிகள், அவற்றின் எண்ணிக்கையை சுமார் 1,000க்கு அதிகரித்தனர்.

கடந்த 5 ஆண்டுகளில், அவற்றில் சில, மியன்மார்க் காடுகளில விடுவிக்கப்பட்டன.

விலங்குகளிலேயே முற்றிலும் அழிந்துபோகும் அபாயத்தை அதிகம் எதிர்நோக்குவது ஆமைகள் தான்.

உலகில் உள்ள 360 ஆமை வகைகளில், பாதிக்கும் மேலானவை அழிந்துபோகும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன.

கடுமையான மீன்பிடி நடவடிக்கைகளாலும், கண்மூடித்தனமாகப் பொறி வைக்கும் முறைகளாலும் பர்மியக் கூரை ஆண் ஆமைகள் பல கொல்லப்பட்டன.

மியன்மாரில் வெளிநாட்டினர் பல ஆண்டுகள் அனுமதிக்கப்படவில்லை என்பதால், அந்த வகை ஆமைகள் என்னவாயின என்பது குறித்துத் தகவல்கள் இல்லை.

ஆனால், ஹாங்காங்கின் செல்லப் பிராணிக் கடை ஒன்றில் அது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தகவலறிந்து, மியன்மாருக்கு உடனடியாய்ச் சென்றதாய் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலையைச் சேர்ந்த உயிரியலாளர் தெரிவித்தார்.

அந்த ஆமைகளை இனப்பெருக்கம் செய்வதற்கான அவருடைய பயணம் அப்போது தொடங்கியது.

தற்போது, அவை அழிந்து போகும் அபாயத்தில் இல்லை.

எனினும், அவற்றைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இல்லாததால், அவற்றைப் பாதுகாக்க எத்தகைய சுற்றுச்சூழல் தேவை என்பது இன்னும் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Top