Images
  • whale
    (படம்: AFP)

இந்தோனேசியா: திமிங்கிலத்தை வெட்டிக் கூறு போட்ட கிராம மக்கள்

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கடலோரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு திமிங்கிலங்கள் மாண்டு விட்டன.

சுமார் மூன்றிலிருந்து நான்கு மீட்டர் நீளமுள்ள 17 திமிங்கிலங்கள் மெனியா(Menia) கிராமத்துக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்தன.

அதைப் பார்த்த கிராமத்தினர், பத்து திமிங்கிலங்களை நேற்று பத்திரமாகக் காப்பாற்றினர்.

எஞ்சிய 7 திமிங்கிலங்கள் மாண்டு போயின. அவற்றின் உடலில் பாறைகளில் உரசியதால் ஏற்பட்ட காயங்கள் தென்பட்டதாக உள்ளூரிலுள்ள கடல் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி இக்ரம் சங்காஜி கூறினார்.

மீட்பு நடவடிக்கையின் போது திமிங்கிலங்கள் முறையாகக் கையாளப்படவில்லை என்பதை அவற்றின் உடலில் இருந்த காயங்கள் காட்டுவதாக அவர் சொன்னார்.

மாண்டு போன ஏழு திங்கிலங்களில் ஆறு முறையாக அடக்கம் செய்யப்பட்டன. எஞ்சிய ஒன்றைக் கிராம மக்கள் தங்கள் உணவுக்காக வெட்டிக் கூறு போட்டு விட்டனர் என்று திரு. இக்ரம் சொன்னார்.

திமிங்கிலங்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் என்பதை ஆராய அவற்றின் உடலிலிருந்து ஒரு பகுதி வெட்டியெடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

2012 ஆம் ஆண்டு கிழக்கு நுஸா தெங்காராவின், மெனியா கிராமக் கடற்கரையில் நாற்பதுக்கும் அதிகமான திமிங்கிலங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.

நீரோட்டமும், அலை வீச்சும் கடுமையாக இருக்கும்போது பவளப் பாறைகளின் இடுக்குகளுக்குள் திமிங்கிலங்கள் எளிதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டு என்று திரு. இக்ரம் கூறினார்.  

Top