Images
  • Wolf Pack
    (படம்: Bernama)

சீஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கலவரத்தில் உயிரிழந்த தீயணைப்பாளரின் மரணத்திற்குப் பழிதீர்க்கத் திட்டமிட்ட கும்பலில் மேலும் மூவர் கைது


(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

மலேசியா: கிள்ளான் பள்ளத்தாக்கில் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐ.எஸ். தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த எஞ்சிய மூன்று நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சிலாங்கூர் சீஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடந்த கலவரத்தில் தீயணைப்பாளர் முகமது அதிப் முகமது காஸிம் மாண்டதற்குப் பழிதீர்க்க தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாக நம்பப்படும் 4 பேரைக் கைது செய்ததாக மலேசியக் காவல்துறை நேற்று தெரிவித்திருந்தது.

அக்குழுவைச் சேர்ந்த எஞ்சிய மூவரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரு 27 வயது ஆடவர்கள் கெடாவில் சரணடைந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

இந்தோனேசியரான மூன்றாம் நபர் சிலாங்கூரில் கைதுசெய்யப்பட்டார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலைக் கொண்டு அந்த 34 வயது ஆடவர் பிடிபட்டார்.

கும்பல் சில முக்கிய புள்ளிகளைப் படுகொலை செய்யவும் சமய வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் திட்டம் குறித்த செய்தியைத் தொடர்ந்து பத்துமலைக் கோவிலிலும் கோலாலம்பூரில் உள்ள மற்ற இரு இந்துக் கோவில்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
 

Top