Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'கம்பீரத் தோற்றம் பெண்ணுக்கும் பொருந்தும்' -உடல் கட்டழகியான மலேசிய இந்தியப் பெண்

அந்த எதிர்பார்ப்பை, சமுதாயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரையறுத்துள்ளது என்று கூறலாம்.

வாசிப்புநேரம் -

ஆண் என்றால் கம்பீரமாக, வலுவான தசைகளுடன் இருக்க வேண்டும்.

பெண் என்றால் நளினமாக இருக்க வேண்டும்.

அந்த எதிர்பார்ப்பை, சமுதாயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரையறுத்துள்ளது என்று கூறலாம்.

ஆனால், அதையெல்லாம் உடைத்துத் தள்ளிவிட்டு, உடல் கட்டழகியாக வேண்டும் என்று இறங்கியுள்ளார் மலேசியாவைச் சேர்ந்த தர்ஷினி.

உடல் கட்டழகர் போட்டியா? அதில் பெரும்பாலும் ஆண்கள் தானே கலந்துகொள்வார்கள் என்று சிலர் எண்ணலாம்.

உடல் கட்டழகுத் துறையில் பெண்களுக்கும் இடமுண்டு.

மேற்கத்திய நாடுகளில் பெண்கள் அந்தத் துறையில் வெகுவாக முன்னேறி வருகின்றனர்.

ஆனால், ஆசியாவைப் பொறுத்தவரைக் குறிப்பாக, இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் உடல் கட்டழகியாவது சவாலான ஒன்று.

எனினும், சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அந்தத் துறையில் கால்பதித்து வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் மலேசியாவின் கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த தர்ஷினி.

சிறுவயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் ஆர்வம் இருந்தாலும், தமக்குக் குடும்பத்தின் ஆதரவு குறைவே என்றார் அவர்.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி குடும்ப உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தர்ஷினி மெது ஓட்டத்தில் தொடர்ந்து கலந்துகொண்டார்.

அப்போது தான், தம் கணவர் உடல் கட்டழகுப் பயிற்றுவிப்பாளராகத் தமக்கு அறிமுகமானதாக அவர் குறிப்பிட்டார்.

தமது வெற்றிக்குப் பின்னால் இருப்பவர் தம் கணவர்தான் என அவர் புகழாரம் சூட்டுகிறார்.

அவர் உடல் கட்டழகு பயிற்றுவிப்பாளர். என்னை வெற்றியாளராக மாற்ற வேண்டும் என்பது அவரின் கனவு.


உடல் கட்டழகியாக நான் உருமாறுவதற்கு ஊக்கம் அளித்ததோடு, தொடர் பயிற்சியும் அளித்தார். அதன் காரணமாகத் தேசிய நிலையிலான போட்டியிலும் நான் கலந்து கொண்டேன்.

-  தர்ஷினி.


2019 Man of Steel போட்டியில் கலந்து கொண்டு 9ஆவது நிலை வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்ஷினி தற்போது ஆசியா மற்றும் உலகளாவிய போட்டிகளில் கலந்துகொள்ளத் தம்மைத் தயார்ப்படுத்தி வருகிறார்.

விடாமுயற்சி, தொலைநோக்குச் சிந்தனையோடு வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணமும் மனதில் இருந்தால் மட்டுமே இத்துறையில் வெற்றி பெற முடியும் என்கிறார் தர்ஷினி.


 உடல் கட்டழகர் என்பது மிகவும் கடுமையான துறை. மன உறுதி இருந்தால் மட்டுமே இதில் மிளிர முடியும்.


உணவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், உடற்பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அத்துடன், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கை இருந்தால், பெண்கள் இத்துறையில் முன்னேறலாம்


என்ற அறிவுரையையும் அவர் வழங்கினார்.

இயல்பு நிலை திரும்பிய பின்னர், உலக சாதனையை நோக்கிய தமது பயணம் தொடரும் என தர்ஷினி நம்பிக்கை தெரிவித்தார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்