Images
  • workers drink urine (1)

வேலையை ஒழுங்காகச் செய்யாத ஊழியர்களைச் சிறுநீர் குடிக்கவைத்த நிறுவனம்

சீனாவின் கட்டுமானப் புதுப்பிப்பு நிறுவனம் ஒன்று, குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கத் தவறிய ஊழியர்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதித்ததாகத் தெரியவந்துள்ளது.

சிறுநீரைக் குடிக்கச் செய்வது, கரப்பான் பூச்சிகளை உட்கொள்ள வைப்பது, மொட்டையடிப்பது என மனிதாபிமானமற்ற தண்டனைகளுக்கு அவர்களின் ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதுபோதாதென்று அவர்களை இடைவாரால் அடிப்பது, கழிப்பறைத் தண்ணீரைக் குடிக்கவைப்பது, சம்பளத்தை ஒருமாதம் கழித்துத் தருவது எனப் பலவிதமாக அந்த ஊழியர்கள் அவமதிக்கப்பட்டனர்.

முறையான காலணியும் அலுவலக ஆடையும் அணிந்து வராத ஊழியர்களுக்கு சுமார் 7 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.

மேலும், எல்லாத் தண்டனைகளுமே மற்றவர்களின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டதாக சீன ஊடகம் ஒன்று தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள், படங்கள் வாயிலாக அந்நிறுவனத்தின் கொடிய செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

அந்நிறுவனத்தின் மூன்று மேலாளர்களுக்கு 5இலிருந்து 10 நாட்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் யாரும் நடந்த சம்பவங்களை நினைத்து பெரிதாக வருத்தமோ சினமோ அடையவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதான் விதி என்ற மனப்போக்கில் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.

சீனாவில், மிகக் குறைந்த ஊதியத்தில் ஊழியர்கள் மிதமிஞ்சிய உடலுழைப்பை வழங்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் நீண்டகாலமாகக் குறைகூறி வருகின்றனர்.




  

Top