Back Home

செய்தியின் சமூக விருதுகள்:

‘தமிழ்ச்சுடர்’ எனும் செய்தியின் சமூக விருதுகள், மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவின் ஒரு புதிய முயற்சி. சமூகத்துடன் எங்களுக்கிருக்கும் பிணைப்பை வலுப்படுத்திக்கொள்ள இந்த முயற்சி உதவும் என்று நம்புகிறோம். எங்கள் இம்முயற்சியில் கல்வி அமைச்சின் சார்பில் இயங்கிவரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவானது இணைந்து செயல்படுகிறது.

நம் தமிழ்ச் சமூகத்திற்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துவரும் நல்லுள்ளம் படைத்தவர்களோடு பள்ளிகளையும் சமூக அமைப்புகளையும் குழுக்களையும் அங்கீகரிப்பதே இம்முயற்சியின் நோக்கம். சிங்கப்பூரில் தமிழ்மொழி, வாழும் மொழியாக நீடித்து நிலைத்திருப்பதற்கும் தழைத்து மேலோங்குவதற்கும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருபவர்கள் இவ்விருது நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படுவார்கள்.

கல்வி, கலை, மின்னிலக்கத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோர், இளம் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர் என்று மொத்தம் 5 பிரிவுகளில், 10 விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

சமூக மேம்பாட்டுக்குப் பங்களிப்போருக்கு இவ்விருதுகள் உந்துதலாக அமையும் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம். அவர்கள் சமூகத்துக்கு மேன்மேலும் பங்களித்து, சமூகத்திற்கு நல்ல முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும் என்பதே எங்கள் அவா.

உங்கள் குடும்ப உறுப்பினர், அண்டைவீட்டார், உடன் பணியாற்றுபவர், நண்பர், திறனாளர் எவரேனும் இவ்விருதுக்குத் தகுதிபெறுவார் என்று நீங்கள் எண்ணினால், அவரைத் ‘தமிழ்ச்சுடர்’விருதுக்கு உடனடியாக முன்மொழியுங்கள்.

நீங்களே விருதுக்குத் தகுதிபெறுவதாகக் கருதினாலும் விண்ணப்பிக்கலாம்.

பள்ளிகளும் அமைப்புகளும் குழுக்களும்கூட இவ்வழிமுறையைப் பின்பற்றலாம்.

  1. கல்வி (3 விருதுகள்)

    தகுதிக்கூறுகள்:

    1. தகுதிக் காலம் – 01.10.2015 முதல் 30.09.2017 வரை.
    2. தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மத்திய கல்வி நிலையம், சிறப்புத் தன்னாட்சிப் பள்ளிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    3. தமிழ் மொழிக் கற்றலுக்கும் வளர்ச்சிக்குமான முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
    4. தமிழ்மொழியின்பால் ஆர்வத்தையும் புத்துணர்வையும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சமூகத்தினருக்கும் ஏற்படுத்தும் முயற்சிகளாக அவை இருக்கவேண்டும்.
    5. இம்முயற்சிகள், குறைந்தது இரண்டாண்டுக்கு நடத்தப்பட்டிருக்க வேண்டும்

    இப்பிரிவில் வெற்றிபெறும் பள்ளிகள், அவற்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையைக்கொண்டு (தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவுடன் இணைந்து) தமிழ்மொழி மேம்பாட்டிற்கு ஒரு திட்டப்பணியை மேற்கொள்ளவேண்டும்.

  2. மின்னிலக்கத் தொழில்நுட்பம் :

    அ. தனிநபர்

    தகுதிக்கூறுகள்:

    1. தகுதிக் காலம் – 01.10.2015 முதல் 30.09.2017 வரை.
    2. முன்மொழியப்படும் நபர் சிங்கப்பூரராகவோ சிங்கப்பூர் நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.
    3. தமிழில் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசிய அளவிலான திட்டப்பணிகளை நிறைவேற்றியிருக்க வேண்டும்; மின்வழிக் கற்றலையும் வழிமுறைகளையும் ஊக்குவித்திருக்க வேண்டும்; அல்லது
    4. தமிழில் மின்னிலக்கத் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்;

    இப்பிரிவில் வெற்றிபெறும் நபர், அவருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையைக்கொண்டு, செய்தியின் மேற்பார்வையோடு, தமிழ்மொழி மேம்பாட்டிற்கு ஒரு திட்டப்பணியை மேற்கொள்ளவேண்டும்

    ஆ. குழு

    தகுதிக்கூறுகள்:

    1. தகுதிக் காலம் – 01.10.2015 முதல் 30.09.2017 வரை.
    2. குழு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பாக இருக்கவேண்டும். குழுவின் உறுப்பினர்கள் சிங்கப்பூரர்களாகவோ சிங்கப்பூர் நிரந்தரவாசிகளாகவோ இருக்க வேண்டும்.
    3. தமிழில் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசிய அளவிலான திட்டப்பணிகளை நிறைவேற்றியிருக்க வேண்டும்; மின்வழிக் கற்றலையும் வழிமுறைகளையும் ஊக்குவித்திருக்க வேண்டும்; அல்லது
    4. தமிழில் மின்னிலக்கத் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்;

    இப்பிரிவில் வெற்றிபெறும் குழு, அதற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையைக்கொண்டு, செய்தியின் மேற்பார்வையோடு, தமிழ்மொழி மேம்பாட்டிற்கு ஒரு திட்டப்பணியை மேற்கொள்ளவேண்டும்.

  3. கலை:

    அ. தனிநபர்:

    தகுதிக்கூறுகள்:

    1. தகுதிக் காலம் – 01.10.2015 முதல் 30.09.2017 வரை.
    2. முன்மொழியப்படும் நபர் சிங்கப்பூரராகவோ சிங்கப்பூர் நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.
    3. சிங்கப்பூரில் தமிழ்க் கலைத்துறைக்குப் பங்களித்திருக்க வேண்டும். (எடு: நடனம், பாடல், நாடகம், மேடைக்கலைகள்)
    4. அனைத்துலக அளவிலான கலை நிகழ்ச்சிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துத் தமிழ்ப் படைப்புகளை நிகழ்த்தியதற்காக, குறிப்பிடத்தக்க விருது/பட்டம்/அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

    இப்பிரிவில் வெற்றிபெறும் நபர், அவருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையைக்கொண்டு, செய்தியின் மேற்பார்வையோடு, தமிழ்மொழி மேம்பாட்டிற்கு ஒரு திட்டப்பணியை மேற்கொள்ளவேண்டும்.

    ஆ. குழு:

    தகுதிக்கூறுகள்:

    1. தகுதிக் காலம் – 01.10.2015 முதல் 30.09.2017 வரை.
    2. குழு, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பாக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் சிங்கப்பூரர்களாகவோ சிங்கப்பூர் நிரந்தரவாசிகளாகவோ இருக்க வேண்டும்
    3. சிங்கப்பூரில் தமிழ்க் கலைத்துறைக்குப் பங்களித்திருக்க வேண்டும். (எடு: நடனம், பாடல், நாடகம், மேடைக்கலைகள்) அல்லது
    4. அனைத்துலக அளவிலான கலை நிகழ்ச்சிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துத் தமிழ்ப் படைப்புகளை நிகழ்த்தியதற்காகக், குறிப்பிடத்தக்க விருது/பட்டம்/அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

    இப்பிரிவில் வெற்றிபெறும் குழு, அதற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையைக்கொண்டு, செய்தியின் மேற்பார்வையோடு, தமிழ்மொழி மேம்பாட்டிற்கு ஒரு திட்டப்பணியை மேற்கொள்ளவேண்டும்.

  4. இளம் சாதனையாளர் – 2 விருதுகள்

    தகுதிக்கூறுகள்:

    1. வயது: 19 முதல் 35 வரை. (31.10.2017 அன்று 35 வயதுக்கு மேற்படாமலும் 01.11.2015 அன்று 19 வயதுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்).
    2. முன்மொழியப்படும் இளையர் சிங்கப்பூரராகவோ சிங்கப்பூர் நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.
    3. தமிழ்மொழியின் மீது பேரார்வம் மிக்க முன்மாதிரி இளையராக இருக்க வேண்டும்.
    4. குழுக்கள்/அமைப்புகளுடன் இணைந்து தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
    5. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்தை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளுக்கு நேரத்தையும், உழைப்பையும் அர்ப்பணித்திருக்க வேண்டும்.
    6. இம்முயற்சிகளில், குறைந்து இரண்டாண்டுக்குப் பங்களித்திருக்க வேண்டும்.

    இப்பிரிவில் வெற்றிபெறும் நபர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையைக்கொண்டு (தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவுடன் இணைந்து) தமிழ்மொழி மேம்பாட்டிற்கு ஒரு திட்டப்பணியை மேற்கொள்ளவேண்டும்.

  5. வாழ்நாள் சாதனையாளர்:

    தகுதிக்கூறுகள்:

    1. வயது: 60 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும். (31.10.2017 அன்றோ அதற்கு முன்போ).
    2. முன்மொழியப்படும் நபர் சிங்கப்பூரராகவோ சிங்கப்பூர் நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.
    3. சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்கோ, தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்கோ நிறைவான தொண்டாற்றியிருக்க வேண்டும்; மொழி-இலக்கியம், கல்வி, கலை, ஊடகம் ஆகிய ஏதாவது ஒரு துறையில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தவராக இருத்தல் வேண்டும்; சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவராக அல்லது வகிப்பவராக இருக்க வேண்டும். சிங்கப்பூரிலோ, வெளிநாட்டிலோ தமிழ் மேம்பாட்டுக்காகப் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தால் கூடுதல் சிறப்பு. இந்தப் பிரிவின் தனித்தன்மை காரணமாக நியமனங்களை, நடுவர் குழு, அவற்றின் சிறப்புத் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கும்.

தகுதிபெறும் நபர்களுக்குத் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி மேல் விவரங்கள் தெரிவிக்கப்படும்.
Top