Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

காக்கிச் சீருடையில் வந்து கைவரிசை காட்டிய மின்மாற்றித் திருடர்கள்!

காக்கிச் சட்டை என்றால், இந்தியாவில் மரியாதையே தனி..ஆனால் அந்த மரியாதையால் ஒரு கிராமமே இருளில் மூழ்கித் தவிக்கிறது.

வாசிப்புநேரம் -

காக்கிச் சட்டை என்றால், இந்தியாவில் மரியாதையே தனி..

ஆனால் அந்த மரியாதையால் ஒரு கிராமமே இருளில் மூழ்கித் தவிக்கிறது.

மகாராஷ்ட்ர மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில், காக்கிச் சீருடையில் வந்த திருடர்கள், பாரந்தூக்கி மூலம் ஒரு பெரிய மின்மாற்றியைத் (டிரான்ஸ்ஃபார்மர்)திருடிப் போயிருக்கிறார்கள். மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த மின்மாற்றியால் உயிரே போகுமென்பது தெரிந்த திருடர்கள், முன்கூட்டியே மின்னிணைப்பைத் துண்டித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை, பெரிய பாரந்தூக்கி மூலம் மின்மாற்றியை ஒரு வாகனத்தில் வைத்தனர். அதைப் பார்த்த கிராமவாசிகள் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, புதிய மின்மாற்றி வருகிறது. அதனால் பழையதை எடுத்துப் போகிறோம் என்றனர் திருடர்கள்.

மின்வாரிய ஊழியர்கள் உடுத்தும் காக்கிச் சீருடையில் திருடர்கள் இருந்ததால், கிராமவாசிகளுக்குச் சந்தேகம் வரவில்லை. இரவானதும், இன்னமும் ஏன் புதிய மின்மாற்றி வரவில்லை என்று மின்வாரியத்தை அழைத்துக் கேட்டபோதுதான், திருடர்களின் கைங்கர்யம் வெளிச்சத்துக்கு வந்தது. 

புதிய மின்மாற்றிக்கு 2 லட்ச ரூபாய் வேண்டும். பழைய மின்மாற்றிகள், பழைய இரும்புக் கடையில் நல்ல விலைக்குப் போகுமாம். கன்னத்தில் கைவைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் கிராமவாசிகள். உண்மையான காக்கிச் சட்டைப் போலிஸ்காரர்களிடம் புகார் போயிருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்