Images
  • pongal 1
    (படம்: மோகன் ராஜ்)
  • pongal 2
    (படம்: மோகன் ராஜ்)

சிங்கப்பூரில் களைகட்டும் பொங்கல் திருநாள்

தமிழர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் பொங்கலும் ஒன்று. தமிழர்த் திருநாள் என்றும் உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது பொங்கல் பண்டிகை.

சிங்கப்பூரில் தமிழர்களுடன் பிற இனத்தனவரும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதை நாம் பார்க்க முடிகிறது. நமது அமைச்சர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து, சிங்கப்பூரில் உள்ள இன நல்லிணக்கத்திற்கு வலுச் சேர்க்கின்றனர்.

கம்பத்துச் சூழல் இல்லாதபோதும் களிப்பிற்குப் பஞ்சம் இல்லை என்று சொல்லும் அளவிற்குப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிங்கப்பூரில் விமரிசையாக நடைபெறுகின்றன.

அண்மை ஆண்டுகளாக லிட்டில் இந்தியா வட்டாரம் பொங்கல் உணர்வைப் பறைசாற்றும் வகையில் ஒளியூட்டப்பட்டு சிங்கப்பூரர்களையும் சுற்றுப்பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. பொங்கலுக்குத் தேவையான பொருட்களையும், வண்ணப் பானைகள், கரும்பு, தோரணங்கள் போன்ற பொருட்களையும் லிட்டில் இந்தியா வட்டாரக் கடைகளிலிருந்து மக்கள் எளிதாக வாங்கிச் செல்ல முடிகிறது.

புக்கிட் பாஞ்சாங் போன்ற குடியிருப்புப் பேட்டைகளிலும் பொங்கல் திருநாள் ஆண்டுதோறும் குதூகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. மாட்டு வண்டி குடியிருப்புப் பேட்டையை வலம் வரும் அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

சமய வேறுபாடுகளைக் கடந்து பொங்கல் திருநாள், தமிழர் என்ற ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு பொங்கல் திருநாள், வார இறுதியில் வருவதால் பலருக்கு இரட்டிப்புக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. நமது பண்பாட்டு விழுமியங்களைப் பிள்ளைகளிடையே வேரூன்றச் செய்ய இது போன்ற பண்டிகைகள் ஒரு நல்ல தளமாக அமைகின்றன. 

Top