Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிறந்த குழந்தையின் உடல்நலனைக் கணிக்கும் சோதனைமுறை; கண்டுபிடித்த மருத்துவரின் பிறந்தநாள் இன்று

1960களில் அமெரிக்க மருத்துவமனைகளில் பரவலான சோதனை முறை இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. 

வாசிப்புநேரம் -
பிறந்த குழந்தையின் உடல்நலனைக் கணிக்கும் சோதனைமுறை; கண்டுபிடித்த மருத்துவரின் பிறந்தநாள் இன்று

(படம்:Google)

கூகள் இன்று அமெரிக்க டாக்டர் வர்ஜீனியா அப்கரின் 109ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அதன் தேடுதளப் படத்தை அமைத்துள்ளது.

1930களிலும் 1940களிலும் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளிடையே மரணவிகிதம் குறையாமல் இருந்தது.

குழந்தை பிறந்து 24 மணி நேரத்தில் மாண்டுபோவதைக் கவனித்த டாக்டர் அப்கர் பிரச்சினை என்னவாக இருக்கலாம் எனச் சிந்திக்கத் தொடங்கினார்.

மகப்பேறு மற்றும் சிகிச்சைக்காக மயக்க மருந்து அளிக்கும் பணிகளை மேற்கொண்டுவந்த டாக்டர் அப்கர், உடல்நலப் பிரச்சினையோடு பிறந்த குழந்தைகளை அடையாளங்கண்டார்.

உடல் ஆரோக்கியத்தோடு பிறக்கும் குழந்தைகளுக்கும் பிரச்சினையுள்ள குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அவரால் கணிக்க முடிந்தது.

1952ஆம் ஆண்டு அவர் "அப்கர் மதிப்பீட்டுச் சோதனை" எனும் முறையைக் கண்டுபிடித்தார்.

பிறந்த குழந்தைகளின் உடல்நலனைச் சோதிக்க அந்த எளிய முறை வெகுவாகக் கைகொடுத்ததாகப் பாராட்டப்பட்டது.

குழந்தை பிறந்த முதல் ஐந்து நிமிடங்களுக்குள் அந்தச் சோதனை வழக்கமாகச் செய்யப்படும்.

குழந்தையின் தோற்றம், நாடித்துடிப்பு, அசைவுகள், மூச்சுவிடல் போன்றவை கண்காணிக்கப்படும்.

ஏழு அல்லது அதற்கும் மேல் மதிப்பெண் வழங்கப்பட்டால் குழந்தைக்குப் பொதுவாகச் சுகாதாரப் பிரச்சினைகள் இல்லை என்று நிர்ணயிக்கப்படும்.

மூன்றுக்கும் கீழ் மதிப்பெண் வழங்கப்பட்டால் குழந்தையின் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் இருப்பதாகக் கருதப்படும்.

பிறந்த குழந்தைக்கான மருத்துவப் பராமரிப்பைக் கணிக்க சோதனை முறை அதிகம் உதவியது.

1960களில் அமெரிக்க மருத்துவமனைகளில் பரவலான சோதனை முறை இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.

1949இல் முதல் பெண் மருத்துவத் துறை சார்ந்த பேராசிரியரான பெருமையும் டாக்டர் அப்கரைச் சேரும்.

1959ஆம் ஆண்டில் பிறப்புக் குறைபாடுகளைத் தவிர்க்கவும் சிகிச்சை அளிக்கவும் உதவும் ஆய்வை வழிநடத்தினார் அவர்.

60க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார் டாக்டர் அப்கர்.

1974ஆம் ஆண்டில் 65 வயதில் அவர் காலமானார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்