Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாம் பயன்படுத்தும் தொலைபேசிகள், கணினிகள், இணையத்தளங்கள் நம்மை வேவு பார்க்கின்றனவா?

ஒரு பொருளையோ இடத்தையோ இணையத்தளங்களில் தேடினால், அது தொடர்பான விளம்பரங்கள் அடிக்கடி திறன்பேசி, கணினிகளில் உங்களுக்கு வருகின்றனவா?

வாசிப்புநேரம் -

ஒரு பொருளையோ இடத்தையோ இணையத்தளங்களில் தேடினால், அது தொடர்பான விளம்பரங்கள் அடிக்கடி திறன்பேசி, கணினிகளில் உங்களுக்கு வருகின்றனவா?

(படம்: rawpixel/Unsplash)

ஒரு குறிப்பிட்ட பொருள்பற்றி பேசிக் கொண்டிருந்தால், உடனடியாக அது தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல்களாகவோ குறுஞ்செய்தியாகவோ உங்களுக்கு வருகின்றனவா ?

என்ன காரணம்...?

நாம் பேசுவதை யாரேனும் ஒட்டுக் கேட்கிறார்களா? நம் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறதா? தனிமனித சுதந்தரம் பாதிக்கப்படுகிறதா?

இவற்றுக்கெல்லாம் பதில் தருகிறார் Accenture நிறுவனத்தில் மூத்த இணையப் பாதுகாப்பு மேலாளராகப் பணிபுரியம் திரு.
கணேஷ் நாராயணன்.

இணையத்தில் ஒரு பொருளைத் தேடினால் ஏன் அது அடிக்கடி நமக்கு விளம்பரமாக வருகிறது ?

நாம் பொதுவாக Google Chrome, Mozilla Firefox போன்ற இணையத் தேடல் மென்பொருளைத் திறன்பேசி, கணினியில் பதிவிறக்கம் செய்திருப்போம்.

அப்போது மென்பொருளைப் பயன்படுத்த விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உடன்பட்டுச் செயல்பட ஒப்புக்கொண்டிருப்போம்.

அந்த விதிமுறைகளில், நாம் இணையத்தில் தேடும் எல்லாவிதமான தகவல்களும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு சேகரிக்கப்படும் என்பது விளக்கப்பட்டிருக்கும்.

அதையெல்லாம் நிதானமாகப் படித்துப் பார்க்காமல், Accept பொத்தானை ஒரே அமுக்காக அமுக்கியிருப்போம்.

அந்த ஒப்புதல் மூலம், நாம் இணையத்தில் செய்யும் எல்லாவிதத் தேடல் நடவடிக்கைகளையும், மென்பொருள் உரிமையாளர்கள் மூன்றாம் தரப்பு வர்த்தக நிறுவனங்களிடன் விற்க நாமே அனுமதி தருகிறோம்.

வர்த்தகர்கள், நாம் இணையத்தில் என்னென்ன செய்தோம் என்பதை அறிந்து, அவற்றுக்குப் பொருத்தமான விளம்பரங்களை, நம் கண் முன் அடிக்கடி தென்படுமாறு கொண்டுவருவர்.

அதுபோக Apple திறன்பேசியில் உள்ள SIRI, கூகளின் Alexa போன்ற மென்பொருள்கள், நமது குரலை அடையாளம் கண்டு நாம் பேசும் வார்த்தைகளில் முக்கியமானவற்றை சேகரிக்கத்தொடங்கும்.

அவை, பின்னர் விளம்பரங்களாக மின்னஞ்சல்களிலும் குறுஞ்செய்திகளிலும் வரும்.

செயலிகள் நம்மை வேவு பார்க்கின்றனவா ?

எல்லாச் செயலிகளிலும் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கமுடியாது.

எடுத்துக்காட்டாக, நாம் ஒரு விளையாட்டுச் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது அது நமது கேமரா, படங்கள், வரைபடம், ஒலிபெருக்கி போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். நாம் அதற்கு ஒப்புதல் கொடுத்தால், செயலிகள் எளிதாக அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கும்.

அது ஊடுருவிகளுக்கு, நமது தகவல்களைத் திருட நாமே அனுமதியளித்தாற்போல் ஆகும்.

அதனால் நமது அந்தரங்கத் தகவல்கள் ஊடுருவப்படும் அபாயம் அதிகம்.

தனிநபர் சுதந்தரம் பாதிக்கப்படுகிறதா ?

திறன்பேசி, இணையத்தளம்-இவை இல்லாமல் இனிமேல் வேலை செய்வது மிக அரிது. அதனால், நாம் கவனமாக நமக்கு வேண்டியதை மட்டும் இணையத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தனிநபர் தகவல்களை எந்த ஒரு நம்பகத்தன்மை இல்லாத இடத்திலும், சமூக ஊடகங்களிலும் பதிவேற்ற வேண்டாம்.

செயலிகளில் வேலை முடிந்தால், அவற்றை முறையாக மூடவும்.

இதை எல்லாம் எப்படித் தவிர்க்கலாம்?

  • நம்பகத்தன்மை கொண்ட செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள், பயன்படுத்துங்கள்.
  • செயலிகளுக்கான விதிமுறைகளை கவனமாகப் படித்துப் பாருங்கள்.
  • பொது இடங்களில் உள்ள WIFI மூலம் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
  • முடிந்தவரை முக்கியமான செயலிகளுக்கு 2FA அல்லது OTP என்னும் பாதுகாப்பு அம்சத்தை நிறுவிக்கொள்ளலாம்.
  • இணையத்தில் உள்ள Browsing history எனும் தேடல் வரலாறு, Cookie, Cache போன்றவற்றை அவ்வப்போது அழிப்பது நல்லது.

இணையத்தளங்களில் தினமும் ஊடுருவல் நடப்பதால், நமது தகவல்களை நாம்தான் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.

அதனால், முடிந்தவரை கவனமாக இருப்பது நல்லது என்று ஆலோசனை கூறினார் திரு. கணேஷ்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்