Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உணவுப் பிரியரா? ஆசையை அடக்குவது எப்படி? (காணொளி)

பசி கொண்ட நேரம்... தாளிக்கும் சத்தம் சங்கீதம்.... சிலருக்கு. ஆனால் வேறு சிலருக்கு பசி என்றில்லாவிட்டாலும் ருசிக்காக ஏதையாவது கொறிக்கத் தோன்றும்.

வாசிப்புநேரம் -

பசி கொண்ட நேரம்... தாளிக்கும் சத்தம் சங்கீதம்.... சிலருக்கு.

ஆனால் வேறு சிலருக்கு பசி என்றில்லாவிட்டாலும் ருசிக்காக ஏதையாவது கொறிக்கத் தோன்றும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வைராக்கியமாகப் பின்பற்றுபவராக இருப்பார்;
எண்ணெயில் ஏதோ பொரிக்கப்படும் வாசனை எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்து நாசியைத் துளைக்கும். அவ்வளவுதான்! வைராக்கியமெல்லாம் தூள்தூளாகிவிடும். வாய் 'நமநமக்கத்' தொடங்கிவிடும்.

கண்ணாடிக் குடுவைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் 'மொறுமொறு' பதார்த்தங்கள் 'எடுத்துக்கொள்' என்று அழைப்பதுபோலத் தோன்றும்.

அவ்வளவு ஏன்?

பிஸ்கெட் அல்லது தின்பண்டப் பொட்டலங்களைக் கசக்கும் சத்தம் கேட்டால் கூட சிலருக்கு உடனே ஏதையாவது மெல்லத் தோன்றுமாம்.

இத்தகைய பழக்கங்களுக்கும் நம் நினைவாற்றலுக்கும் தொடர்பிருக்கிறதாம். நமக்குப் பிடித்தமான உணவை உண்ணும்போது நாம் அதை ஆக்கபூர்வமாக நினைவில் பதித்துக்கொள்வதாய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உணவின் சுவை, மணம், அதை உண்ணும்போது ஏற்படும் திருப்தி எல்லாவற்றையும் சேர்த்தே நம் நினைவில் பதித்துக்கொள்கிறோம்.

பின்னர் அந்த வாசனை, இடம் போன்றவற்றால் நமக்கு அதனை மீண்டும் உண்ண ஆசை வருமாம்.

ஏன் அதிகமாக உண்கிறோம்?

வெவ்வேறு வகை உணவு பற்றிய ஆசையை, மூளையின் வெவ்வேறு பகுதிகள் பதித்துக்கொள்கின்றன. வாய்ப்புக் கிடைக்கும்போது அதுகுறித்த ஆசையைத் தூண்டிவிடுகின்றன.

நம் உணர்வுகளுக்கும் அதில் பெரும்பங்குண்டு.

மனஉளைச்சல், வெறுமை, கவலை, பகல் தூக்கம், போதிய தூக்கமின்மை இவையெல்லாம் ஒருவரை அதீத உணவுப் பிரியர்களாக்கிவிடுகின்றன.

எப்படித் தடுக்கலாம்?

* அதிகம் தண்ணீர் குடித்தல்

ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் அரை லிட்டர் தண்ணீரைப் பருகலாம்

* பிடித்த உணவைப் பலமுறை உண்பதாய்க் கற்பனை செய்தல்

அடிக்கடி அவ்வாறு செய்வதால் அந்த உணவின் மீதான அதீத விருப்பம் குறையுமாம்.

* உடற்பயிற்சி

சிறிதுநேர உடற்பயிற்சியால் சாக்லெட் மீதான ஆசையைக் குறைக்கமுடியுமாம்.

* கவனத்தைத் திருப்புதல்

மனஉளைச்சல், கவலை, வெறுமையுணர்வு தோன்றும்போதெல்லாம் சட்டென்று பூங்கா போன்ற கூட்டமான இடங்களில் சிறிதுநேரம் உலாவப் போகலாம்; நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்; நல்ல குளியல் போடலாம்.

அதிகத் தீனியால் ஏற்படும் கெடுதலின் அளவைவிட இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் நன்மையின் அளவு கூடுதல் என்கிறார்கள் அனுபவசாலிகள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்