Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடற்பயிற்சி செய்வதால் அதிகப் புத்தாக்க எண்ணங்கள் மலருமா?

அடிக்கடி உடற்பயிற்சி செய்தால், ஆக்கப்பூர்வச் சிந்தனாசக்தியை அதிகரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
உடற்பயிற்சி செய்வதால் அதிகப் புத்தாக்க எண்ணங்கள் மலருமா?

(படம்: Pixabay)

அடிக்கடி உடற்பயிற்சி செய்தால், ஆக்கப்பூர்வச் சிந்தனாசக்தியை அதிகரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

அது குறித்து The New York Times நாளேடு செய்தி வெளியிட்டது.

உடல் இயக்கத்திற்கும் கற்பனைத் திறனுக்கும் இடையிலான சம்பந்தம் குறித்துப் புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

உட்கார்ந்திருப்பவர்களைக் காட்டிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் புத்தாக்கத் திறன் சோதனைகளின்போது, சிறந்த யோசனைகளைக் கண்டுபிடிப்பதாக ஆய்வு கூறுகிறது.

உடற்பயிற்சி, நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பாதிக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் ஏற்கனவே ஏராளம் உள்ளன.

மனிதர்களிடமும் விலங்குகளிடமும் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம், உடற்பயிற்சி செய்யும்போது மூளைக்குக் கூடுதல் ரத்த ஓட்டம், உயிர்வாயு, ஊட்டச்சத்துக்கள் சென்றடைகின்றன என்று கண்டறியப்பட்டது.

Scientific Reports-இல் வெளியான அந்தப் புதிய ஆய்வு, ஆஸ்திரியாவின் கிராஸ் பல்கலைக்கழக (University of Graz) ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாக The New York Times தெரிவித்தது.

சராசரி நபர்களின் இயல்பான செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் அவர்களின் படைப்பாற்றலை அளவிடவும் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

ஐந்து நாள்களுக்கு ஆரோக்கியமான 79 பேர் கண்காணிக்கப்பட்டனர்.

அவர்களின் கற்பனைத்திறனும் வெவ்வேறு சோதனைகள் மூலம் அளவிடப்பட்டது.

மிகவும் சுறுசுறுப்பானவர்கள் தான் மிகவும் ஆக்கபூர்வமானவர்கள் என்று ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்தது.

குறிப்பாக அடிக்கடி நடப்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிகப் படைப்பாற்றல் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புகள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கும் படைப்பாற்றலுக்கும் இடையிலான தொடர்பைச் சுட்டிக்காட்டுவதாக கிராஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் கிறிஸ்டியன் ரோமிங்கர் (Christian Rominger) கூறுகிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்