Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? இது உங்களுக்கு!

வீட்டில் இருந்து வேலை செய்யத் தொடங்கியபிறகு, சிலரது உடல் எடை அதிகரித்திருக்கக்கூடும்.

வாசிப்புநேரம் -
உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? இது உங்களுக்கு!

(படம்: Unsplash/rawpixel)

வீட்டில் இருந்து வேலை செய்யத் தொடங்கியபிறகு, சிலரது உடல் எடை அதிகரித்திருக்கக்கூடும்.

பொதுவான நடமாட்டம் குறைவது அதற்கான காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Iowa State பல்கலைக் கழகம், Trinity College Dublin பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, நடமாட்டக் கட்டுப்பாடு தொடங்கியதிலிருந்து, நடமாட்டம் 32 விழுக்காடு குறைந்ததாகத் தெரியவந்தது.

வீட்டில் இருந்தே வேலை பார்த்தாலும் பலர் தஙக்ளைப் பரபரப்பாகவே வைத்துக்கொள்கின்றனர். தங்களது வேலையைத் தாங்களே செய்து கொள்கின்றனர்.

கொதிகலனில் வெந்நீர் வைப்பது, துணி துவைத்துக் காயப்போடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது-ஆகியவற்றில் பங்கேற்றுச் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

எந்த வேலையுமே செய்யாமல், நாற்காலியே கதியென்று இருப்பவர்களும் உண்டு.

அப்படிப்பட்டவர்கள், நேரத்தைச் செலவிடாமல், அன்றாட வேலைகளுக்கு இடையே, சில எளிய பயிற்சிகளைச் செய்து பலன்பெறலாம்.

காத்திருக்கும்போது...

உணவைச் சூடுகாட்டுவது, வெந்நீர் வைப்பது போன்றவற்றுக்குக் காத்திருக்கும்போது, 10 முறை இந்தப் பயிற்சிகளில் ஈடுபடலாம்.

  • சமையலறை மேசையின் ஓரத்தில் கைகளை வைத்து, கால்களைப் பின்னால் வைத்து push-up செய்யலாம். முதுகை நேராக வைத்து வயிற்றின் தசைகளை இறுக்கிக் கொள்ளவும்.
  • இரு கைகளிலும் தண்ணீர் நிரம்பிய போத்தலைப் பிடித்துக் கொள்ளவும். பின்னர் மூட்டுகளை மடக்கி அமர்வதைப் போல squat செய்யவும். கைகளில் உள்ள போத்தலைக் கால்களுக்கு இடையில் இறக்கவும். பின்னர் மீண்டும் எழுந்து நிற்கவும்.

பல் துலக்கும்போது...

பற்களைத் துலக்கிக்கொண்டே squat எனும் அமர்வதைப் போன்ற பயிற்சியைச் செய்யலாம். அல்லது டென்னிஸ் பந்தைப் போன்ற சிறிய பந்தைப் பாதத்திற்குக்கீழ் வைத்து தசைகளுக்குப் பயிற்சி தரலாம்.

தரையைச் சுத்தம் செய்யும்போது...

தரையைத் துடைக்கும்போது அல்லது Vaccuum Cleaner எனப்படும் தூசு உறிஞ்சியைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யும்போது ஒரு காலை முன்னால் வைத்து மூட்டை மடக்கவும். அவ்வாறு செய்யும்போது பின்னால் உள்ள காலை மடக்கி கீழே இறக்கவும். அதே நேரத்தில் முதுகை நேராக வைத்து வயிற்றில் தசைகளை இறுக்கிக் கொள்ளவும். பின்னர் மீண்டும் எழவும்.

தட்டு கழுவும்போது...

தட்டுகளைக் கழுவும் போது குதிகாலை உயர்த்தி அவ்வாறு சற்று நேரம் நின்று, காலில் உள்ள தசைகளை இறுக்கவும். பின்னர் குதிகாலை இறக்கி மீண்டும் உயர்த்தவும்.

பேசும்போது நடக்கலாம்...

தொலைபேசியில் பேசும்போது, அமர்ந்திருக்காமல் வீட்டிலேயே நடக்கலாம். அவ்வப்போது நடையின் வேகத்தையும் அதிகரிக்கலாம். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அதிக அடிகள் எடுத்துவைத்துக் கணிசமான கலோரிகளை இதில் கரைக்கமுடியும்.

சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா ? 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்