Images
  • travel

வெளிநாட்டுப் பயணத்திற்கு எடுத்த காப்புறுதி ... பொருத்தமானதா?

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களில் 90 விழுக்காட்டினர் காப்புறுதி பெற்றுக்கொள்கின்றனர்.

அதுவே சிறந்த தெரிவு என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால், பயணக் காப்புறுதி வாங்குவது மட்டும் போதாது.
அது பொருத்தமான ஒன்றாக இருப்பதும் மிக முக்கியம்.

விமானங்கள் தாமதமடைவது, பயணப் பைகள் காணாமற்போவது, மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுவது, பயங்கரவாதத் தாக்குதலால் பயணம் பாதிக்கப்படுவது போன்ற பலவற்றுக்குக் காப்புறுதி கைகொடுக்கும்.

வாங்கிய காப்புறுதித் திட்டத்துக்கு ஏற்ப இழப்பீடும் வழங்கப்படும்.

இப்போது இழப்பீட்டை மேலும் விரைவில் பெற்றுக்கொள்ள தொழில்நுட்பமும் உதவுகிறது.

ஆகக் குறைவான கட்டணத்தில் காப்புறுதித் திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பதில், மிகப் பொருத்தமானதைப் பெற்றுக்கொள்வதே சாமர்த்தியமானது.

பயணக் காப்புறுதித் திட்டங்களைத் தெரிவுசெய்யும்போது, இணையத்தில் அவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

வெவ்வேறு காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, மிகப் பொருத்தமானதைத் தெரிவுசெய்வது சிறந்தது.

நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தின்போது என்ன செய்யப் போகிறீர்கள் என்பது உங்கள் காப்புறுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கயிற்றைக் கட்டிக்கொண்டு உயரத்திலிருந்து குதிக்கும் bungee jumping, கடலில் முக்குளித்தல், வெப்பக் காற்று பலூனில் பறத்தல்-போன்ற ஆபத்து அதிகமுள்ள சாகசங்களை மேற்கொள்வதாக இருந்தால் அதைக் காப்புறுதி நிறுவனத்துக்கு முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம்.

சாதாரணக் காப்புறுதியில் இத்தகைய சாகசச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

விலைமதிப்பு மிக்க பொருள்களை எடுத்துச் சென்றால் அவற்றைப் பற்றியும் காப்புறுதி நிறுவனத்துக்குத் தெரிவிப்பது நல்லது.

பேரிடர்கள், அசம்பாவிதங்கள், விபத்துகள் எப்போது நேரும் என்பதை நம்மால் ஒருபோதும் கணிக்கமுடியாது.

ஆகையால், பயணத்துக்கான முறையான, சரியான காப்புறுதித் திட்டத்தைக் கொண்டிருப்பது, நமக்கும் நமது அன்புக்குரியவர்களுக்கும் மனநிம்மதியை வழங்கும். 

Top