Images
  • left hander

இடதுகைப் பழக்கம் கொண்டோர் - சுவாரஸ்யத் தகவல்கள், சந்திக்கும் சவால்கள்

இன்று உலக இடதுகைப் பழக்கமுடையோர் தினம்.

உலக மக்கள்தொகையில் சுமார் 10 விழுக்காட்டினர் மட்டுமே இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள். நெதர்லந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இந்தப் பழக்கம் கொண்டவர்கள் சுமார் 13 விழுக்காட்டினர்.

இடதுகைப் பழக்கம் உடையவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 1976ஆம் ஆண்டு, டீன் கேம்பெல் (Dean Campbell) என்பவர் இந்த நாளை அனுசரிக்க முடிவு செய்தார்.


(கோப்புப் படம்: AFP/Philippe Huguen)

ஒரு குழந்தை கருவில் 9-10 வாரங்களுக்கு இடையில் கைகளை அசைக்கத் தொடங்குமாம். விரலை வாய்க்குக் கொண்டு செல்லும் போது அது இடதுகைப் பழக்கம் கொண்டதா, வலதுகைப் பழக்கம் கொண்டதா என்பது நிர்ணயிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் ஒரு பிள்ளைக்கு 2 அல்லது 3 வயதாகும் வரை பழக்கத்தை உறுதியாகச் சொல்ல முடியாது.

அதை முடிவுசெய்ய முடியாமல் சிரமப்பட்டதாக 'செய்தி'-இடம் பேசிய சில பெற்றோர் கூறினர்.

இடது கையைப் பயன்படுத்துவதையே தமது மகள் விரும்பியதை மெல்ல மெல்ல அறிந்ததாகச் சொன்னார், திருமதி சல்மா.

முதலில் சற்று வலுக்கட்டாயமாகப் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்தோம். ஆனால் பேசத் தொடங்கியதும் என் மகள் தனக்கு சிரமமாக இருப்பதைச் சொன்னார். பின் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டோம்.

என்றார்.

மருத்துவச் செயல்முறைகளைக் கற்றுக்கொண்டபோது சில சவால்கள் இருந்ததாகச் சொன்னார், இளம் மருத்துவர் அஷ்வின் சிங்காரம்.


(படம்: AFP)

தையல் போடுவது, ரத்தம் எடுப்பது போன்றவை வலதுகைப் பழக்கம் கொண்டோரின் பார்வையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் நாங்களும் வலது கையைப் பயன்படுத்தவேண்டும் அல்லது இடது கையால் எப்படிச் செய்வது என்று நாங்களே கண்டுபிடித்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்தியக் குடும்பங்களில் சில கலாசார, சமயம் சார்ந்த வழக்கங்களுக்கு இடது கையைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.


(படம்: மக்கள் கழகம் காணொளி)

இந்தியப் பண்டிகைகள், சமயச் சடங்குகளில் கலந்துகொள்ளும்போது எனது தாயாரும், பாட்டியும் அதைத் தொடர்ந்து நினைவூட்டுவார்கள். முதலில் மிகவும் சிரமமாக இருந்தது. பின் பழகிவிட்டது

என்று தமது Facebook பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் திரு. மணியம்.


நம்மில் பலர் அறிந்திராத சில தகவல்களையும் இவர்கள் பகிர்ந்துகொண்டனர்...

  • இவர்கள் பெரும்பாலும் ஓரமாக உள்ள இடத்தில் உட்கார விரும்புவர்.
  • வலதுகைப் பழக்கம் உடையவர்களை இடித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர்.
  • இவர்களுக்கென கத்தரிக்கோல், அளவிடும் கருவிகள் விற்கும் தனிப்பட்ட கடைகள் உள்ளன.
  • இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வண்ணம் தீட்டுவதில் ஆர்வம் இருக்கும்.
  • சிறு பிள்ளைகளாக இருக்கும்போது இவர்களுக்கு எழுதச் சொல்லிக் கொடுக்க பெற்றோர் மிகவும் சிரமப்படுவர்.
  • கித்தார், வயலின், சிதார் போன்ற இசைக் கருவிகளை வலதுகைப் பழக்கம் கொண்டோரிடமிருந்து கற்றுக்கொள்வது இவர்களுக்குச் சிரமமாக இருக்கும்.
  • இடது கையால் கொடுப்பது, கை குலுக்குவது போன்ற இவர்களது பழக்கங்களைச் சிலர் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.

பழக்கங்களை வலுக்கட்டாயமாக மாற்றுவது தவறு என்றார் Tayka Medical Family Clinic மருத்துவர் கண்ணன்.


ஒருவரின் கைப் பழக்கம் மூளையுடன் தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பிள்ளையை வலுக்கட்டாயமாக மாற்றும்போது, அவர் இருகைப் பழக்கமுடையவராகலாம். அது பெற்றோர்-பிள்ளை உறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இது கோளாறோ, பிரச்சினையோ அல்ல என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டும்.

இவர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

ஏற்றுக்கொள்வதும், மாற்றிக்கொள்வதும் மனித வாழ்க்கையில் இன்றியமையாதது. அதை இயற்கையாக வளர்த்துக்கொள்ள இந்தப் பழக்கம் உதவியதாகக் கூறுகின்றனர் இடதுகைப் பழக்கம் கொண்டோர்.  

Top