Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிறருடன் பேசும்போது எதைத் தவிர்க்கவேண்டும்...?

நாம் பிறருடன் பேசும்போது அவர்களது உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அதோடு, அவர்களைப் புண்படுத்தாத வகையில் நடந்துகொள்ளவேண்டும்.

வாசிப்புநேரம் -

நாம் பிறருடன் பேசும்போது அவர்களது உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அதோடு, அவர்களைப் புண்படுத்தாத வகையில் நடந்துகொள்ளவேண்டும். 

பிறரிடம் பேசும்போது நாம் மரியாதை காட்டினால், அவர்கள் நம்மோடு விரும்பிப் பேசுவர், நம்மையும் மதித்து நடந்துகொள்வர்.

பிறருடன் பேசும்போது நாம் சிலவற்றைத் தவிர்க்கவேண்டும்.


பிறர் நம்முடன் பேசும்போது, நாம் எவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டும்?


  • குறுக்கிட்டுப் பேசுவது

பிறர் பேசும்போது இடையில் பேசினால் அவர்களது சிந்தனையோட்டம் துண்டிக்கப்படலாம். அதனால் பேச்சு, திசை மாறலாம். தமது பேச்சின் முடிவில் முத்தாய்ப்பாக ஒருவர் நல்ல கருத்தை, ஆலோசனையைச் சொல்ல எண்ணியிருந்தால் அதற்கான வாய்ப்பு மறுக்கப்படலாம். மேலும், மனத்தில் நினைப்பதை நினைத்த உடனேயே வெளிப்படுத்துவது எல்லா நேரமும் சிறந்த செயல் அல்ல.


  • கிண்டல் பேச்சு

கிண்டல் செய்வதற்குப் பொருத்தமான நேரம் உண்டு. அதை அடிக்கடி செய்வது, பிறர் மனத்தைக் காயப்படுத்தலாம், நம்மைச் சுற்றி உள்ளவர்களை எரிச்சல்பட வைக்கலாம். நீங்கள் எவ்வளவுதான் நகைச்சுவை உணர்ச்சி மிக்கவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்த இடம், பொருள், ஏவல் தெரிந்திருக்கவேண்டும்.


  • தன்னைப் பற்றியே பெருமைபேசுதல்

ஒருவரோடு பேசும்போது நம்மைப்பற்றி நாமே பெருமை பேசிக்கொண்டிருப்பது நல்ல பழக்கம் அல்ல. மற்றவர்கள் பேச வாய்ப்பளிக்காமல் நாமே பேசிக்கொண்டிருப்பது, மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். உரையாடலின் சுவையையும் அது குலைத்துவிடும்.


  • திறன்பேசியைப் பயன்படுத்துதல்

பிறர் பேசும்போது அதைப் பரிவோடு கவனிக்கவேண்டும். உங்களோடு பேசுபவரின் கண்களைப் பார்த்து, அதை ஆமோதிப்பதே அவருக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுக்கும்.
மற்றவர்கள் பேசும்போது நாம் நமது கவனத்தைத் திறன்பேசியின்மீது செலுத்தினால், அவர்கள் பேசுவதை முழுமையாக கவனிக்க முடியாமல்போகும். மேலும், அவ்வாறு செய்வது அவர்களை அவமதிப்பதற்குச் சமம் என்பதை உணரவேண்டும்.


  • தனிப்பட்ட வாழ்க்கை பற்றித் துருவித் துருவிக் கேள்வி கேட்பது

பிறரிடம் பேசும்போது, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றித் துருவித் துருவிக் கேள்வி கேட்பதைக் கண்டிப்பாக நிறுத்தவேண்டும். சிலர் தங்களைப்பற்றிய அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை; அல்லது, கேட்கப்படும் கேள்விகள் அவரது மனத்தைப் புண்படுத்தும் வண்ணம் அமையலாம்.


  • பொருத்தமற்ற வகையில் விமர்சிப்பது

பிறருடன் பேசும்போது, அவர்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். நமது எல்லை என்ன என்பது, எதிரில் உள்ளவர்களோடு நமக்கு உள்ள நெருக்கத்தைப் பொறுத்தது. எல்லையை உணராமல், புண்படுத்தும் விதமாக அவர்களை விமர்சித்தால், பிற்காலத்தில் அவர்கள் நம்மோடு பேச விரும்பமாட்டார்கள். வாய்தவறி வார்த்தை வந்துவிட்டால், உடனே அதற்கு வருத்தம் தெரிவிக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்