Images
  • drawing
    (படம்:Pixabay)

பிள்ளைகளுக்குத் தாய்மொழி கற்பிக்கச் சில நடவடிக்கைகள்

சிறு வயது பிள்ளைகளின் முன்னே புத்தகங்களை வைத்துப் பாடம் கற்றுக்கொடுப்பது சிரமம்.

அதற்குப் பதிலாக விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் கற்பித்தால் சிறுவர்கள் மனத்தில் மொழி எளிதில் பதியும் என்று கல்வி அமைச்சு பரிந்துரைக்கிறது. 

சுலபமான இந்த நடவடிக்கைகளை உங்கள் பிள்ளைகளுடன் முயற்சி செய்து பாருங்கள்!

1. பொருட்களின் பெயர்களைச் சொல்லி அவற்றை வரைய செய்வது


இந்த நடவடிக்கையை எங்கு வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

சுற்றுப்புறம் சிறுவர்களுக்கு வகுப்பறையாகிறது. 

சுற்றி இருக்கும் பொருட்களின் பெயர்களைச் சிறுவர்களுக்குக் கற்பிக்கலாம். பின் சிறுவர்களுடன் உட்கார்ந்து அந்தப் பொருட்களை வரைந்து பார்க்கலாம். 

உணவு சாப்பிடும் நேரம் இதற்கு உகந்தது.

நாம் சாப்பிடும் உணவின் பெயர்களைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

சாப்பிட்டு முடிந்தபின் காகிதத்தில் அந்த உணவு வகைகளை வரைந்து பார்க்கலாம்.

2. எழுத்து வடிவத்தைக் கொண்டு ஓவியங்கள் வரைவது

'அ' - "அணில்".

'ஆ' - 'ஆமை'.

இப்படி எழுத்துகளை விலங்குகள் போன்று வடிவமைக்கலாம்.

விலங்குகளைப் போன்ற சித்திரங்களைத் தான் வரைய வேண்டும் என்ற அவசியமில்லை.

'இ' என்ற சொல்லுக்கு இடியாப்பத்தை வரையலாம்.

பிள்ளைகள் அழகாக வரைகிறார்களா என்பதில் கவனம் செலுத்த வேண்டாம்.

ஒவ்வொறு சொல்லுக்கும் எத்தகைய சித்திரங்களைச் சிறுவர்கள் வரைகிறார்கள் என்று பார்த்து அதில் வெளிப்படும் அவர்களுடைய சிந்தனைத் திறனைப் பாராட்டுவது முக்கியம் என்கிறது கல்வி அமைச்சு.


3. வடிவங்களை உருவாக்கி விளையாடுவது

வட்டங்கள், சதுரங்கள் போன்ற வெவ்வேறு வடிவங்களை காகிதத்தில் வெட்டலாம்.

அல்லது இன்னும் சிறு துண்டுகளாக வெட்டி அவற்றைப் பசை கொண்டு மீண்டும் ஒட்டச் சொல்லலாம்.

இந்த நடவடிக்கைகளின்போது அந்த வடிவங்களின் பெயர்களைத் தமிழில் கற்றுக்கொடுக்கலாம்.


4. நடிப்பு மூலம் தமிழ் கற்பது

சிறு குழந்தைகளின் பாடல்களுடன் சைகைகள் எப்பொழுதும் இணைந்திருக்கும்.

இதற்குக் காரணம் அந்தச் சைகைகளைச் செய்யும்போது அதனுடன் சேர்ந்து பாடலும் அவர்களுடைய மனத்தில் பதியும்.

அதே போல் புது வார்த்தைகளைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போது அவற்றுக்கு ஏற்றவாறு கை சைகை செய்யலாம், அல்லது முகபாவனைகள் செய்யலாம்.

5. பந்து போன்ற பொருள்களை வீசியபடி பாடம் கற்பது
ஒன்றைக் கற்கும்போது கைகளுக்கும் வேலை கொடுத்தால் அது இன்னும் ஆழமாக மனத்தில் பதியும்.

இதனால் வெறும் புத்தகத்திற்கு முன்னால் உட்கார்ந்து தமிழ் கற்றுக்கொடுக்காமல், சிறிய பந்து ஒன்றை வீசி, பிடித்து கற்பிக்கலாம்.

இரு நடவடிக்கைகளிலும் ஒன்றாக ஈடுபடும் சவாலையும் பிள்ளைகள் விரும்புவர்.  

Top