Images
  • fight (1)
    (படம்: Pixabay)

அனைவரும் வீட்டில் இருக்கும்போது வாக்குவாதத்தைக் குறைத்துக்கொள்ள சில வழிகள்

குடும்பத்தார் அனைவரும் எப்போதும் வீட்டில் இருப்பதால் பூசல்கள் அதிகரிக்கின்றனவா?

கட்டாயமாகப் பலர் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இன்றைய சூழலை, உறவை வலுப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தலாம்.

ஆனால், வெளியே செல்லாமல் இருப்பதால் வீட்டுக்குள் சண்டை, சச்சரவுகள் அதிகமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்யலாம்?...

ஆலோசனை வழங்குகிறார் குடும்ப வாழ்க்கைப் பயிற்றுவிப்பாளர் திருமதி சரோஜினி பத்மநாதன்.

வீட்டில் எப்போதும் இருக்கும் மாற்றத்திற்கு குடும்பங்கள் எவ்வாறு பழகிக்கொள்ளலாம்?

  • மனத்தளவில் மாற்றங்களைச் சமாளிக்க முடியும் என்ற மனப்பக்குவத்தை முதலில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • வீட்டில் குடும்பத்தோடு செலவிடுவதற்கான இடத்தையும் வேலை செய்வதற்கான இடத்தையும் வரையறுத்துக்கொள்ளலாம்...
  • வீட்டில் உள்ள மற்றவர்களோடு, அன்றாட வாழ்க்கையில் என்னென்ன மாறியுள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வது முக்கியம்.

தம்பதியரிடையே பூசல் மூண்டால்....

  • ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவேண்டும்.
  • எதிர்பார்ப்புகளை மற்றவரிடம் தெளிவாகச் சொல்லிவிடவேண்டும். ஒருவர் மனத்தில் என்ன நினைக்கிறார் என்பதை மற்றவர்களால்
  • தெரிந்துகொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • மனப்பூர்வமான உரையாடல் முக்கியம். ஒருவர் பேசுவதை கவனமாகக் கேட்பது அவசியம். பேசும் முன்னர் உங்கள் துணை என்ன சொல்கிறார் என்பதை முதலில் கேட்கவும்..
  • இருவரின் விருப்பங்களும் முக்கியம் என்பதை அறிய வேண்டும். ஒருவர் மற்றவரது வேண்டுகோளை நிறைவேற்றுவதில் உண்மையான அக்கறை காட்டவேண்டும்.

பிள்ளைகள் அடம்பிடித்தால்...

  • அவர்களைத் திட்டுவதில் பலனில்லை, பதிலாக அன்பை அதிகரிக்கவும்.
  • பெற்றோர், பிள்ளைகள் ஒன்றாக ஈடுபடக்கூடிய எளிமையான நடவடிக்கைகளைத் திட்டமிடலாம்.
  • வீட்டில் உள்ள விதிமுறைகள், வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, பிள்ளைகளிடம் பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்று விளக்கலாம்.
  • பிள்ளைகளிடம் அன்பாகப் பேசும் அதேவேளையில், வீட்டு விதிமுறைகள் அனைவருக்கும் பொருந்தும் என்பதை உணர்த்தவேண்டும்.

பிள்ளைகளிடையே சண்டை மூண்டால்...

  • வீட்டில் ஒவ்வொரு பிள்ளைக்கும் அவரவர் கடமைகள் என்னென்ன என்பதைப் பிரித்துத் தந்துவிடவும்.
  • அவர்களிடம் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்பதைத் தெளிவாக, தீர்மானமாக எடுத்துரைக்கலாம்.
  • பிள்ளைகளிடையே பிணைப்பை வலுப்படுத்தும் விளையாட்டுகள், நடவடிக்கைகளைச் செய்ய வைக்கலாம்.
  • பிள்ளைகளிடையே பிரச்சினை உருவாகும் முன்னரே அதை ஊகித்துத் தவிர்த்துவிட வேண்டும்.

கோபம் ஏற்பட்டால்...

  • கோபம் ஏற்படுத்தும் பிரச்சினையிலிருந்து மட்டுமல்ல அந்த இடத்திலிருந்தே சற்று நேரம் விலகி இருக்கலாம்.
  • கோபத்தைக் குறைக்க 10 நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது தண்ணீர் அருந்துவது, பாட்டு அல்லது நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டு ரசிப்பது ஆகியவற்றோடு தியானமோ மூச்சுப் பயிற்சியோ செய்யலாம்.


ஒவ்வொரு நாளும் தங்களுக்கென வழக்கமான நடவடிக்கைகளை வகுத்து, அதில் தொடர்ந்து ஈடுபடுவதை வலியுறுத்துகிறார் திருமதி சரோஜினி.

குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அதிக நேரம் செலவிட வாய்ப்புக் கிடைத்துள்ள இந்த
நேரத்தில் பூசல்களைத் தவிர்ப்பது முக்கியம்.

ஆனால், சமாளிக்க முடியாத பிரச்சினைகளை, தொடர்ந்து எதிர்நோக்குவோர், CPHOnlineCounselling.sg மூலம் நிபுணத்துவ ஆலோசனையைப் பெறலாம்.

துன்பங்களையும் குடும்ப வன்செயல்களையும், மௌனமாகச் சகித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள் !
 

Top