Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மின்னிலக்க வங்கி என்றால் என்ன ?

சிங்கப்பூரில் மின்னிலக்க வங்கி உரிமம் பெற சில முன்னணி நிறுவனங்கள் போட்டியில் இறங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -
மின்னிலக்க வங்கி என்றால் என்ன ?

படம்: Monzo

சிங்கப்பூரில் மின்னிலக்க வங்கி உரிமம் பெற சில முன்னணி நிறுவனங்கள் போட்டியில் இறங்கியுள்ளன.

இளையர்களைக் கவரும் விதமாக மின்னிலக்க வங்கிகள் புத்தாக்கமான முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னிலக்க வங்கி என்றால் என்ன?

மின்னிலக்க வங்கிகள் சாதாரண வங்கிகள் போல் தான் இயங்கும்.  ஆனால் அவற்றுக்கெனத் தனிப்பட்ட கட்டடமோ, அலுவலகமோ,  கிளைகளோ இருக்கமாட்டா.

மின்னிலக்க வங்கிகள் முழுக்க முழுக்க இணையத்தில் மட்டுமே இயங்கக் கூடியவை.

அதனால் வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்குகளை கைத்தொலைபேசி, கணினி மூலம் பயன்படுத்தலாம். 

மின்னிலக்க வங்கிகளால் தற்போது வங்கித் தொழிலில் முன்னணி வகிக்கும் DBS, OCBC, UOB ஆகியவற்றுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.

ஐரோப்பாவில் சில நாடுகளிலும், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் மின்னிலக்க வங்கிகள் செயல்படத் தொடங்கிவிட்டன.

ஹாங்காங்கில் கடந்த ஆண்டு சில நிறுவனங்களுக்கு மின்னிலக்க வங்கிக்கான உரிமம் வழங்கப்பட்டது.

எப்படிச் செயல்படும்? 

மின்னிலக்க வங்கிகள் முதலில் குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டுமே சேவையளிக்கும்.

பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் வங்கியோடு தொடர்புடைய மற்ற தரப்பினரிடம் இருந்து மட்டுமே அது வைப்புத் தொகையைப் பெறும்.

ஒரு நபருக்கு அதிகபட்சமாக 75,000 வெள்ளி வரைதான் வைப்புத் தொகையாகப் பெறமுடியும்.

மொத்த வைப்புத் தொகை வரம்பு, 50 மில்லியன் வெள்ளி.

வங்கியின் வளர்ச்சியைப் பொறுத்து 3 அல்லது 5 ஆண்டுகளில் எல்லாருக்கும் சேவைகள் வழங்கப்படும்.

மின்னிலக்க வங்கிகளில் உள்ள கணக்குகளில் குறைந்தபட்ச ரொக்கம் ஏதும் வைத்துக்கொள்ளத் தேவையில்லை.

மின்னிலக்க வங்கிகளால் வங்கிக்கெனத் தனியாக இடம் ஒதுக்கத் தேவையில்லை.

ரொக்கத்தைச் செலுத்தவும், எடுக்கவும் வசதிதரும் தானியக்க வங்கி இயந்திரக் கட்டமைப்பைக் கொண்டிருக்க அவற்றுக்கு அனுமதி இருக்காது.

யார் யார் விண்ணப்பித்துள்ளனர் ?

வங்கி உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

வங்கி உரிமத்திற்காக பிரபலக் கணினி விளையாட்டு நிறுவனமான Razer-உடன் கைகோத்துள்ளது Sheng Siong பேரங்காடி நிறுவனம்.

Grab, Singtel ஆகியவை இணைந்து மின்னிலக்க வங்கி உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளன.

அலிபாபா நிறுவன இயக்குநர் ஜாக் மாவின் Ant Financial நிறுவனம், EZ-link நிறுவனம் ஆகியவை உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளன.

விண்ணப்பத்தில் வெற்றிபெறும் தரப்புகள் 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அறிவிக்கப்படும்.

அவற்றின் செயல்பாடுகள் 2021ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்