Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அனைத்துலக மகளிர் தினம் - ஏன்? எங்கே? எப்போது?

இன்று அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
அனைத்துலக மகளிர் தினம் - ஏன்? எங்கே? எப்போது?

படம்: Pixabay

இன்று அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவது அதன் நோக்கம்.

அதே நேரத்தில் சமூகம், பொருளாதாரம், கலாசாரம், அரசியல் ஆகிய துறைகளில் பெண்கள் அடைந்துள்ள சாதனைகளை இன்றைய தினம் கொண்டாடுகிறது.

எப்போது...எங்கு தொடங்கியது?

108 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றால், அனைத்துலக மகளிர் தினம் தொடங்கிய காரணத்தை அறியலாம்.

1909ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நிகரில் 15,000 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிதமிஞ்சிய வேலை நேரம், குறைந்த வருமானம், வாக்களிக்கத் தகுதியில்லை போன்ற முழக்க வரிகளுடன் பெண்கள் பேரணி நடத்தினர்.

'Socialist Party of America' என்னும் கட்சி பெண்களின் எழுச்சியைக் கொண்டாடியது.

எவ்வாறு பரவியது?

மறு ஆண்டு அனைத்துலக சோஷியலிஸ்ட் கட்சி டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் நடத்திய மாநாட்டில் 'தேசிய மகளிர் தினம்' குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

17 நாடுகளைப் பிரதிநிதித்த 100க்கும் அதிகமான பெண்கள் அதை ஆதரித்து ஒருமனதாக வாக்களித்தனர்.

அனைத்துலக அளவில் அதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தும் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

1911ஆம் ஆண்டு முதல்முறையாக 'அனைத்துலக மகளிர் தினம்' அனுசரிக்கப்பட்டது.

மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற கொண்டாட்டங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லந்து ஆகிய நாடுகள் அந்த தினத்தை அனுசரித்தன.

வேலையிடங்களில் நிலவும் பாலினப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் முழக்கங்கள் இடம்பெற்றன.

மார்ச் 8ஆம் தேதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது?

1913ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யப் பெண்கள் முதல்முறையாக 'அனைத்துலக மகளிர் தினத்தை' அனுசரித்தனர்.

1913ஆம் ஆண்டு நடைபெற்ற கலந்துரையாடல்களுக்குப் பின்னர், 'அனைத்துலக மகளிர் தினம்' மார்ச் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

முக்கிய நிகழ்வுகள்

1975ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு நிறுவனம் 'அனைத்துலக மகளிர் தினத்தை' அனுசரித்தது. 1977ஆம் ஆண்டு டிசம்பரில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் அந்த தினத்தை அனுசரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைப் பிரகடனப்படுத்தின.

1996ஆம் ஆண்டு முதல், மகளிர் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. 'கடந்த காலத்தைக் கொண்டாடுவோம், எதிர்காலத்தைத் திட்டமிடுவோம்' என்பது அந்த ஆண்டின் கருப்பொருள்.

இவ்வாண்டு #EachforEqual எனும் கருப்பொருளுடன் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்