Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

செல்ஃபி - தோற்றம் முக்கியமா? மன மாற்றம் முக்கியமா?

மனிதர்களின் முகத்தில் இருக்கும் குறைகளைக் கண்ணாடியில் பார்க்கும்போது சரி செய்ய முடியாது.

வாசிப்புநேரம் -
செல்ஃபி - தோற்றம் முக்கியமா? மன மாற்றம் முக்கியமா?

படம்: PIXABAY

மனிதர்களின் முகத்தில் இருக்கும் குறைகளைக் கண்ணாடியில் பார்க்கும்போது சரி செய்ய முடியாது. ஆனால், செல்ஃபி எடுக்கும்போது அந்தக் குறையைச் சட்டெனப் போக்கி விடலாம்.

முகத்தில் இருக்கும் குறைகளைப் போக்கி அல்லது மறைத்துப் படமெடுத்து சமூக ஊடகங்களில் படங்களைப் பதிவேற்றும் பழக்கம் நம்மில் பலருக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், உண்மையிலேயே குறைகள் நீக்கப்பட்ட பொலிவான முகம் வேண்டும் என்று மருத்துவரை நாடுவோரின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகமாகி வருகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூரில் அத்தகைய போக்கு தொடங்கி விட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். செயலிகளைக் கொண்டு திருத்தப்பட்ட தங்கள் முகங்களைப் போன்றே உண்மையான முகம் இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட அழகியல் சிகிச்சையை நாடுவதாகச் சுட்டுகின்றனர் மருத்துவர்கள்.

செல்ஃபியில் இருப்பது போன்றே தங்கள் உண்மையான தோற்றம் இருக்க வேண்டும் என்று சிங்கப்பூரில் மாதந்தோறும் ஐந்து பேர் வரை அழகியல் சிகிச்சை நிபுணர்களை நாடுகின்றனர். அத்தகையோரில் பத்தில் ஒருவர் பெரும்பாலும் இருபது வயதிலிருக்கும் ஆடவர் என்று நிபுணர்கள் சுட்டுகின்றனர்.

பருவால் ஏற்படும் தழும்புகளை நீக்குவது, மூக்கின் வடிவத்தை மாற்றியமைப்பது போன்ற காரணங்களுக்காக இளம்பெண்கள் அழகியல் சிகிச்சையை நாடுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சிகிச்சை நடைமுறைகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பதாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

அழகு சிகிச்சை வழங்கும் நிபுணர்களும் தற்போது நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். சிகிச்சைக்குப் பிறகு எப்படி இருப்பார்கள் என்பதைத் தங்களை நாடி வருவோருக்கு எளிய வகையில் எடுத்துச் சொல்வதற்கு அவர்களுக்கு அத்தகைய தொழில்நுட்பம் உதவுகிறது.

மின்னிலக்க யுகத்தில் உண்மைக்கும், கற்பனைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு மறைந்திருப்பதைச் சிலர் உணர்வதில்லை. அது அவர்களை உளவியல் ரீதியாகப் பாதிக்கிறது. தங்கள் தோற்றம் குறித்தே எப்போதும் எண்ணிக் கொண்டிருப்போருக்கு அதனால் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

தம் தோற்றத்தைப் பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்போருக்கு Body dysmorphia disorder பாதிப்பு இருக்கலாம். உலக மக்கள் தொகையில் சுமார் இரண்டு விழுக்காட்டினருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சுமார் நான்கு பேர் வரை அதற்கான சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்களை நாடுகின்றனர்.

தோற்றம் குறித்தே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்போருக்கான அறிகுறிகளில் சில.

* எந்நேரமும் கண்ணாடிக்கு முன்னால் பொழுதைக் கழிப்பது அல்லது கண்ணாடியைப் பார்ப்பதற்கே அச்சப்படுவது.

* வெளியே சென்று மற்றவர்களோடு கலந்து பழகத் தயங்குவது.

* அழகு சிகிச்சை மேற்கொள்வது குறித்து அதிக விருப்பத்தை வெளிப்படுத்துவது.

* அழகு சாதனப் பொருட்களுக்காக அதிகம் செலவிடுவது.

* பகல் நேரங்களில் வெளியே செல்வதற்குத் தயங்குவது.

* எப்போதும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது

* தங்கள் தோற்றம் குறித்து பிறர் நன்றாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்