Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகக் கவசம் எப்போது, எங்கே அணியவேண்டும்?

பிரதமர் லீ சியென் லூங், கடந்த வாரம் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில், வெளியில் செல்லும்போது முகக் கவசங்களை அணியும்படி பொதுமக்களுக்கு ஆலோசனை கூறினார்.

வாசிப்புநேரம் -

பிரதமர் லீ சியென் லூங், கடந்த வாரம் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில், வெளியில் செல்லும்போது முகக் கவசங்களை அணியும்படி பொதுமக்களுக்கு ஆலோசனை கூறினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியிலிருந்து தீவு முழுவதும் மறுமுறை பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதற்கு முன் முகக் கவசங்களை அணிய வேண்டாம் என்று கூறிய அரசாங்கம் ஏன் அதன் நிலைப்பாட்டை மாற்றியது?

முகக் கவசங்களைச் சரியாக அணிந்துகொள்வது எப்படி?

இந்த வினாக்கள் பலரிடமும் எழுந்துள்ளன.

முகக் கவசத்தை ஏன் அணிய வேண்டும்?

கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் முதல் 3 நாள் வரை அறிகுறிகள் ஏதும் இல்லாமலே மற்றவருக்கு அதனைப் பரப்பலாம் என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார் தேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்
சு லீ யாங் ( Hsu Li Yang).

சிங்கப்பூரில் அவ்வாறு 10 பேருக்குக் கிருமி தொற்றியது.

அதனால் ஒருவர் அறிகுறியின்றியே கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருந்தாலும், முகக் கவசம் அணிவதால் மற்றவர்களுக்குக் கிருமியைப் பரப்பும் வாய்ப்பு குறைகிறது.

முகக் கவசத்தை எப்போது அணிய வேண்டும்?

COVID-19 கிருமிப் பரவலைத் தடுப்பதில் ஆக முக்கியமானது பாதுகாப்பான இடைவெளிகளைக் கடைப்பிடித்தல். ஆனால் சில நேரங்களில் அது சாத்தியமின்றிப் போகலாம். முகக் கவசங்களை அணிவதுடன் கைகளை அடிக்கடி கழுவுவதும் முக்கியம் என்றார் இணைப் பேராசிரியர் சு.

எந்த வகை முகக் கவசங்கள் சிறந்தவை?

N95-ரக முகக் கவசங்களும் அறுவைச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களும் (Surgical Masks) கிருமித்தொற்றுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால் உலகளவில் அவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

துணி அல்லது காகிதத்தால் செய்யப்பட்ட முகக் கவசங்கள் ஓரளவுக்கு மட்டுமே பாதுகாப்பு அளித்தாலும் அவையும் கிருமித்தொற்றைத் தடுப்பதாக சில ஆய்வுகள் காட்டுகின்றன.

துணியாலான முகக் கவசங்களைத் தேர்ந்தெடுத்து அணிவது எப்படி?

முகக் கவசங்கள் அணிபவரின் முகத்துடன் ஒட்டியிருக்க வேண்டும்;ஆனால் இறுக்கமாக இருக்கக்கூடாது.

அதில் சுமார் 3 அடுக்குத் துணிகள் இருக்க வேண்டும் அதேநேரத்தில் மூச்சு விடவும் எளிதாக இருக்கவேண்டும். முகக் கவசத்தை அணியும்போதும் அவிழ்க்கும்போதும் முகத்தைத் தொடாமல் இருப்பது முக்கியம்.

ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய பின்னர் அதைக் கழுவ வேண்டும்.

முகக் கவசங்களை எங்கு பெற்றுக்கொள்ளலாம்?

தீவு முழுவதும் இம்மாதம் 12ஆம் தேதி வரை குடியிருப்பாளர் நிலையங்களிலும் சமூக மன்றங்களிலும் மறுமுறை பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.


சிங்கப்பூரின் தேசிய இருப்பில் முகக் கவசங்கள் உள்ளனவா?

பொறுப்புள்ள முறையில் பயன்படுத்தப்பட்டால் சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் போதுமான அளவில் இருப்பில் இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மருத்துவ ஊழியர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவை ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் அரசாங்கம் வெவ்வேறு இடங்களிலிருந்து முகக் கவசங்களையும் அத்தியாவசியப் பொருள்களைகயும் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்துவருகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்