Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சத்தமில்லாத தூக்கம் கேட்டேன்! - சிலருக்குத் தூங்கும்போது குறட்டை வருவதேன்?

தூங்கும்போது காட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு...

வாசிப்புநேரம் -

தூங்கும்போது காட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு...

சீறும் பாம்பு, பாயும் புலி, கர்ஜிக்கும் சிங்கம் எனப் பல விலங்குகள் போடும் சத்தத்தைப் போன்று வீட்டில் இருக்கும் ஓரிரு மனிதர்கள் இரவில் ஒலியெழுப்புவதைப் பலரும் கேட்டு அவதிப்பட்டிருக்கலாம்.

  • குறட்டை...

குறட்டை என்பது நோயல்ல... அது நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் தேசியப் பல்கலைக்கழக மருத்துவ அமைப்பின் (National University Health System) துணைப்பேராசிரியர் டாக்டர் சோமசுந்தரம் சுப்பிரமணியம்.

உடலின் சுவாசக்குழாயில் ஏற்படும் அதிர்வுகளால் குறட்டை வருகிறது. அதிக அதிர்வுகள், அதிக சத்தத்தை ஏற்படுத்தும்.

  • பொதுவாக யாருக்கெல்லாம் குறட்டை வரலாம்?

* எடை அதிகமுள்ளவர்கள்
* நடுத்தர அல்லது முதிர்ந்த வயது ஆண்கள்
* இறுதி மாதவிடாய் முடிந்த பெண்கள்

  • தூக்கத்தில் மூச்சுத் திணறல்

குறட்டை விடும் சிலருக்கு Sleep Apnea எனும் தூக்கத்தில் வரக்கூடிய மூச்சுத்திணறல் இருக்கக்கூடும்.

அவர்கள் தூங்கும்போது, ஒரு மணிநேரத்துக்கு 20 முதல் 30 முறை வரை அவர்களது மூச்சு தடைபடக்கூடும்.

அதன் காரணமாக, அவர்களது ரத்தத்தில் உயிர்வாயுவின் அளவு குறைந்துவிடும். அப்போது அவர்களது மூளை, அவர்களை எழுப்பி மூச்சுவிடத் தூண்டும்.

அவ்வாறு எழுபவர்களுக்கு ஒருவித உடல்ரீதியான பதற்றம் ஏற்படும்.

அத்தகைய மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்கள் சரிவரத் தூங்குவது கடினம்.

  • அதனால் ஆபத்துகள்?

* நிலையற்ற இதயத் துடிப்பு
* உயர் ரத்த அழுத்தம்
* மாரடைப்பு / பக்கவாதம்
* நீரிழிவு நோய்
* காலை நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் வாகனமோட்டுபவர்கள், விபத்தில் கூட சிக்கலாம்.

  • குறட்டையால் தூக்கமின்மை...

குறட்டைப் பிரச்சினை உள்ளவர்களது தூக்கத்தின் தரமும், அளவும் பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு.

அது மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருப்பதைப் பாதிப்பதோடு, பொதுவான உடல்நலத்தையும் பாதிக்கக்கூடியது. உடல்பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் போன்றவை ஏற்படலாம்.

நோய்கள், காயங்கள் போன்றவற்றிலிருந்து குணமடைவதற்குத் தூக்கம் பெருமளவில் பங்காற்றுகிறது.

  • குறட்டையைக் குறைப்பதற்கு வழிகள் உள்ளனவா?

அதற்கான சில எளிய வழிகளைப் பகிர்ந்துகொள்கிறார் டாக்டர் சோமசுந்தரம்.

  1. உடற்பயிற்சி செய்து, உடல் எடையைக் குறைக்கலாம்
  2. Body Mass Index (BMI) எனும் உடல் எடை விகிதம் 18 முதல் 23 வரை இருப்பதைப் பார்த்துக்கொள்ளலாம்
  3. மல்லாந்து படுப்பதைவிட, இடப்பக்கத்தில் சாய்ந்தபடியோ, வலப்பக்கத்தில் சாய்ந்தபடியோ தூங்கலாம்
  4. மதுபானம் உட்கொள்வதைக் குறைக்கலாம்

உங்களுக்கோ, உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ, குறட்டைப் பிரச்சினை இருந்தால் மருத்துவ உதவி பெறத் தயங்கவேண்டாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்