Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சோகக் கதைகளை நகைச்சுவையாகச் சொன்ன இந்தியப் பணிப்பெண் மேடைப் பேச்சாளரானார்

சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவதற்கான தளத்தை அமைத்துக்கொண்டார் இல்லப் பணிப்பெண்ணான தீபிகா. 

வாசிப்புநேரம் -
சோகக் கதைகளை நகைச்சுவையாகச் சொன்ன இந்தியப் பணிப்பெண் மேடைப் பேச்சாளரானார்

(படம்: Facebook/Love Prashar)

சிரிப்பு...பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது.

சவால்களைச் சந்திக்கும்போது சிரிப்பதும் கடினம்...சிரிக்க வைப்பதும் கடினம்...

அதைச் சவாலாக எடுத்து சாதனையும் படைத்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த 43 வயது தீபிகா மாத்ரே.

சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவதற்கான தளத்தை அமைத்துக்கொண்டார் இல்லப் பணிப்பெண்ணான தீபிகா.

அவர் பகல் நேரத்தில் பணிப்பெண்ணாகவும் இரவில் மேடைகளில் சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கூறும் பேச்சாளராகவும் வலம் வருகிறார்.

அதிகாலை 4 மணிக்கெல்லாம் தீபிகாவின் பணிகள் தொடங்குகின்றன.
ரயில் ஏறி பொதுமக்களுக்கு அணிகலன்களை விற்கிறார்.

இரண்டு மணி நேரம் கழித்து மும்பையில் உள்ள வீடுகள் சிலவற்றில் அவர் சமையல் வேலைகளை மேற்கொள்கிறார்.

இப்படியே பொழுது கழிகிறது தீபிகாவிற்கு.

ஆனால் அவர் சோர்ந்துபோவதில்லை.

இரவில் கூட்டத்தின்முன்னர் தாம் பேசவிருப்பதை நினைத்து மகிழ்ச்சியாகப் பணிகளைச் செய்கிறார்.

முதலாளிகள் நல்லவர்கள். வீட்டு வேலைகளின்போது நடக்கும் சம்பவங்களை நான் நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கூறுவேன்... பிற நகைச்சுவைக் கலைஞர்களைப் போல!

என்று தீபிகா சொன்னார்.

பெரும்பாலான வீடுகளில் பணிப்பெண்களுக்கென தட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கும். சாப்பிடும்போது தரையில் உட்காரச் சொல்வார்கள் என்றார் தீபிகா.

'உங்கள் சப்பாத்தி மாவை யார் பிசைந்தது? உங்கள் சோர்வுற்ற கால்களுக்கு யார் தைலம் தேய்த்துவிட்டது?" என்று குறும்புத்தனத்தோடு மேடையில் கேட்பதை நினைவுகூர்ந்தார் தீபிகா.

எந்தத் தலைப்பாக இருந்தாலும் அது பற்றி தைரியமாகத் தாம் பேசுவதாகக் கூறிய தீபிகா, வாழ்க்கையில் தாம் சந்தித்த சிரமங்கள் தம்மைத் துணிச்சலான பெண்ணாக உருமாற்றியிருக்கிறது என்றார்.

மேடைப் பேச்சாளரான பிறகு தன்னம்பிக்கையும் வெகுவாகக் கூடியிருக்கிறது. தம்மை அடையாளம் காண்போரும் மரியாதையோடு பேசுகின்றனர் என்று தீபிகா மகிழ்ச்சியோடு சொன்னார்.

இவரின் பயணம் எப்படித் தொடங்கியது தெரியுமா?

அவரது முதலாளிகளில் ஒருவர் இல்லப் பணிப்பெண்களுக்கான திறன் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் கலந்துகொண்ட சிலர் ஆடினர், சிலர் பாடினர். தீபிகா தனது வேலை குறித்த கதைகளை நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் இருந்த நிருபரும் அவரின் முதலாளியும் தீபிகாவின் திறனைக் கண்டு மனமகிழ்ந்து அவரை மேடைப் பேச்சாளராக மாற்ற உதவியிருக்கின்றனர்!


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்