Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இவற்றையுமா விழுங்குவார்கள் சிலர்?

சிலர் சற்று வித்தியாசமான பொருட்களை விழுங்கியதால் மருத்துவரிடம் சென்றனர். அவர்களில் சிலரைப் பற்றிப் பார்ப்போம்...

வாசிப்புநேரம் -
இவற்றையுமா விழுங்குவார்கள் சிலர்?

(படம்: Pixabay)

மருத்துவர்களிடம் வருவோர் பலதரப்பட்ட காரணங்களுக்காக வருவர்.

ஆனால் சிலர் சற்று வித்தியாசமான பொருட்களை விழுங்கியதால் மருத்துவரிடம் சென்றனர். அவர்களில் சிலரைப் பற்றிப் பார்ப்போம்...

1) வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு வந்தார் வசதி படைத்த மாது ஒருவர். அவரை மருத்துவர்கள் சோதித்தபோது எதுவும் தென்படவில்லை. x-ray படமெடுத்துப் பார்த்ததில் அவரது வயிற்றிலும் சிறுகுடலிலும் நகைகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்துபோயினர். தமது கணவர் அவரது காதலிக்கு நகைகளைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அவற்றை விழுங்கியதாகச் சொன்னார் மாது. Quora சமூக வலைத்தளத்தில் மருத்துவர் Ali Sadek அந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டார்.

2) அனைத்துலக அவசர மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட குறிப்பு ஒன்றில் நான்கு வயது சிறுவன் பெரிய காசு ஒன்றை விழுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய தைவானிய டாலர் நாணயமான அது குடலில் எங்கெங்கு நகர்கிறது என்பதை, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். மலமிளக்கி மருந்துகளை தாராளமாகக் கொடுத்துவந்தனர். கடைசியில் அறுவை சிகிச்சை தேவையின்றி, 28 நாள் கழித்து சிறுவனின் மலக்குடல் வழியே வெளியேறியது காசு... அப்பாடா !...

3) பல்துலக்கும் போது குழந்தைகள் பற்பசையை விழுங்குவதுண்டு. ஆனால், 55 வயது ஆடவர் ஒருவர் பல்துலக்கியையே விழுங்கிவிட்டார். பல்துலக்கியை விழுங்கியபோதும், இரண்டு வாரங்களுக்குப் பின்புதான் அவர் வயிற்று வலியோடு மருத்துவரைக் காணச் சென்றார். அறுவை சிகிச்சை மூலம் வெளிவந்தது பல்துலக்கி. பாகிஸ்தானில் நடந்தது இந்தச் சம்பவம். பல்துலக்கியை விழுங்கியவரின் பற்கள் எவ்வளவு வெண்மையாக இருந்தன என்பது பற்றித் தகவல் இல்லை.

4) மனவளர்ச்சி குன்றிய 55-வயது ஆடவர் ஒருவரின் மலக்குடலில் பிளாஸ்டிக் கையுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரைச் சோதனையிட்ட பிறகு அவருக்கு Pica எனும் நோய் உள்ளதாகத் தெரியவந்தது. இந்த நோயைக் கொண்டவர்கள் உணவு அல்லாத மற்ற பொருட்களை உண்ணத் தாமாகவே தூண்டப்படுவர்.

5) ஜெர்மனியில் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற 50-வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு என்ன பிரச்சினை என்றே யாருக்கும் தெரியவில்லை. அவரை நுண்ணலைச் சோதனைக்கு உட்படுத்தியபோதுதான், ஆடவரின் சிறுகுடலில் பற்குச்சி ஒன்று இருந்தது தெரியவந்தது. பற்குச்சியால் பழத்தைக் குத்தி உண்ணும்போது பழத்தோடு சேர்ந்து உள்ளே போயிருக்குமோ?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்