Images
  • skipping meal
    (படம்:  Unsplash)

ஒரு வேளை சாப்பிடாமல் இருக்கும்போது நம் உடலில் என்னென்ன நடக்கும்?

சாப்பிடாமல் இருக்கும்போது நம் உடலில் சில மாற்றங்கள் நிகழும். அவை என்னென்ன என்று கிளெனிகல்ஸ் மருத்துவமனையின் உணவுத் துறை நிபுணர் ஆப்பிள் சான் (Apple Chan) விவரிக்கிறார்.

வேலைப் பளு, நேரமின்மை என்று ஒரு வேளை உணவை நாம் எளிதில் தவறவிடுகிறோம். ஒரு வேளை உணவுதானே என்று நாம் அலட்சியமாக இருக்கிறோம்.

சிலமுறை சாப்பிடத் தவறினால் பிரச்சினை இல்லை, ஆனால் அதுவே தொடர்ந்தால் பின்விளைவுகள் ஏராளம் என்றார் சான்.

ஆரம்பத்தில் உடலில் சர்க்கரை அளவு குறையும், தொடர்ந்து உணவைத் தவறவிடும்போது அது கவனக்குறைவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஒரு வேளை உணவைத் தவறவிடும்போது அது அடுத்த வேளையில் அதிகமாக நம்மை உட்கொள்ளத் தூண்டும். அதனால் நீரிழிவு நோய் உண்டாகும் சாத்தியம் அதிகம் என்று சான் குறிப்பிட்டார்.

உணவு உண்ணாமல் அடிக்கடி இருக்கும்போது உடல் எடை குறைய ஆரம்பிக்கும். பின் அது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று சான் கூறினார்.

உடலுக்குத் தேவையான உணவு இல்லாதபோது முதலில் சோர்வு ஏற்படும். இதனால் வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்ய இயலாது. பின் நெஞ்செரிச்சலும் உடலில் நீர் வறட்சியும் வாய் துர்நாற்றமும் ஏற்படும் என்று சான் சொன்னார்.

சரியான இடைவேளைகளில் சாப்பிடவில்லை என்றால் அது உடலின் சதை வளர்ச்சியைப் பாதிக்கத் தொடங்கும்.

உணவு உண்ணாமல் இருக்கும்போது குடலில் செரிமான திரவம் உற்பத்தியாக ஆரம்பிக்கும்.

அதனால் அடிக்கடி உணவு உண்ணாமல் இருக்கும்போது செரிமானக் கோளாறு, குடல் புண் ஏற்படலாம் என்று சான் எச்சரித்தார்.

சிலர் காலை உணவாக காபி, ரொட்டி சாப்பிடுவது வழக்கம் ஆனால் அது ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ளப்படாது. உடலுக்குப் போதிய ஊட்டச் சத்துக்கள் தேவைப்படும். அதனால் தகுந்த உணவை உட்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.   

Top