Images
  • water (1)
    படம்: Pixabay 

தாகத்தைத் தணிக்கும் சிறந்த பானம் தண்ணீர் அல்ல?

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

தாகமாக இருந்தால் இயல்பாகவே நாம் தண்ணீரை அருந்த முற்படுவோம். ஆனால் தண்ணீரைக் காட்டிலும் மற்ற பானங்கள் தாகத்தை மேம்பட்ட வகையில் தீர்த்து வைக்கின்றனவாம்.

ஸ்காட்லந்தின் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், வெறும் தண்ணீரைவிடக் கொஞ்சம் சர்க்கரை, கொழுப்பு அல்லது புரதம் கலக்கப்பட்ட பானங்கள்  உடலில் நீர்ச்சத்தை நீண்ட நேரம் தக்கவைக்க உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெறும் தண்ணீரைக் குடிப்பது, வயிற்றிலிருந்து ரத்தக்குழாய்களுக்கு விரைவாகச் சென்று சேர்கிறது. விரைவாகவும் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

அதேவேளையில், பால் அருந்தும்போது அது உடலில் நீர்ச் சத்தை அதிக நேரம் தக்கவைப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலில் உள்ள சோடியம், ஒரு நுரைப்பஞ்சு போல் செயல்பட்டு உடலில் உள்ள தண்ணீரில் ஒட்டிக்கொண்டு, அதிகநேரம் நீர்ச் சத்து நீடிக்கத் துணைசெய்கிறது.

அதனால் உடலில் உற்பத்தியாகும் சிறுநீரின் அளவும் குறைகிறது.

வயிற்றுப் போக்கு ஏற்படும்போது தரப்படும் மருந்துத் தூளில் உள்ள குறைந்த அளவிலான சர்க்கரை, உப்பு, பொட்டாசியமும் அப்படித்தான் செயல்பட்டு நீர்ச் சத்தைத் தக்கவைக்க உதவுகின்றன.

நாம் அருந்தும் பானத்தின் அளவைப் பொறுத்து அது விரைவில் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டு ரத்தத்தோடு கலந்து உடலின் நீர்ச் சத்தை அதிகரிக்கிறது.

அதேவேளையில், நாம் அருந்தும் பானத்திலுள்ள ஊட்டச் சத்துப் பொருளைப் பொறுத்து அது வயிற்றிலிருந்து வெளியேறும் நேரம் தாமதமடைந்து நீண்ட நேரத்துக்கு நீர்ச் சத்து நீடிக்க உதவுகிறது.

நான்கு மணிநேர இடைவெளியில் உடலில் தண்ணீரைத் தக்க வைத்துக்கொள்ளும் 13 பானங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது ஆய்வுக் குழு.

அதில் கொழுப்பு குறைக்கப்பட்ட பால், ஆரஞ்சுச் சாறு, தேநீர் போன்றவை தண்ணீரைவிட தாகத்தை மேம்பட்ட வகையில் தணிக்க உகந்தவை என்று குறிப்பிடப்பட்டது.

உடலில் நீர்ச் சத்தைத் தக்கவைக்க சர்க்கரை, கொழுப்பு அல்லது புரதம் முக்கியமாக இருந்தாலும் அவை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் உள்ள நீர்ச் சத்தை அவை உறிஞ்சலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.


Top