Images
  • 01Jun Iyalba vaedama (1)

இயல்பா, வேடமா?

"நீங்கள் நீங்களாக இருங்கள்"... "உனது இயல்பு என்ன? அதற்கு இணங்க நடந்துகொள்!"... "எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் உன் மனத்தில் உள்ளன. அதைக் கேட்டுச் செயல்படு!"... இப்படி பலர் அவரவருக்கு அறிவுரை கூறி கேட்டிருப்போம்.

போட்டித்தன்மை மிகுந்த நவீன காலத்தில் அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளவேண்டும், அதாவது பிறருக்கு முன்னால் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்ட வேண்டாமே என்று சொல்லப்படுவதுண்டு.

சிலர் எப்போதுமே இயல்பாக இருப்பர். மகிழ்ச்சிகொள்ளும்போது, பிறரின் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, கோபத்தை வெளிப்படுத்தும்போது... எந்த நேரத்திலும் மனத்தில் தோன்றும் உணர்வுகளைச் சற்றும் யோசிக்காமல் அப்படியே கொட்டிவிடுவார்கள். இத்தகையோருக்கு, "மனத்தில் பட்டதைச் சொல்பவர்" என்ற நற்பெயரும் கிட்டும். அதே நேரத்தில் முகத்துக்கு நேரே எதையும் சொல்வதால் சிலரின் கோபத்துக்கும் ஆளாவதுண்டு. 

இவர்களுக்கு அதைப் பற்றிக் கவலை கிடையாது. "நான் நானாக இருக்கிறேன். யாரையும் திருப்திப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கு இல்லை," என்பது இவர்களின் நிலைப்பாடு. 

இப்படி வாழ அதீத மனவுறுதி வேண்டும். பலருக்கு அது சாத்தியமில்லை. சவால்களைத் தாண்டி அவ்வாறு வாழ்பவர்களை நாம் நிச்சயமாகச் சந்தித்திருப்போம். அவர்களைக் கண்டு பொறாமைப் படுவோரையும் நான் பார்த்திருக்கிறேன்.

நேரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வோர் மற்றொரு சாரார். இவர்களை நாம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி சந்தித்திருப்போம். இவர்களில் பலர் வேலை, குடும்பம் எல்லாவற்றையும் சிறப்பாகக் கையாளத் தெரிந்தவர்கள் போல் தோன்றும். உண்மையாகவும் இருக்கலாம். 

சூழலுக்குத் தகுந்தவாறு தங்களுடைய பிடிவாதத்தைவிட்டு நியாயமாக வளைந்து கொடுப்போரைப் பற்றி நான் சொல்லவில்லை.

சுயநலத்துக்காக எல்லாச் சந்தர்ப்பங்களையும் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முயலும் பச்சோந்திகள் பற்றித்தான் என் பேச்சு.

இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் ஊகிக்க முடியாத முகத்திரை எப்போதும் இவர்களின் கவசம். 

ஆனால் இவர்கள் நம்பகமானவர்களா ?

உண்மையைத்தான் சொல்கிறார்களா என்ற சந்தேகம் பிறருக்கு எழுவது இயல்புதானே.

இத்தகையோர் வாழ்க்கையில் கொடிகட்டிப் பறக்கலாம். ஆனால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைச் சம்பாதிப்பதில் இவர்கள் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருப்பார்கள் என்பது கேள்விக்குறியே. 

அவர்களைச் சுற்றி இருப்போரில் பலர், காரியவாதிகளாகவும் சயநலவாதிகளாகவும் இருக்கலாம். 

இயல்பாக நடந்துகொண்டு மனத்தில் பட்டதைப் படாரென முகத்துக்கு நேரே பேசுவோருக்குப் பெரிய நண்பர் வட்டம் இல்லாமல் இருக்கலாம். 

ஆனால் அவர்கள் சொல்வது நேர்மையான விமர்சனம் என்பது நம்முடைய உள்மனத்துக்குத் தெரியும்.

நாளடைவில் அதுவே அவர்கள் மீது பெருமதிப்பாக மாறும்.

அவர்களுக்கு நெருக்கமாக உள்ள ஒருசிலர் இணைபிரியாதவர்களாக இருப்பார்கள். அது போதாதா?

வேலையிடங்கள், ஏன் அரசியலில்கூட... முகத்திரையோடு செயல்படும் பச்சோந்திகள் பலர் உயர்ந்துகொண்டே இருப்பார்கள். 

இயல்பாக நடந்துகொண்டு உலகின் கண்டனத்திற்கு ஆளாகிவந்த ஒருவர் யாரும் எதிர்பாரா வேளையில் ஒரு நாள் உச்சிக்குச் சென்றதை நாம் பல சமயங்களில் பார்த்திருப்போம். 

இயல்பாக இருப்பது பிழைக்க உதவாது என்று சிலர் குறைகூறுவது உண்மைதானா? சிந்தியுங்கள்! உங்கள் கருத்து

Top