Images
  • pes1

மதிப்பு

“அம்மா, பென்சில் சின்னதாகிவிட்டது. புது பென்சில் வாங்கவேண்டும்.”

“அப்படியா! போன மாதம்தானே வாங்கிக் கொடுத்தேன். அதற்குள் சின்னதாகிவிட்டதா? அதுவும் இவ்வளவு சின்னமாகும் வரை காத்திருக்க வேண்டுமா? முன்கூட்டியே சொல்லியிருக்கவேண்டும். இரண்டு நாள் இதை வைத்துச் சமாளி. அப்புறம் பார்ப்போம்.”

துக்கம் தொண்டையை அடைக்கும். “ஐயோ! இதை வைத்து இன்னும் இரண்டு நாளா?”

இரண்டு அம்சங்கள் நெருடும். “பென்சிலை அடுத்த முறை இவ்வளவு சீவக்கூடாது. முன்கூட்டியே திட்டமிடவேண்டும்.”

1980களில் எனக்கும் என் அம்மாவுக்கும் இடையில் நடந்த உரையாடல் இது.

இதனால் இன்றும் ஒரு பொருள் தீர்ந்துபோவதற்கு முன் திட்டமிடவேண்டும் என்று தோன்றுகிறது. ஒன்று இருக்கையில் இன்னொன்றை வாங்கக்கூடாது என்று மனம் சொல்கிறது. அப்படி வாங்க நேர்ந்தால், குறைந்தபட்சம், உறுத்துகிறது.

இன்று.....

பள்ளியில் ஒரு பிள்ளைக்குப் பிறந்தநாளா? பேனா, பென்சில், ரப்பர். ஆசிரியர் பிள்ளையைப் பாராட்ட வேண்டுமா? பேனா, பென்சில், ரப்பர். வீட்டுக்கு வாங்குகிறோமா? பத்து, பன்னிரண்டு உள்ள டப்பாவை மொத்தமாக வாங்கிப் போடுகிறோம். வெளியில் சென்றால் கண்ணைக் கவரும் பல வண்ணப் பென்சில், ரப்பர்கள். கையில் பணம்... பிள்ளையைப் பல மணிநேரமாகப் பார்க்கவில்லையே என்ற மனஉறுத்தல். சரி. இதை வாங்கிக்கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவோம்.

விளைவு... வீட்டில் எங்கு திரும்பினும் பென்சில், ரப்பர், பேனா.

பார்த்துப் பார்த்துப் பென்சிலைச் சீவி, அப்பா அம்மாவுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்று நினைத்தோம் நாம். இன்றோ, பிள்ளைகள் அரை மணி நேரம் பென்சில் சீவி, அரை பென்சிலை வெளியில் எடுக்கிறார்கள்.

போனால் போகட்டும்... அதான் இவ்வளவு இருக்கிறதே வீட்டில்.

எனக்குள் பலமுறை எழுந்துள்ள கேள்வி, பள்ளிகளில் பொருட்கள் வாங்க எதற்கு ஒரு கடை?

அதில் ஏன் இத்தனை வகை ஒட்டுவில்லைகள், பிள்ளைகள் மனத்தை மயக்கும் புதுப்புது பென்சில்கள், ரப்பர்கள், வகையறாக்கள்? வேகவேகமாக உணவை முடித்துவிட்டு, இடைவேளையில் அங்கு வரிசை பிடித்து நிற்கின்றனர் பிள்ளைகள். சந்தையில் வந்திருக்கும் அனைத்துப் புதுவகை பேனா, பென்சில், ரப்பர்களையும் வாங்கவேண்டும்.

இது பென்சிலுக்கோ, பேனாவுக்கோ மட்டுமல்ல. பிள்ளைகள் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களுக்கும் பொருந்தும். வீட்டில் மட்டும் இதைச் சரிசெய்து, நிலைமையைச் சீராக்க முடியுமா என்றால்... அது சாத்தியமில்லை.

பொருட்கள் நம் வீட்டுக்குள் வருவதை நம்மால் தடுக்கமுடியுமா?

பிள்ளைகளைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் வளர்வதே இந்தச் சூழலில்தான். இதனால் பொருட்களின் மதிப்போ, பணத்தின் மதிப்போ, அவர்களுக்குத் தெரிவதில்லை. கையில் பணமிருந்தால் எதையும் வாங்கலாம், எதையும் செலவு செய்யலாம் என்ற எண்ணம் இயற்கையாகவே விதைக்கப்படுகிறது.

80களைப் போல் இன்று இருப்பது சாத்தியமல்ல. ஆனால் பெற்றோராகப்  பொருட்களின் பயன்பாட்டுக்கு வரையறை வகுத்துக்கொடுக்க நம்மால் முடியும். ஐந்தில் வளைத்தால், அது ஐம்பதுவரை நிச்சயம் வளையும்.

சிறுசிறு முயற்சிகள் இதற்குக் கைகொடுக்கும். ‘இல்லை’ என்று சொல்ல பெற்றோராகிய நமக்கு, மனம் இப்படிக் கனக்கவேண்டியதில்லை. “இல்லை” என்ற சொல்லைக் கேட்கும் பிள்ளைகளுக்குத்தான், இருப்பதைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் புரியும்.

என்றாவது ஒருநாள், கைப்பையைப் பார்த்து, நான் கொடுத்த பென்சில் எங்கே? ஏன் அதற்குள் இவ்வளவு சின்னதாகிவிட்டது என்று கேட்கலாம். பழைய கதைகளைக் கூறாமல், அவர்களுக்குப் புரியும் வகையில், தேவைக்கு அதிகமாக இருப்பதால், அதை அழிக்கும் உரிமை நமக்கு இல்லை என்பதை விளங்கவைக்க முயற்சி செய்யலாம்.

குறைந்தபட்சம் இரண்டு நாட்கள், லேசாகக் கிழிந்த பையுடன் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்புங்கள். சிறிய பென்சிலுடன் பிள்ளையைச் சில நாட்கள் எழுதவையுங்கள். வாரத்தில் ஓரிரு நாட்களாவது எளிய உணவுகளைக் கொடுத்துப் பாருங்கள். உணவின்றித் துன்பப்படும் பிள்ளைகளின் படங்களைக் காட்டுங்கள். இதிலெல்லாம் எந்தத் தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.

உடனுக்குடன் புதிதாய்க் கொடுத்து, பிள்ளையின் மனத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற நமது வேட்கையே அவர்களது பிற்கால குணமாகப் பிரதிபலிக்கிறது.  

சிறு சிறு முயற்சிகள் மூலம் பிள்ளைகளுக்குப் பொருட்களின் மதிப்பைக் கற்றுக்கொடுக்கமுடியும். நமது மறைந்த முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவை விட இதற்குச் சிறந்த உதாரணம் உலகில் இருக்கமுடியுமா?

பொருட்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் அவர். “ஒரு பொருள் முழுமையாகச் சேதமாகாவிட்டால், அதை ஏன் தூக்கி எறியவேண்டும்? அடுத்தவரை ஈர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை.” என்றார் அவர். ஒரு மேல்சட்டையைப் பல ஆண்டுகளுக்கு அவர் பயன்படுத்தியதை நம்மில் பலர் இன்னும் மறந்திருக்கமாட்டோம். மறக்கவும் கூடாது.

பிள்ளைகளுக்கு மதிப்பை விளக்குவோம்! மாற்றத்தை விதைப்போம்!உங்கள் கருத்து

Top