Images
  • TrumpD

சொல்லின் வலிமை

சொல்லுக்கு வலிமை அதிகம். கொட்டிய சொல்லை அள்ள முடியாது. ஆனாலும் எல்லா நேரங்களிலும் விளைவை யோசித்துப் பேசுவது சாத்தியமாகிறதா?
 “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”.

தீப்புண்கூட ஆறிவிடும். சொல்லால் ஏற்படுத்திய மனப்புண் ஆறாது என்கிறார் வள்ளுவர். அதனால்தான் நயம்பட உரை என்றனர் பெரியோர். எதையும் உரைப்பதில் தவறில்லை. அதை நயம்பட உரைக்கவேண்டும். அவ்வளவுதான்.
 கருத்து சுதந்தரம் என்பது எல்லாருக்கும் உண்டு. ஒருவர் ஒன்றைக் குறைகூறலாம், சாடலாம்.

ஆனால் அதை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்படும் வார்த்தைகளே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒருவர் கடுமையான சொற்கணைகளைப் பாய்ச்சும்போது, அது இலக்கை அடைந்து குத்திக் காயப்படுத்திவிடுகிறது. இதில் சொல்லை வெளிப்படுத்தியவருக்கு ஏற்படும் ஆத்ம திருப்தியைத் தவிர மிஞ்சுவது ஒன்றுமில்லை. அதுவும் தற்காலிக திருப்திதான். சொல்லுக்குச் சொல், காயத்துக்குக் காயம் என்று முடிவில்லாச் சங்கிலியாக இது தொடர்வதும் உண்டு. காலப்போக்கில் சில காயங்கள் ஆறிவிடுகின்றன. ஆனால் எல்லாக் காயங்களும் ஆறிவிடுவதில்லை.
 
சில உலகத் தலைவர்கள்கூட, தங்கள் கருத்துக்களைக் கடுமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தி சர்ச்சையில் சிக்கிவிடுவதுண்டு. அண்மை உதாரணங்கள், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், ஃபிலிப்பீன்ஸின் அதிபராக அண்மையில் பதவியேற்ற திரு. ரோட்ரிகோ டுடார்டே.
 
திரு. டிரம்பின் கடுமையான வார்த்தைகள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. தமது சொற்களின் வீரியத்தைத் திரு டிரம்ப் சற்றுக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் முன்வைக்கும் பரிந்துரைகளைத் திரு. டிரம்ப் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. குடியரசுக் கட்சியினருக்கோ இத்தகைய போக்கு, கட்சியின் செல்வாக்கைப் பெருமளவில் குறைத்துவிடுமே என்ற கவலை. ஆனால் யாருக்காகவும் நான் மாறமாட்டேன், நான் இப்படித்தான் என்று சொல்லிவந்தார் திரு. டிரம்ப். இப்போது வருத்தம் என்று சொல்லியிருக்கிறார். ஆயினும் அதை நம்ப மறுக்கின்றனர் பலர். 
 குற்றச் செயல்களைப் பெருமளவு குறைக்கவேண்டும், போதைப் புழங்கிகளை ஒழித்துக்கட்டவேண்டும், தம் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் திரு. டுடார்டே. நல்ல நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், கடுமையான சொற்களைக் கொண்டு அவர் சிலரைக் காயப்படுத்துவிடுகிறார் என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்.
 அரசியலோ, அன்றாட வாழ்க்கையோ, வார்த்தையின் வேகம் கூடிவிட்டால், அது ஏற்படுத்தவேண்டிய தாக்கம் குறைந்துபோகிறது. ஆனால் வார்த்தை மட்டும் காலங்கள் கடந்து நின்றுவிடுகிறது. ஒருவரைப் பற்றிய அபிப்ராயத்தை மனத்தில் அழுந்தப் பதிய வைக்கும் வலிமையும் வார்த்தைகளுக்கு உண்டு.
 சமூக ஊடகங்களின் ஆழமான பிடியில் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு விடியலும், நேற்றைய அசாத்தியத்தைச் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றை வேறு விதமாக வெளிப்படுத்தியிருக்கலாம் என்று மூளைக்கு எட்டுவதற்கு முன்பே, அது உலகின் பல்வேறு மூலைகளை எட்டிவிடுகிறது.
 எனவே வெல்லும் சொல்லா, கொல்லும் சொல்லா என்பதை நமது கட்டுப்பாட்டில் வைப்போம்!
 அன்புடன்
மீனா

உங்கள் கருத்து

Top