Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

'நா'கரிகம் !

நாகரிகம் தோன்றி, நாமெல்லாம் அதில் தேறி, நாட்களாகி விட்டன என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். நடையில், உடையில், உணவில், உபயோகிக்கும் பொருட்களில், நாகரிகத்தின் சாயல் நிறையவே படிந்துள்ளது.

வாசிப்புநேரம் -
'நா'கரிகம் !

இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டம், 19ஆம் நூற்றாண்டில்.

நாகரிகம் தோன்றி, நாமெல்லாம் அதில் தேறி, நாட்களாகி விட்டன என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். நடையில், உடையில், உணவில், உபயோகிக்கும் பொருட்களில், நாகரிகத்தின் சாயல் நிறையவே படிந்துள்ளது. ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மைதான் அது. ஆனால், நம் நாக்குக்கும்கூட நாகரிகம் உண்டே! அதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்தானே?

நாக்கின் நாகரிகம் நம் பேச்சில் பிரதிபலிக்க வேண்டும். நாகரிகமான பேச்சு என்றால் உச்சரிப்பா, அது தனித்து ஒலிக்கும் பாணியில் இருக்கவேண்டுமா என்ற கேள்வி எழலாம். காரணமே இன்றிப் பிறரைப் புண்படுத்தும், எள்ளி நகையாடி, கெக்கலிக்கும் பேச்சு நாகரிகமற்றது. அதைத் தவிர்ப்பது நாகரிகமானது.
மூச்சில்லாமல்கூட வாழ்ந்துவிடலாம் ஆனால் பேச்சில்லாமல் வாழவே முடியாது என்ற ரகத்தைச் சேர்ந்தவர்கள் நம்மில் பலர் உண்டு. அப்படிப் பேசும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களை நாம் என்றாவது யோசித்ததுண்டா?
‘நாம் பேசுவதை மற்றவர்தானே கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்கிறீர்களா?

அப்படி மற்றவர் மனத்தில் இடம்பிடிக்க வேண்டிய பேச்சுக்கென்று சில முக்கிய அம்சங்கள் உண்டு. அதில் வார்த்தை ஜாலங்கள் நிறைந்திருக்க வேண்டியதில்லை. உணர்வுப் பிரவாகமாய் அமைந்திருக்கவும் தேவையில்லை. வழக்கமான வார்த்தைகளே போதும். ஆனால் வாசமுள்ள வார்த்தைகள் இருக்க வேண்டும்.
வார்த்தைக்கு வாசம் உண்டா என்றால் நிச்சயம் உண்டு! மனம் மலர்ந்து இருந்தால் வார்த்தையில் வாசம் இருக்கும். மலர்ந்து .. என்றால் விரிந்து இருப்பது… குறுகலின்றி நன்கு விரிந்து இருப்பது.
சரி! மனம் ஏன் விரிந்து இருக்க வேண்டும்? ஏனெனில் மனம்தான் நாவைக் கட்டுப்படுத்துகிறது. உள்ளத்தின் ஒளி வாக்கினில் ஒளியுண்டாக்கும்!
“நாவன்றோ நட்பறுக்கும்” என்கிறது நான்மணிக்கடிகைப் பாடல் ஒன்று. கிட்டத்தட்ட நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாறாத உண்மை அல்லவா அது? ஆம்! நல்ல விதம் பேசிப் பேசி ஒரு நல்ல நட்பை உருவாக்க, நமக்கு எத்தனையோ நாட்கள் எடுக்கலாம். ஆனால் ஒரே வீச்சில் அதைத் தவிடுபொடியாக்கும் சக்தி, நம் நாக்குக்கு, அதாவது நம் பேச்சுக்கு உண்டு. அதனால்தான் கவனமாகப் பேச வேண்டும்.
அதிருக்கட்டும்! ஒருவருடன் பேசும்போது அவர் கண்ணைப் பார்த்துப் பேசும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அதுதான் நீங்கள் அவருக்குத் தரும் சரியான அங்கீகாரம். சிறப்பானதும்கூட. நீங்கள் பேசக்கூடிய நபர் உங்கள் எதிரே இருக்க, வேறெங்கோ பார்வையைப் பதித்து விட்டேற்றியாகப் பேசுவது, அல்லது வேறு வேலைகளைச் செய்துகொண்டே பேசுவது , இதெல்லாம் உங்கள் அலட்சியத்தையும், அவமதிப்பையும் பிரதிபலிக்கும் செயல்கள்.
அப்படிக் கண்ணைப் பார்த்துப் பேசும்போது அவருடைய ஈடுபாட்டையும் புரிந்துகொள்ளலாம். பேச்சைத் தொடர வேண்டுமா நிறுத்திக்கொள்ளலாமா என்று முடிவெடுக்க முடியும். அதாவது நம் பேச்சு, நம் வார்த்தை, நம் கட்டுப்பாட்டில் இருக்கும். பேசிவிட்டுப் பின்னர் அதைத் தவிர்த்திருக்கலாமோ என்று தவிக்க வேண்டியதில்லை.
‘நம் கட்டுப்பாட்டில் வருவதுதான் வார்த்தை. கட்டுப்படுத்த முடியாவிட்டால் அதற்குப் பெயர் வாந்தி’ என்று என் நண்பர் ஒருவர் கொஞ்சம் கடுமையாகச் சொல்வதுண்டு. நம் வாயிலிருந்து வருவது வார்த்தையாக இருப்பது நம் கையில்தான் இருக்கிறது.
சரி, நாகரிகமாய், கவனத்தோடு, கண்ணும் கண்ணும் நோக்கி, கட்டுப்பாட்டுடன், பேசினால் போதுமா என்றால், போதாது என்பதுதான் பதில்!

பேச வேண்டிய நேரத்திலும் பேசிவிட வேண்டும். யாரோ ஒருவரின் வெற்றிக்கு உடனடியாக வாழ்த்துச் சொல்லாமல் அல்லது ஆறுதல் கூறவேண்டிய நேரத்தில் உடனடியாகச் சொல்லாமல் தள்ளிப்போட்டு, பிறகு 'Too Late " ஆகிவிட்ட அனுபவங்கள் நமக்கு ஒன்றிரண்டாவது இருக்கும். உண்மையைச் சொல்லுங்கள்! அந்தத் தேவையற்ற தாமதத்தை நாம் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்தானே?

நாம் சொல்லாததால் அவர்கள் வெற்றியோ, இழப்போ மாறிவிடப் போவதில்லை. ஆனால், நம் வார்த்தைகளும் சேர்ந்து அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் உற்சாகத்தையோ, ஆறுதலையோ தரக்கூடும்.

என் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்வார். ‘வகுப்புக்கு வந்து வணக்கம் சொல்லும் மாணவனைவிட வராத மாணவனைத்தான் என் கண் தேடுகிறது ‘ என்று!
வெற்றியின் ஆரவாரத்துக்கிடையிலும் நம் வார்த்தையை, அதன் உண்மையை ஒரு நெஞ்சம் எதிர்பார்த்திருக்கலாம். இழப்பின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் நம் வார்த்தையைப் பிடித்துக்கொண்டு எழுந்துவர ஒரு நெஞ்சம் காத்திருக்கலாம். யாரறிவார் ? எனவே எதையும் தள்ளிப் போடாமல் பேசிவிடுவதும் முக்கியம்.

கவனமாய்ப் பேசுவது நாகரிகம்; கண்ணைப் பார்த்துப் பேசுவது நாகரிகம்; வார்த்தைகளில் கட்டுப்பாட்டுடன், சரியான நேரத்தில் பேசுவது நாகரிகம்.

அத்துடன், நாலைந்து பேர் கூடியிருக்கும் இடத்தில் அனைவருக்கும் புரியக்கூடிய மொழியில் மட்டுமே பேசுவது நாகரிகம்.
கூட்டத்தில் கவனத்தை ஈர்க்கவேண்டுமென்றே குரலை உயர்த்திப் பேசாமல் இருப்பதும் நாகரிகம்.

நா காப்போம்! நாகரிகமும் காப்போம்!

நட்புடன்
கலைச்செல்வி வைத்தியநாதன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்