Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

எல்லாம் இன்ப மயம்

தலைப்பைப் பார்த்ததும் கமலின் திரைப்படமோ என்ற ஐயம் எழுந்திருக்கலாம். சிலருக்கு எம்.எல். வசந்தகுமாரி பாடிய பழைய பாடல் நினைவுக்கு வந்திருக்கலாம். இரண்டும் இல்லை.

வாசிப்புநேரம் -

ஆயிரம் ஆயிரம் கற்றாலும் அனுபவத்துக்கு ஈடேது. இன்று கற்றது நாளை காலாவதியாகிவிடுகிறது.

நாளை கற்பது நாளை மறுநாள் மாறிவிடும். ஆனாலும் கற்றுக்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது. ஓடினால்தான் நதி. பாடினால்தான் குயில். ஆடினால்தான் மயில். நிற்காமல் சுற்றினால் பூமி. சுற்றிச் சுழன்றால் காற்று. அறம்வழி கற்றால் மனிதன்.

கற்பது என்பதைப் பள்ளியில் பயில்வது என்று மட்டும் பொருள்கொள்ளக் கூடாது. பலவற்றையும் கற்றுத் தெளிந்துகொள்வதே அது. கற்பது என்பது இன்றைய காலக்கட்டத்தில் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அது கல்வியாக இருக்கலாம். மற்ற திறன்களாக இருக்கலாம். தொடர்ந்து கற்பது மனிதகுலத்தின் இயல்பு. தேவை.

அதே நேரத்தில் அனுபவமும் முக்கியம். அனுபவங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று கேட்பவரும் இருக்கவே செய்கின்றனர். உண்மைதான். அனுபவம் மட்டும் இருந்தால் போதாதுதான். அதைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இளையர்களுக்கு அதனைக் கடத்த வேண்டும். இளையர்களும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். திறந்திருக்கும் குவளையில்தானே நீர் ஊற்ற முடியும். அதுவும் ஓர் அனுபவமே. இரு தரப்பினருக்கும்.

நல்லது எது? தீயது எது? என்று பகுத்தறிய பட்டப்படிப்பு தேவையில்லை. சம்பவங்கள் பந்திவைக்கும் படிப்பினையே போதும். அதுவே பட்ட அறிவு. அனுபவத்தை ஒருவர் பகிர்ந்துகொள்ளலாம். அதன் மூலம் அடுத்தவர் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாமே தவிர உணரமுடியாது. அதற்கு அவரும் அந்தச் சூழலைச் சந்தித்தாக வேண்டும். இதைத்தான் கவிஞர் கண்ணதாசன்,

       பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
       பிறந்து பாரென இறைவன் பணித்தான்

எனும் கவிதையில் அழகாகச் சொல்லியிருப்பார். பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். தெரியாதவர்கள் படித்துப்பாருங்களேன். அனுபவம் புதுமையாக இருக்கும்.

இந்த ஆண்டும் 365 நாட்கள் ... இல்லையில்லை 365 அனுபவங்கள்... அவற்றை நல்லவையாக உருவாக்க உள்ளத்தளவில் தயாராவோம். உள்ளம் உண்மையாக இருந்தால் என்றுமே எல்லாம் இன்ப மயம்தான்...

பூத்திருக்கும் புத்தாண்டில்
மனம் மலரட்டும்
புன்னகை படரட்டும்
மகிழ்ச்சி பரவட்டும்
வெற்றிகள் தொடரட்டும்...


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்