Images
  • Numbers

மதிப்பு, எண்கள்!

தேர்வுகளில் மாணவர்கள் எத்தனை கேள்விகளுக்குச் சரியான விடைகளை அளித்துள்ளனர், எத்தனைக்குத் தவறான பதில்களை வழங்கியிருக்கின்றனர் என்பதைக் கணக்கிடுவதே மதிப்பெண்கள். குறைவான மதிப்பெண்களைப் பெறும் ஒரு மாணவரின் திறன் குறைவு, அதிகம் பெறுபவர் புத்திசாலி என்று அர்த்தம் கிடையாது. இதுதான் உண்மை.

ஆனால் மதிப்பெண்கள் ஒருவரின் அறிவுத் திறனுக்கான அளவுகோலாக மாறிவிட்டது இந்தக் காலத்தில். சுமார் 22 ஆண்டுகளுக்கு முன், தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது நான் எனது சக மாணவர் ஒருவரின் தேர்வு மதிப்பெண்களைப் பற்றி யதார்த்தமாகக் கேட்டேன். உள்நோக்கம் ஏதும் இல்லை. ஆனால் அது பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. "அவன் எதற்காக என் மகனிடம் மதிப்பெண்களைக் கேட்டான். எதற்கு இந்த வேண்டாத வேலை?" என்று நான் மதிப்பெண் கேட்ட மாணவரின் தாயார் புலம்பினார் என்று தெரியவந்தது. இதில் என்ன பிரச்சினை என்பது எனக்கும் என் அம்மாவுக்கும் புரியவில்லை. வம்பு எதற்கு, யாரிடமும் கேட்கவேண்டாம் என்று முடிவுசெய்தோம்.

சில நாட்களுக்குப் பிறகு இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அம்மாவின் தோழி ஒருவர் கிண்டலாகச் சொன்னார், "உங்களுக்குத் தெரியாதா? ஒருவரின் மதிப்பெண்களைக் கேட்டறிவது பெரிய பாவம். கேட்டால், உங்கள் மகனையும் வேறு ஒருவனையும் ஒப்பிடுவதாகப் பொருள்,"... பா! சாதாரணமாக மதிப்பெண்களைக் கேட்டறிவதில் இத்தனை உள்குத்தா? சிரிப்பு வந்தது அம்மாவிற்கு.

இந்தப் போக்கு இன்றுவரை இருக்கிறது. காரணம் என்ன? குறைவான மதிப்பெண்களைப் பெற்றால், எனது பிள்ளை அறிவற்றவர் என்று யாரேனும் நினைத்துவிடுவாரோ என்ற பயம்... அதிக மதிப்பெண்கள் எடுக்காவிடில் பிள்ளையின் எதிர்காலமே பாழாகிவிடுமோ என்ற அச்சம்... அதற்குப் பின் எவ்வாறு சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடப்பது என்பதைப் போன்ற தேவையற்ற கற்பனை... இம்மாதிரியான பயம், சொல்லும்போதே சிலருக்குச் சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் சிந்தித்துப் பாருங்கள், இவை யாவும் உண்மை.

தேர்வில் சரி, தவறு ஆகியவற்றின் எண்ணிக்கையை மதிப்பிடுவதே மதிப்பெண்கள். மாணவரின் ஆற்றலை மதிப்பிடும் எண்கள் இல்லை அவை! குறைவான மதிப்பெண்களைப் பெற்றால் அந்த மாணவர் தேர்வில் சரிவரச் செய்யவில்லை என்று மட்டும்தான் அர்த்தம். அதனால் ஆசைப்பட்ட பள்ளிக்குச் செல்லமுடியவில்லை என்றால் அதற்குத் தேவையான மதிப்பெண்களைப் பெறவில்லை என்பதே பொருள். அது சம்பந்தப்பட்ட மாணவரின் ஆற்றலின் வெளிப்பாடு அல்ல.

சிறந்தவை என்று பலர் சொல்லும் பள்ளிகள், அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் படிக்கும் கல்வி நிலையங்கள். அத்தகையவற்றில் பயிலும் மாணவர்கள் அறிவாளிகள்... இதர பள்ளிகளில் படிப்போர் சுமாரானவர்கள்... என்பன எல்லாம் நாமே உருவாக்கிக்கொண்டவை.

அனைவரும் திறமைசாலிகளே. ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கிறது. ஒருவருக்கு எழுவதில் திறமை இருக்கிறது என்றால் இன்னொருவர் நல்ல பாடகராக இருக்கலாம். வேறு ஒருவரின் பலம் அறிவியலாக இருக்கலாம். அவர் சிறந்த விஞ்ஞானியாக வரலாம். வாழ்நாளில் பொதுவாகவே தேர்வுகளில் சரியாகச் செய்யாத ஒருவருக்கு மனிதர்களைக் கையாள்வதில் திறமை இருக்கலாம். அவர் நல்ல விற்பனை அதிகாரியாக உருவெடுக்கலாம். அல்லது ஒரு நட்சத்திர விளையாட்டு வீரர் அவருக்குள் ஒளிந்திருக்கலாம்.

இவை உதாரணங்களே. நான் யாரையும் வகைப்படுத்தவில்லை.

நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் பெற்றோர் என்ன சொல்வரோ என்ற பயத்துடன் வாழும் மாணவர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். தேர்வில் சிறப்பாகச் செய்வதை மட்டுமே கருத்தில்கொண்டு பயத்துடன் இயங்கும் ஒருவரால் எவ்வாறு முழுமையான கல்வியை மேற்கொள்ளமுடியும்?

ஏட்டுக் கல்லி மட்டும் கல்வி அல்ல. அனுபவக் கல்வி என ஒன்று உள்ளது. ஏட்டுக் கல்வி எவ்வளவு முக்கியமோ அனுபவக் கல்வியும் அவ்வளவு முக்கியம். ஏட்டுக் கல்வியில் விட்டதை அனுபவத்தில் பிடித்துக்கொள்ளலாம். இதுதான் வாழ்க்கை. இதைச் சாத்தியமாக்கியவர்கள் பலர். உடனே பிரபலங்களை உதாரணங்களாகத் தேடவேண்டாம். நம்மிடையே அத்தகையோர் பலர் இருக்கின்றனர். கண்ணைத் திறந்து பாருங்கள், பலரிடம் பேசுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை. நற்பண்புகள், குணாதிசிங்கள், மன வலிமை, உடல் வலிமை எனப் பல அம்சங்கள் ஒரு மனிதனுக்கு அடையாளம் தருகின்றன. இவற்றில் கல்வி ஓர் அம்சம். அந்த ஒன்றில் ஏட்டுக் கல்வி ஓர் அங்கம். தேர்வுகள், மதிப்பெண்கள் ஆகியவை மட்டும் ஏட்டுக் கல்வியல்ல. பிழைக்க ஆயிரம் வழிகள், முன்னுக்கு வருவதற்கு ஏதும் தடையில்லை. வெற்றிக்கும் நமக்கும் இடையில் நிற்பது நாமே!

அவ்வாறு இருக்கையில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவில்லை. சிறந்த பள்ளி என்று சொல்லப்படும் கல்வி நிலையங்களுக்குச் செல்லாத பிள்ளைகள் அல்லது பட்டக் கல்வி வரை போகாத மாணவர்கள் உள்ளிட்டோரின் அறிவுத் திறனைக் குறைத்து மதிப்பிடுவது நியாயமா? அவ்வாறு செய்வது மாணவர்களைப் புண்படுத்துவதோடு அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைப்பதாகாதா?

இதன் பின்விளைவுகள் கடுமையானவை. பல இளம் மாணவர்கள் நெருக்குதலைத் தாங்கமுடியாமல் தற்கொலை வரை செல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மாணவர்களை மனிதர்களாகப் பார்ப்போமே. படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால் எதிர்காலம் இல்லை என்று பொருள் அல்ல.

ஏட்டுக் கல்வி அவசியம்தான், மறுக்கவில்லை. ஆனால் அது நம்மை வழிநடத்தவேண்டும், பயமுறுத்தக்கூடாது. ஏட்டுக் கல்வி தன்னம்பிக்கையை அளிப்பதற்கே, மிரட்டுவதற்கு அல்ல.


உங்கள் கருத்து

Top