Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

அழகு ஆயிரம்...

மெலிந்த தேகம், வெண்மையான சருமம், பெரிய கண்கள், கூர்மையான மூக்கு, வரிசையான பற்கள்… இவற்றைப் போன்று உடல் ரீதியான அம்சங்கள் மட்டும்தான் அழகா? 

வாசிப்புநேரம் -

அழகு என்பது என்ன?

அது எதைக் குறிக்கிறது?

மெலிந்த தேகம், வெண்மையான சருமம், பெரிய கண்கள், கூர்மையான மூக்கு, வரிசையான பற்கள்…

இவற்றைப் போன்று உடல் ரீதியான அம்சங்கள் மட்டும்தான் அழகா?

அல்லது ஒருவர் நடந்துகொள்ளும் விதம், அவரின் பேச்சு, விடாமுயற்சி, தனித்திறமை, அவர் காட்டும் பரிவு, அன்பு போன்ற குணங்களிலும் அழகு வெளிப்படுமா?

‘அழகு’ என்று கருதப்படும் அங்க அமைப்புகளின் மொத்த உருவாகப் பெரும்பாலோர் இருக்கமாட்டார்கள். 

உணர மட்டுமே முடிகின்ற நற்பண்புகளின் அழகைவிட கண்களுக்குத் தெரியும் அங்க அமைப்புகளின் அழகு உயர்ந்தது என்று எண்ணத் தொடங்கிவிட்டோமா?

மெலிந்த உடலுடன் இருந்தால்தான், வேலை வாய்ப்பு.

ஒல்லியாகச் 'சிக்கென்று' இருந்தால்தான் திருமண சம்பந்தம். 

அழகாக இருக்கும் குற்றவாளிகளுக்குக் குறைந்த தண்டனை கிடைக்கும் சாத்தியம் இருப்பதுகூட ஆய்வுகளில் புலப்பட்டதாக அனைத்துலகச் செய்தி நிறுவனம் ஒன்றின் இணையத்தளம் கூறுகிறது. 

‘அழகாக இருப்பவர்கள் குற்றம் புரியும் சாத்தியம் குறைவு என்று சமுதாயம் கருதும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம்’… 

இதை நான் சொல்லவில்லை. 

எழுத்தாளர் கேத்தரின் ஏ. சேண்டர்சன், 'Social Psychology' எனும் தமது புத்தகத்தில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

திறமைகளும் நற்பண்புகளும் இரண்டாம் பட்சம் ஆகிவிட்டனவா?

வெட்டிய பழத்தைக் குத்திச் சாப்பிடுவதற்குப் பயன்படுத்தும் குச்சியைக் காண்பித்து, 'பெண்ணென்றால் இப்படி இருக்க வேண்டும்' என்று கூறியவர்களைக் கண்டிருக்கிறேன். 

"உடலில் ஏதேனும் பிரச்சனையா? ஏன் எடை கூடிவிட்டது?" அல்லது "ஏன் எடை இவ்வளவு குறைந்துவிட்டது?" என்று கேட்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஐயோ ஏன் இவ்வளவு சாப்பிடுகிறாய் என்று அதிர்ச்சியூட்டுபவர்கள் உண்டு...

அதற்கு மாறாக ‘இவ்வளவு குறைவாகச் சாப்பிட்டால் எப்படி எடை கூடும்?’ என்போரும் இருக்கவே செய்கிறார்கள்.

மற்றவர்களின் கருத்துக்கேற்ப நடந்துகொள்ளவேண்டும் என்று சட்டம் ஏதேனும் உண்டா என்ன?

அழகு என்பது நாட்டுக்கு நாடு, கலாசாரத்துக்குக் கலாசாரம், ஒருவருக்கு ஒருவர் என மாறுபடுகிறது. 

அதை எடுத்துக்காட்ட பற்பல சோதனைகளையும் ஆய்வுகளையும் இணையத்தில் காணமுடியும். 

ஒல்லியாக இருந்தால்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறும் தரப்பினரும் இருப்பர். 

ஒல்லியாக இருந்து உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கின்றனர்.

இவர்களில் சிலரை நான் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.

சற்றுப் பருமனாக இருந்து ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்போரையும் பார்த்திருக்கிறேன்.

வெளித்தோற்றத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் முற்றிலும் தொடர்பு இல்லை என்று கூறமாட்டேன்.

ஆனால் வெளித்தோற்றத்தைக் காரணமாகக் காட்டி ஒருவரைக் கூனிக் குறுகச் செய்வது தவறு என்பதை நான் நன்கு அறிவேன். 

ஒருவருடைய உருவம் எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அவருக்கே உண்டு.

மற்றவர்களுக்கு அக்கறை இருக்கலாம்.

அதிகாரம் இருக்க முடியுமா?


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்