Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

நானே நானா!

"எல்லோருக்கும் அடுத்தவரின் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பது தெரிகிறது. ஆனால் தனது வாழ்க்கையை எப்படிச் சரிசெய்வது என்பதுதான் தெரிவதில்லை..."

வாசிப்புநேரம் -

"எல்லோருக்கும் அடுத்தவரின் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பது தெரிகிறது. ஆனால் தனது வாழ்க்கையை எப்படிச் சரிசெய்வது என்பதுதான் தெரிவதில்லை..." இது, 'The Alchemist' நாவலில் எழுத்தாளர் பாவ்லோ கொவெல்லோ முன்வைத்த பல கருத்துகளில் ஒன்று.

பொதுவாக அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி பிறரைப் பற்றிக் குறைகூறுவோம், இதை இப்படிச் செய்திருக்கலாமே, அதை அப்படிச் செய்திருக்கலாமே என்று அறிவுரை சொல்வோம். பிழை கண்டுபிடிப்பதும் பிறரின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு சொல்வதும் நமக்குக் கை வந்த கலை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல, மனித இயல்புதான்.

ஆனால் அதையும் தாண்டி தன் வாழ்க்கையைச் சரியாக கவனிக்காமல் அடுத்தவர் என்ன செய்கிறார், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை வேவு பார்ப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர் சிலர். "இந்த ஆளுக்கு வேறு வேலையில்லையா?" என்று அத்தகையோரைப் பார்த்து கோபத்துடன் சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். அடுத்தவரின் வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல் எந்த வம்புக்கும் போகாமல் நம் மீதும் நம்மைச் சார்ந்தவர்கள் மீதும் அதிக அக்கறை காண்பித்தால் நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதைத்தான் பாவ்லோ கொவெல்லோ கிண்டலாகச் சொல்கிறார்.

போட்டித்தன்மை தாண்டவமாடும் நவீன உலகில் இது சாதாரணமான ஒன்றாகவே மாறிவருகிறதோ என்ற உணர்வு எழத் தொடங்கிவிட்டது. சிலர் ஒரு படி மேலே சென்று அடுத்தவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து அதிலிருந்து பிரச்சினையை உருவாக்கி அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் முயற்சியில் படு தீவிரமாக இறங்குவர். எதற்கு இந்த வீண் வம்பு? அத்தகைய செயல்களால் வரும் மகிழ்ச்சியும் வெற்றியும் நிரந்தரமல்ல. பலரின் கண்டனத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகலாம்.

உளவுத் துறை அதிகாரிகள்தான் அத்தகையச் செயல்களில் ஈடுபடுவர். அது அவர்களின் வேலை. அந்தத் திறன்களைக் கொண்டிருப்போரை நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும்போது சிரிப்பு வருகிறது.

சில நேரங்களில் பல இன்னல்களைச் சந்தித்து அலுத்துப்போனவர்கள்தான் அத்தகையப் பாதையை நோக்கிச் செல்வர். அவ்வாறு சென்றால் இருக்கும் நல்ல குணங்களைக்கூட இழக்க நேரிடலாம். எனவே இதனை உணர்ந்து எந்தத் துன்பம் வந்தாலும் முழுமூச்சாக நமது காரியத்தில் மட்டும் கண்ணாக இருந்தால் வெற்றி நமக்கே. இதை கடைப்பிடித்தால் நிம்மதியும் தானாக வரும்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது, மனம் கீழும் மேலும் புரளாது..." இவை, மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பொன்னான வரிகள்.

நல்லதைச் செய்து யாவருக்கும் நல்லதையே நினைப்போமே. நம் திறமை மீது நம்பிக்கை இருந்தால்,  உழைக்கவேண்டும் என்ற உறுதி இருந்தால் போதும். அடுத்தவருக்கு எப்போதுமே தீங்கு நினைக்கத் தோன்றாது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்