Images
  • pots

நிறைகுடம் தளும்புமா? தளும்பாதா?

அடிக்கடி பெருமையடித்துக்கொள்வோரை அதிகம் பார்க்கமுடிகிறது இந்தக் காலத்தில். உலகளவிலேயே இந்தப் போக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்ற கருத்தும் சிலரிடையே உள்ளது.

நிறைகுடம் தளும்பாது. இது உண்மைதானா? திறமைசாலிகள் என்று கருதப்படும் பலர் அதிகம் பேசுகிறார்களே! பிறரை இழிவாகப் பார்க்கிறார்களே. அதற்காக அத்தகையோரிடம் திறமை இல்லையா என்ன?

இவை நியாயமான கேள்விகள்தாம். பழமொழி தவறோ என யோசிக்கவைக்கும் கேள்விகள். இவை சரிதானா? பேசுவோமா?

தன்னைப் பற்றி உயர்வாகப் பேசுவதோடு பிறரை இழிவுபடுத்துவோர் உண்மையில் திறமைசாலிகளா? அவர்கள் பேசுவதைக் கேட்டு மயங்குவோர் அவர்களைப் பிரபலப்படுத்துகிறார்களா?

"அவர் பேசிப் பேசியே முன்னுக்கு வந்தவர்" எனச் சிலர் கூறுவதுண்டு. இது உண்மையாகக்கூட இருக்கலாம்.

சில நாட்களுக்கு முன் உறவினர் ஒருவரின் திருமணத்தைக் காண இந்தியாவிற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒருசிலரின் முகத்தில் ஆணவம் தாண்டவமாடியது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா? இவர்கள் நடந்தகொண்ட விதமும் அதை உறுதிப்படுத்தியது.

திருமணத்தில் எனது சொந்தக்காரர் ஒருவர், மிகவும் அமைதியானவர், பண்பானவர். அவரது பேச்சில் மரியாதையும் அன்பும் கொஞ்சும். ISRO எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் முக்கியப் பொறியாளராக வேலை செய்கிறார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட உலகின் பல்வேறு அமைப்புகள் அவருக்கு வேலைகொடுக்கத் தயாராய் இருந்ததும் தெரியவந்தது. 

இந்தியாவின் காலஞ்சென்ற முன்னாள் அதிபர் அப்துல் கலாமுடனும் அவரைச் சார்ந்த முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் சிலருடனும் இணைந்து வேலை செய்திருக்கிறார் அவர். கை நிறையச் சம்பளம், மாளிகை போன்ற வீடு, நல்ல குடும்பம் அனைத்தும் உண்டு. படிக்கும் காலத்தில் பலரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார், பல விருதுகளையும் பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

இவர் கர்வம் கொண்டால் தவறு என்ன என்று நினைக்கும் அளவிற்குத் திறமைசாலி. இப்படிப்பட்டவரிடம் அவ்வளவு அடக்கம், அத்தனை பணிவு.
இது ஓர் உதாரணம்தான். இந்த மாதிரி பலரைச் சந்தித்திருக்கிறேன். ஏன், இதே திருமணத்திலேயே இவரைப் போன்று வேறு சிலரும் இருந்தனர்.

நிறைகுடம் தளும்புமா, தளும்ப வாய்ப்புண்டா? என்ற கேள்விகளுக்கு இடையில் நிறைகுடம் என ஒருவரை இந்தக் காலத்தில் தவறாகப் புரிந்துகொண்டு வருகிறோமோ என்ற சந்தேகமும் எழவே செய்கிறது.

அண்மையில் மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி, நல்ல குத்துச் சண்டை வீரர் எனப் பலராலும் போற்றப்பட்டவர், பல விருதுகளை வென்றவர். ஆனால் அவர் அதிகம் பேசுபவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பேசியே இதர வீரர்களின் மனநிலையைப் பாதிப்படையச் செய்து போட்டிகளை வென்றிருக்கிறார் என்றும் சிலர் சொல்வதுண்டு.

பேசுவதும் ஒரு திறமைதான். பிறரின் மனநிலையை நன்கு கணித்து, பேச்சை அதற்கேற்றவாறு வடிவமைத்து போட்டி தொடங்குவதற்கு முன்னரே எதிர்த்தரப்பினரைப் பலவீனப்படுத்துவது என்பதும் ஒரு கலைதான். இது நியாயமா இல்லையா என்ற விவாதம் இப்போது தேவையில்லை.

காற்பந்தில், முன்னாள் மென்செஸ்ட்டர் யுனைட்டட் நிர்வாகி அலெக்ஸ் ஃபெர்குசன் இதில் கெட்டிக்காரர். சில நேரங்களில் வரம்பு மீறியும் பேசுவார். ஆனால் அவரின் பேச்சுக்கு அசராமல் தங்களின் அணியை ஊக்குவித்த பல நிர்வாகிகள் இருந்தனர். அது ஃபெர்குசனுக்கும் தெரியும். பேசுவதோடு நிற்காமல் உத்திகளையும் நன்கு கையாளத் தெரிந்த கெட்டிக்காரர் ஃபெர்குசன். இவ்வளவு பேசுபவர், தனது சாதனைகளையும் வெற்றிகளையும் பற்றி உயர்வாகப் பேசமாட்டார். அந்த வகையில் அவரும் ஒரு தளும்பாத நிறைகுடம்தான்.
எவ்வளவு சாதித்தபோதும் அடக்கத்தைப் பின்பற்றும் பல திரை நிட்சத்திரங்கள், கலைஞர்கள், தலைவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிலர் அப்படி இருக்கிறார்கள். சிலர் இப்படி இருக்கிறார்கள்.
உறுதியாக எதையும் சொல்ல முடியாததால் நிறைகுடம் தளும்பாது என்று திட்டவட்டமாகக் கூறமுடியுமா?
நிறைகுடம் தளும்புமா? தளும்பாதா?

உங்கள் கருத்து

Top