Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

“ரோஜா, ரோஜா!”

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், வேலையில் முன்னேற வேண்டும், பெரிய வீடு வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும் என்று அனுதினமும் பாடுபட்டு உழைப்பவர்கள் பல பேர். 

வாசிப்புநேரம் -

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், வேலையில் முன்னேற வேண்டும், பெரிய வீடு வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும் என்று அனுதினமும் பாடுபட்டு உழைப்பவர்கள் பல பேர்.

அத்தகைய நிலையில் மற்றவற்றுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதுகூட இயலாத ஒன்றாகிவிடுகிறது. எதற்காகச் சிரமப்பட்டு உழைக்கிறோமோ, அதன் பலனை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.

எல்லாவற்றுக்கும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. சொல்வது எளிது, செய்வது சிரமம் என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. ஆனால் முயன்றுதான் பார்க்கலாமே?

It's time to stop and smell the roses என்று ஆங்கிலத்தில் ஒரு மரபு உண்டு. வாரத்துக்கு ஒரு நாளேனும் குடும்பத்துடன் சில மணி நேரம் வெளியே சென்றுவரலாம். சேர்ந்து உணவு உண்ணலாம்.

வேலையைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற மனப்பான்மையைக் கைவிட்டு வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ அழகான அம்சங்கள் இருப்பதை நாம் உணர வேண்டும்.

வேலையில் சற்றுத் தொய்வு ஏற்பட்டால் அல்லது சில பொறுப்புகள் குறைந்தால் தலையில் கையை வைத்துக்கொண்டு கலங்கத் தேவையில்லை. மாறாக, அதனை ஓர் அருமையான வாய்ப்பாகவே கருத வேண்டும்.

நெடுநாளாக மேற்கொள்ள விரும்பிய ஒரு பொழுதுபோக்கைத் தொடங்கலாம். புத்தகம் வாசிக்கலாம். பிள்ளைகளுடன் கடற்கரைக்குச் சென்றுவரலாம்.
அதுவும் சிங்கப்பூரில் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் இடங்களுக்கா பஞ்சம்? எனது நண்பர் ஒருவர் கூறுவது போல, உலகின் அத்தனை பொக்கிஷங்களும் நமது அரும்பொருளகங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

எகிப்துக்குச் செல்லாமலேயே அதன் வரலாற்றையும் கலாசாரத் தொன்மையையும் அறிந்துகொள்ளலாம். உலகப் புகழ்பெற்ற ஓவியங்களைப் பார்த்து ரசிக்கலாம். இதற்கு அதிகப் பணமும் செலவழிக்க வேண்டியதில்லை. 

கலை, கலாசார நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அதிக தூரம் பயணம் செய்யத் தேவையில்லாமல் அவற்றுக்குச் சென்றுவரலாம். நமது ரசனைகளை வளர்த்துக் கொள்ளலாம்.

வாழ்க்கையில் இதுவரை எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும். Smell the roses என்பது இது போன்ற வாழ்க்கையின் அழகான பரிமாணங்களை ரசிப்பது. 

அப்படி ரோஜாக்களைத்தான் நுகர வேண்டும் என்றால் தீவு முழுவதும் பரவிக்கிடக்கும் பூங்காக்களுக்குச் சென்றுவரலாம். ஒரு நாளில் ஒரு பூங்காவைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். 

இயற்கையான சூழலில் சற்று உலாவினால் எந்தக் கவலையும் பஞ்சாய்ப் பறந்துபோகும். மன உளைச்சலுக்கோ, மனச் சோர்வுக்கோ வேலையிருக்காது. 

கரையோரப் பூந்தோட்டங்களுக்குச் சென்றால் ரோஜாக்களை மட்டுமல்லாது அவ்வப்போது குவளை மலர்களையும் பார்த்துப் பரவசமடையலாம். பூங்காவிற்குச் செல்ல நேரமில்லை என்றால் வீட்டிலேயே பூஞ்செடிகளை வளர்த்து அவை பூப்பூப்பதைக் கண்டு மகிழலாம்.

மலர்களில் பல வண்ணமுண்டு, வகையுண்டு. ஒவ்வொரு மலருக்கும் தனித்துவமான மணமும் குணமும் உண்டு. இவையனைத்தையும் ஒருங்கே சேர்த்து, காண்போரைக் கவர்ந்திழுக்கும் இயற்கைக்கும் தனி வாசனை உண்டு. அதை நுகர்ந்தால் அந்த வாசனை நம்மை ஒருபோதும் தனித்துவிடாது. 

தொடர்ந்து பேசுவோம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்