Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

கறுப்புதான் எனக்குப் பிடிச்ச...

நிறப்பாகுபாடு. ஒருவரின் நிறத்தைக்கொண்டு அவரைப் பாரபட்சமாக நடத்துவது. பழங்காலத்தில் இருந்தது. அன்று அந்த அளவுக்குப் புரிந்துணர்வு இல்லை அதனால் அவ்வாறு இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வாசிப்புநேரம் -
கறுப்புதான் எனக்குப் பிடிச்ச...

(படம்: Tumblr)

நிறப்பாகுபாடு. ஒருவரின் நிறத்தைக்கொண்டு அவரைப் பாரபட்சமாக நடத்துவது. பழங்காலத்தில் இருந்தது. அன்று அந்த அளவுக்குப் புரிந்துணர்வு இல்லை அதனால் அவ்வாறு இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்றும் இருக்கிறது என்பதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை.

குறிப்பாகப் பெண்கள் என்று வரும்போது அது இன்னும் அதிகமாகவே தலைதூக்குகிறது. உதாரணத்துக்கு நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த தமிழ் திரைப்படங்களையே எடுத்துக்கொள்வோம். முன்னனி நட்சத்திரங்கள் இருப்பர். கதாநாயகன் தமிழராக இருப்பார். ஆனால் கதாநாயகி? பொதுவாக வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருப்பார். சில வேளைகளில் அவர் இந்தியராகவே இருக்கமாட்டார்.

இது ஏன்?

நாயகன் கருமையான சருமத்தைக் கொண்டிருத்தால் ஏற்றுக்கொள்வோர், பெண்கள் என்றால் தயக்கம் காட்டுவது ஏன்?

கறுப்பாக இருப்பவர்கள் திரைப்படங்களில் அறவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இருக்கவே செய்கின்றனர். எதிர்மறையான கதாபாத்திரங்களில். அல்லது கிண்டல் அடிப்பதற்கும் கேலி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றனர். வாங்க பழகலாம் போன்ற கதாபாத்திரங்களில்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். திரைப்படங்களுக்கு முன்பும் இடைவேளையிலும் வரும் விளம்பரங்கள். அவற்றில் பெரும்பாலும் சருமத்தை வெண்மையாக்குவதற்கான பொருட்களுக்கானவை. சருமம் ஏன் வெண்மையாக இருக்க வேண்டும்? பொலிவாக இருந்தால் போதாதா?

வெண்மையாக இருப்பது அவ்வளவு முக்கியமா? அப்படியிருந்தால் மட்டுமே ஒருவரை அழகு என்று கருதுவதா? இயற்கை தந்த தோல் வகை அழகில்லையா? வெண்மையாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு ஏன்? எதிர்பார்ப்பு ஏன்?

இவையெல்லாம் நடப்பது இன்று அதாவது 2016இல். இந்தக் காலத்திலும் ஒருவரின் தோற்றத்தைக்கொண்டு ஆட்களைப் பாரபட்சமாக நடத்துவோர் இருக்கவே செய்கின்றனர். உலகின் பல இடங்களிலும்.

இருப்பினும் இதுவே முடிவு என்பதல்ல. #Unfairandlovely போன்ற இயக்கங்கள், சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விளம்பரம் செய்ய மறுக்கும் நட்சத்திரங்கள், உலக மேடைகளில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு, மாநிறம் என நிறப்பாகுபாடின்றி பவனி வரும் பெண்கள். இவை அனைத்தும் மக்களின் மாற்றத்தைக் குறிப்பவை. ஆனால் இது இத்துடன் முடிந்துவிடாது. முடியவும் கூடாது, அதற்கு நாமும் நம் பங்கை ஆற்றுவதும் முக்கியம்.

ஒருவரின் தோற்றத்தை மட்டும் பாராட்டக்கூடாது. அவருக்குள் இருக்கும் ஆற்றல்களைப் பாராட்ட வேண்டும். குணநலன்களைப் பார்க்க வேண்டும். அதுதான் அழகு. அதுதான் நிலைக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்