Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

நீர்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப நண்பரின் திருமணம். போகவேண்டிய கட்டாயம். என் மூன்று நண்பர்களோடு அந்தப் பாலைவனச்சோலைக்குச் சென்றேன்.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப நண்பரின் திருமணம். போகவேண்டிய கட்டாயம். என் மூன்று நண்பர்களோடு அந்தப் பாலைவனச்சோலைக்குச் சென்றேன்.

முதல் இரு நாட்கள் கல்யாணம், கச்சேரி என்று முடிய, மூன்றாம் நாள் அழகாகத் தொடங்கியது. “ராஜஸ்தான் வந்திருக்கிறோம் ஒட்டகச் சவாரி செய்யாவிட்டால் எப்படி?“ என்று நண்பர்கள் கேட்க, வாடகை வண்டியொன்றை எடுத்துக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தோம்.

வெளியூர் சென்றால் பாதை தெரியாமல் அவதிப்படுவதும், வண்டி பழுதுடைவதும், கைத்தொலைபேசியில் தொடர்பு கிடைக்காமல் போவதும் இயல்பு. ஆனால் இவை மூன்றும் ஒன்றுசேர்ந்து நடந்தால் துயரம்தான். எங்களுக்கு அதுதான் நடந்தது.

தெரியாத இடம். யாரேனும் வருவார்கள், உதவி கேட்கலாம் என்று நினைத்தோம். நேரம் செல்லச் செல்ல இருட்ட ஆரம்பித்தது.
யாரும் கண்ணில் தட்டுப்படவில்லை. இரவு அப்படியே கழிந்தது. அடுத்த நாள் காலை 8 மணியளவில், முதியவர் ஒருவர் மிதிவண்டியில் குடங்களை வைத்துக்கொண்டு வருவதைப் பார்த்தோம்.

அந்தப் பாதையில் வண்டி எதுவும் வராது என்றும் சவாரிக்கும் இந்த இடதுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் சொன்னார்.  
12 கிலோமீட்டர் செல்ல வேண்டும். நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
“குடிக்கத் தண்ணீர் வேண்டும்” என்று நண்பன் முதியவரைக் கேட்க, அவர் "அவ்வளவு சுலபமாகக் கேட்டுவிட்டாயே!" என்று சிரித்துக்கொண்டு தண்ணீர் கொடுத்தார்.

நடக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே, கூட்டமாக மக்கள் கையில் குடங்கள் வைத்துக்கொண்டு நடந்துசென்றதைப் பார்த்தோம், அவர்களும் நாங்கள் செல்லும் இடத்திற்குத்தான் செல்வதாகச் சொன்னார்கள்.

பக்கத்து ஊரில் உள்ள கேணியை 3 மணி நேரத்துக்குப் பின்  அடைந்தோம். குறைந்தது 200 பேர் வரிசையில் குடங்களை வைத்துக்கொண்டு நின்றார்கள்.

அப்போதுதான் அந்தப் பெரியவர் சொன்னது புரிந்தது, ஒரு குடம் தண்ணீருக்காக 10 கிலோமீட்டர் நடக்க வேண்டும், வரிசையில் காத்திருக்கவேண்டும்.

அந்தத் தருணம் எங்களை மிகவும் பாதித்தது. வீட்டைச் சுற்றி கைக்கு எட்டிய தூரத்தில் அழகான குழாய்களில் நீரை வேண்டியபோதெல்லாம் பருகியிருப்போம், பலமுறை வீணடித்திருப்போம். ஆனால் இவர்களின் நிலைமை?

நீரைச் சேமியுங்கள், வீணாக்காதீர் என்று பல விளம்பரங்களை நான் பார்த்திருக்கிறேன். அதைப் பற்றிப் பெரிதாகக் கண்டுகொண்டதில்லை. ஆனால் அந்த நிமிடம் என்னை உணரவைத்தது.

தாகத்தின்போதுதான் நீரின் அருமை புரியும் என்பார்கள். நம்மில் எத்தனை பேர் தண்ணீருக்காக 1 கிலோமீட்டருக்கும் மேல்  நடந்திருப்போம் அல்லது 2 மணி நேரம் வரிசையில் நின்றிருப்போம்?

நம்மிடம் ஒரு பொருள் இருக்கும்போது அதன் அருமை புரியாது, அதைப் போன்றுதான் நீரும். நமக்கு வேண்டியபோதெல்லாம் குவளை வழிய வழிய வீட்டுக் குழாயிலிருந்து கிடைத்த நீர் திடீரென்று நிற்கும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.  

உலகில் 1.2 பில்லியன் மக்களுக்குக் குடிக்க நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. வெப்பமயமாதல், மாசு, வறட்சி போன்றவை குடிநீருக்கு இன்னும் பிரச்சனைகளைச் சேர்க்கின்றன.

Water Crisis என்று இணையத்தில் தட்டிப் பாருங்கள். இது போல் எத்தனையோ தெரியாத கதைகள் இருக்கும். காலம் வேகமாகச் சுழலும் ஆற்றல் கொண்டது. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு துளியும் அடுத்த தலைமுறைக்குப் பொக்கிஷம்.

தண்ணீரைப் பற்றி ஒரு துளிகூடக் கவலை இல்லாமல் இருந்த எனக்கு அந்தப் பயணம் ஒரு வாழ்நாள் பாடமாக அமைத்தது.

இந்த மாதிரியான மாற்றங்கள் எளிதில் நடக்கக்கூடியவை அல்ல.  ஆனால் சற்றுச் சிந்தித்தால் சாத்தியமாகலாம்.

அன்புடன்
வினோத்குமார்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்