Images
  • 15Jan Pesuvoma thanimai (1)
    (படம்: ராய்ட்டர்ஸ்)

தனிமை

தனிமையை ஒரு பிரச்சினையாக எத்தனை பேர் எதிர்நோக்குகிறீர்கள் அல்லது ஏதாவது ஒரு காலக் கட்டத்தில் எதிர்கொண்டிருக்கிறீர்கள்?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது சுலபமன்று. தனிமை உணர்வைவிட்டு வெளியே வந்தவருக்கும்கூட அந்த அனுபவத்தை நினைவுகூருவதென்பது வருத்தத்தைத் தரலாம். 

தனிமைத் துயர் வாட்டும் காலத்தில் பார்ப்பதெல்லாம் தவறாகத் தெரியும். நெருங்கிய நண்பர்களும் பெற்றோர் உட்பட உற்றார் உறவினரும் நம்மை விலக்குவது போன்ற உணர்வு எழும். நம்மைச் சுற்றியிருப்போர் எப்போதும் இரகசியமாகச் செயல்படுகிறார்களோ என்ற எண்ணம் வரும்.

சில நேரங்களில் வேண்டுமென்றே பிறர் நம்மைத் தனிமைப்படுத்துவதுண்டு. ஆனால் பல வேளைகளில் எல்லாம் சீராக இருக்கும்போதுகூட இந்தச் சூழல் உருவாகலாம். அது பாதிக்கப்பட்டவர் தாமே ஏற்படுத்திக்கொண்ட ஒன்றாக இருக்கலாம். அத்தகைய நேரங்களில் என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கலாம்.

எத்தனை பேருக்கு இது நேர்ந்துள்ளது? இதைப் பற்றி யாரிடமாவது பேசியிருக்கிறீர்களா, மனம் விட்டு அழுதிருக்கிறீர்களா? "பேசிப் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை... கேட்பவர்களுக்கு அலுத்துப்போய்விட்டதே" எனும் நிலைகூட வரக்கூடும். வாழ்க்கையில் அவரவருக்கு எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. 'ஒன்றும் இல்லாததை எண்ணி உன்னை நீயே ஏன் துன்புறுத்திக்கொள்ள வேண்டும்?' இதைச் சிலர் எங்கோ எப்போதோ கேட்டிருக்கலாம். 

எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற உணர்வு ஏன் எழுகிறது? இளம் வயதில் பல சமயங்களில் நம்மைப் பலர் புறக்கணித்திருக்கலாம், பெற்றோர் தேவையான அன்பையும் பாசத்தையும் வழங்காமல் இருந்திருக்கலாம், அவர்கள் நம்மை அடிக்கடி பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து மட்டம் தட்டியிருக்கலாம், பள்ளியில் பிற மாணவர்கள் அடிக்கடி கேலி செய்து பொழுதைக் கழித்திருக்கலாம். அந்தத் துயரம் பசுமரத்தாணிபோல் மனத்தில் தைத்திருந்திருக்கலாம். 

இளம் வயதில் நடந்ததை நினைத்து நினைத்து வருத்தப்படுவதில் என்ன பயன்? பலரும் கேட்கும் கேள்வி. நியாமான ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு அப்படி அல்ல. காரணம், வேதனையை ஒவ்வொரு நொடியும் அனுபவித்துப் பார்த்தவருக்குத்தான் தெரியும் அது தரும் வலி. அந்த வேதனையைச் சீராக்கவேண்டிய காலத்தில் சரிசெய்யாததால்தான் தனிமை உணர்வு உருவெடுக்கிறது, நாளடைவில் பெரும் பிரச்சினையாகிறது. 

தனிமை உணர்வு முத்தினால் என்னாகும்? பிறர் நம்மிடம் உண்மையில் அன்பாக இருந்தாலும்கூட அதுவும் தவறாகவே தோன்றலாம். இல்லாத பிரச்சினையை எண்ணி எண்ணி வருந்தும்போது மற்றவர்களுக்குச் சலிப்புத் தட்டலாம். பின்னர் நெருங்கி இருப்பவர்களும் விலகிச் செல்ல நேரிடலாம். 

சில நேரங்களில் தனிமை பிரச்சினையாகவே இருக்காது. ஆனால் அனைவரும் புறக்கணிக்கின்றனரோ என்ற உணர்வு தலைதூக்கினால் ஆபத்து. அது இல்லாத தனிமையைத் தேடிக்கொள்ள வழி ஏற்படுத்தும். ஆனால் தனிமை, பிரச்சினையாக மாறும்போது அதனை அப்படியே விட்டுவிட்டால் விபரீதங்கள் நிகழலாம். சிறிய பிரச்சினையைக் கையாளாமல் விட்டால் அது நமது வாழ்க்கையைப் பாழாக்கிவிடும். தனிமைப் பிரச்சினை உண்டானால், தொடக்கத்திலேயே மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது. 

யாராக இருந்தாலும், தனிமையில் உங்களுக்கு வேண்டியவர் வாடுகிறார் என்றால் அவருக்கு உரிய நேரத்தில் உதவுவது முக்கியம். தனிமையில் இன்னல்படுவோரைச் சமாளிப்பது சுலபமன்று. அவர்கள் அடிக்கடி வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும்; எதற்கெடுத்தாலும் சோர்ந்துபோய்க் காணப்படக்கூடும்; எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கக்கூடும். என்னதான் செய்வது என்று தெரியவில்லையே எனும் நிலை உதவ நினைப்போருக்கும் ஏற்படலாம். 

என்னால் இவ்வளவுதான் முடியும், இவரை ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணம் வந்தால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தனிமைத் துயரம் கொடூரமானது. காரணமில்லாமல் ஒருவருக்கு அது வராது. தனிமை, அதனால் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றைப் போக்க நெருங்கியவர்களின் அன்பு மிகவும் தேவை. சக மனிதர்களின் ஆறுதலும் அவசியம். 

இயந்திரமயமான இன்றைய நகர வாழ்க்கையில் தனிமையில் வாடுவோரைக் கண்டால் தள்ளிப்போகாமல் உதவ முயலலாமே!  


உங்கள் கருத்து

Top