Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

களிப்பூட்டும் கற்பனை வானம்

சிறுவயதில் என் அப்பாவுடன் காரில் காற்றுவாங்கச் செல்லும்போதெல்லாம், சன்னலைக் கீழ் இறக்கி, வானில் சிதறிக்கிடக்கும் ஓவியங்களைப் பார்த்து ரசிப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். 

வாசிப்புநேரம் -

சிறுவயதில் என் அப்பாவுடன் காரில் காற்றுவாங்கச் செல்லும்போதெல்லாம், சன்னலைக் கீழ் இறக்கி, வானில் சிதறிக்கிடக்கும் ஓவியங்களைப் பார்த்து ரசிப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். காலம் கடந்தாலும், அந்தப் பழக்கம் என்னைவிட்டுப் பிரியவில்லை. அதை நான் என் சகோதரர்களின் பிள்ளைகளுடனும் பகிர்ந்துகொண்டேன்.

பரந்து கிடக்கும் நீல வானில் பஞ்சாய்ச் சிதறிய மேகங்களில் எத்தனை விதமான சித்திரங்கள்?
சிரிக்கும் முகங்கள், வெள்ளை இதயம், சில நேரங்களில் செல்லப் பிராணிகள்கூட என் கற்பனையில் வானில் விளையாடுவது போன்று தோன்றும். கற்பனை! எத்தனை அழகான உலகம் அது!

ஒரு குழந்தையின் வண்ணமயமான சிந்தனைகளை ஏந்திய அந்த உலகம் நாளடைவில் மங்கிவிடுவது ஏன்? கண்ணைத் திறந்துகொண்டு கனவு காண்கிறாயா எனச் சிலர் பிள்ளைகளை ஏசுவார்கள். ஆனால் அத்தகைய கனவுகளால் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன தெரியுமா? 

சிந்தனையில் தோன்றும் காட்சிகளை நிஜத்திலும் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை அதிகமாகும். புத்தாக்கத் திறன் அதிகரிக்கும்.
எதிலும் மேம்பாடு காணவேண்டும். அடுத்தடுத்து என்ன என்ற கேள்வி எப்போதும் நமக்குள் ஒரு தூண்டுதலை எழுப்பிக்கொண்டே இருக்கும். அறிஞர்களும் அறிவியலாளர்களும் கற்பனை செய்யாவிடில் இத்தனை புதிய கண்டுபிடிப்புகளுடன் நாம் இப்போது செளகரியமாக வாழமுடியுமா? சோம்பேறித்தனமாக நேரத்தைக் கழிப்பதற்கும் பயனுள்ள வழியில் அதனைச் செலவிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 

ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு, யோசிப்பதாகக் கூறி ஒன்றுமே செய்யாமல் இருப்பது தவறு. பெற்றோர், குழந்தைகள், நண்பர்கள், சக ஊழியர்கள் எனப் பலர் ஒன்றாகச் சேர்ந்து கற்பனைத் திறனை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

மனவுளைச்சலைக் குறைக்கவும் அது வெகுவாக உதவும். 

மாய உலகாக அது தோன்றினாலும் அதனைப் பாராட்டும் பிறரை அதற்குள் அனுமதிக்கும்போது மகிழ்ச்சி பிறக்கும். சில நேரங்களில் பரபரப்பான வேலை வாழ்க்கைச் சூழலின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும் எனத் தோன்றும். அது உடனடியாகச் சாத்தியமாகாது. அப்போது கைகொடுக்கும் ஆற்றல் கற்பனைக்கு உண்டு.

ஒரு வெள்ளைக் காகிதம், ஒரு பேனா, பென்சில். அவை போதும். எனக்கு வரையத் தெரியாதே எனப் பலர் கூறுவர். சில கோடுகளைப் போட்டால்கூட அது உங்கள் கற்பனையில் அழகாகத்தான் இருக்கும். இது, ஒரு உதாரணம்தான். குழந்தைகள் விளையாடுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவர்களின் உலகில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர்கள் உலா வருவார்கள். இன்பம் பொங்கும் வெண்ணிலா போல காட்சியளிப்பார்கள்.
துயரத்தை அவர்கள் வெகுநேரம் சுமப்பதில்லை. கண்ணீரையும் சட்டென புன்னகையாக மாற்றும் மந்திரத்தை அவர்கள் அறிந்துவைத்துள்ளனர். 

அவ்வப்போது நமக்குள் இருக்கும் குழந்தையைத் தட்டி எழுப்புவதில் தப்பில்லை. நமக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, பிடித்ததைச் செய்வது, மனத்துக்குப் பெரிதும் அமைதி தரும். அறிவாற்றலை வளர்க்கவும் அன்பார்ந்தவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு ஞாபகங்களைச் சேகரிக்கவும் அது நல்ல வாய்ப்பாக அமையும். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சொற்களை நினைவில் கொள்ளுங்கள். அறிவுக்கு வரம்புண்டு. கற்பனைக்கு ஏது எல்லை?

"Imagination is more important than knowledge. For knowledge is limited to all we now know and understand, while imagination embraces the entire world, and all there ever will be to know and understand.”

அன்புடன்,
அபிடா பேகம்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்