Images
  • husk

நெல்லுக்கு உமியுண்டு!

மேல்நோக்கிச் செலுத்துவது பக்தி,
கீழ்நோக்கிப் பாய்வது பரிவு,
கைகோத்துக் கொள்வதே நட்பு.

அதாவது,

பக்தி என்பது நம்மைவிட மேல் நிலையில் இருக்கும் இறைவனிடம் அல்லது ஆசிரியரிடம் காட்டப்படுவது. பரிவு என்பது நம்மைவிடவும் ஏதோவொரு விதத்தில் - வாழ்க்கைத் தரத்திலோ , மன ஆரோக்கியத்திலோ, உடல்நலத்திலோ, பல்வேறு சிக்கல்கள், மன உளைச்சல்கள் ஆகியவற்றால் பாதிப்புற்ற உணர்வு நலத்திலோ, இப்படி ஏதாவதொரு காரணத்தால் நம்மைவிடவும் சுகவீனமாய் இருப்பவர்களிடம் காட்டப்படுவது. ஆனால் நட்பு மட்டும்தான் சம அலைவரிசையில் பகிர்ந்துகொள்ளப்படும் உணர்வு.

நம் வாழ்வின் பல்வேறு கட்டங்களில், பலவிதமான வடிவங்களில் நம்மைப் பலப்படுத்துவதும், வடிவமைப்பதும் நட்புதான். அப்படிப்பட்ட நட்பு, பல சமயங்களில் நீடிக்காமல் ஆரோக்கியம் தொலைப்பது ஏன்?

உண்மையில் நம்மைப் பிணைக்கும் எல்லா உறவுகளுக்கும் அடிநாதமாய் இருப்பது நட்புதான். எந்த ஓர் உறவிலும் எப்போது நட்பு இழை அறுபடுகிறதோ அதன் பிறகு அபஸ்வரம்தான். பெற்றோர்-பிள்ளைகள் , கணவன்-மனைவி, சகோதரர், சக குடும்பத்தினர், ஆசிரியர்-மாணவர், முதலாளி-தொழிலாளி, வர்த்தகர்-வாடிக்கையாளர், மருத்துவர்-நோயாளி , அண்டைவீட்டினர், அயல்நாட்டினர், இப்படி எந்தவிதமான உறவும் ஊசிப்போவதோ அன்றி வாசம் வீசுவதோ, அந்தந்த உறவிலிருக்கும் நட்பின் பலத்தைப் பொறுத்தே அமைகிறது.

நல்ல நண்பன் ஒருவன், ஒரு நூலகத்துக்குச் சமம் என்பார்கள். ஆனாலும்கூட நட்பு நீர்த்துப் போவதேன்?

நம்பி, நட்பு பாராட்டிக் காயப்பட்ட அனுபவம் நம் எல்லாருக்கும் உண்டு ; எண்ணிக்கை வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஆதாயத்தை எதிர்பார்த்து, கொள்ளப்பட்ட நட்பில் வேண்டுமானால், ஆதாயம் கிடைத்த பிறகு அல்லது கிடைக்காது என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, நட்பு அர்த்தமற்றுப் போகலாம். அது எதிர்பார்க்கப்படவேண்டியதே. ஆனால் பொதுவில் எப்பேர்ப்பட்ட நட்புமே நாளாக ஆக, வீரியம் குறைவது வாடிக்கையாய் ஆனது ஏன்?

இதற்கு விடைகாண ஒரு சின்னக் கணக்கெடுப்பு செய்வோமா? நமக்கு நண்பர்கள் என்று, சந்தேகத்துக்கு இடமில்லாமல், எத்தனை பேரைச் சொல்லலாம்? எத்தனை பேரின் நட்பில், நம்மால் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை? இதற்கான விடையை நாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளத் தேவையில்லை. ஆகவே, உண்மையின் வெளிச்சத்தில் பதில் தேடுங்கள். உங்கள் எண்ணிக்கையின் அளவு - உங்கள் மகிழ்ச்சியின் அளவு! அந்த அளவு, உங்களுக்குத் திருப்திதானா? ஒருவேளை இல்லையென்றால் என்ன காரணம்? குறைகாண முடியாத நட்பு குறைவாக இருக்கிறதென்றால், அதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தானே இருக்க முடியும்? அது, "நாம் குறைகாண்கிறோம்" என்பதுதானே ?

உண்மையில் பிரச்சினை இதுதான். இன்றைக்கு நாம் எல்லாருமே குற்றம் பார்த்துப் பார்த்தே, சுற்றம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். எதிராளி மட்டுமே எப்போதும் குற்றவாளி என்கிறது நம் மனத் தராசு. அதற்காக என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு போக முடியுமா? நிச்சயமாக முடியாது! அது மகான்களுக்கு மட்டுமே கைவந்த கலை! ஆனால் சின்னச் சின்னக் குறைகளையும் ஊதி ஊதிப் பெரிதுபடுத்தாமல் பொறுத்துப் போக, நம்மால் முடியும்தானே? அந்தப் பொறுத்துப்போகும் தன்மையால், மகிழ்ச்சியை நிலைநாட்ட முடியும்தானே? பொறுத்துப்போவது ஒன்றும் மந்திரச் சக்தியல்லவே? மனிதச் சக்திதானே அது?

அப்படிப் பொறுத்துப்போவதை யாருடைய கட்டாயத்தின் பேரிலும் செய்யாமல் , மற்றவரிடம் சொல்லிப் பெருமைப்படுவதற்காகவும் செய்யாமல், உணர்ந்து செய்யத் தொடங்கினால் நம்மை விட மகிழ்ச்சியானவர் யார் ?
நம் முன்னோர்கள் ஒரு கதை சொல்வதுண்டு.
ஒரு சமயம் யோகி ஒருவர் கடுமையாகத் தவம் புரிந்தார். வாழ்க்கையைச் சிறப்பாக வாழும் வல்லமையைத் தரும்படி இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அந்த யோகியிடம் இரண்டு பைகளைக் கொடுத்து ஒன்றை அவர் முன்னாலும் மற்றொன்றை முதுகுப் புறத்திலும் தொங்கவிட்டார். பிறகு யோகியிடம், "உனக்குப் பின்னால் உள்ள பையில் மற்றவர்கள் குறையை நிரப்பு; அதை ஒருபோதும் திரும்பிப் பார்க்காதே. உனக்கு முன்னால் உள்ள பையில் உன் குறைகளை நிரப்பு; அதை எப்போதும் கவனித்துத் தீர்க்கப்பார்" என்றாராம். ஆக நாம் குறை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தால், அது நமது குறைகளாக இருக்கட்டும்.
நாலடியாரில் ஓர் அழகான பாடலுண்டு.

“நல்லார் எனத் தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லாரெனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு“. இதுதான் அந்தப் பாடல்.

இதன்பொருள்: நல்லவர் என்று மிகவும் விரும்பி, நண்பராக ஒருவரை ஏற்றுக்கொண்டபிறகு, அவரிடம் குற்றங்கள் இருக்குமேயானால் பொறுத்துக்கொண்டு அவரை நண்பராகவே மதிக்கவேண்டும். ஏனெனில், நெல்லுக்கு உமியாகிய குற்றம் உண்டு; தண்ணீருக்கு நுரையாகிய குற்றம் உண்டு; பூவிற்கும் புறவிதழாகிய குற்றம் உண்டு.

நட்பில் குற்றங்களைப் பொறுத்துப்போக வேண்டும் என்பதே முதல் இரண்டு வரிகள். இறுதி இரண்டு வரிகள்தான் சிகரம் வைத்தது போன்ற சிறந்த வரிகள். நிலவில் கூடக் களங்கம் உண்டு என்று நமக்கு எட்டாத ஒன்றைச் சொல்லவில்லை பாருங்கள். எல்லாமும் நாம் பயன்படுத்தும், நமக்குப் பழக்கப்பட்ட பொருட்கள். அதிலும் அந்த வரிசையைக் கவனியுங்கள்! நெல், நீர், பூ.

முதலில் மனிதனின் பசியைப் போக்கும் உணவு தரும் நெல். அவரவர் வசதிக்கேற்ப அறுசுவை விருந்தோ அன்றாடம் காய்ச்சும் கூழோ , அதற்கு ஆதாரமான அரிசியைத் தரும் நெல். அடுத்து, அவன் தாகம் தணிக்கத் தேவையான நீர். பழரசமோ, வேறேதாவது பானமோ தயாரிக்க அல்லது அப்படியே அருந்துவதற்கான நீர்.

இந்த இரண்டு தேவைகளும் பூர்த்தியான பின்னர்தான் இயல்பில் அழகுணர்ச்சி மேலெழும். ஆக மூன்றாவதாக, ஆண்டவனுக்கோ அலங்காரத்திற்கோ தேவைப்படும் பூ.

மனிதனுக்கு நெருக்கமான, உபயோகத்தன்மை மிக அதிகமாக உள்ள இந்த மூன்றிலுங்கூட நீக்கப்பட வேண்டியது உள்ளதே! அதற்காக அந்தப் பொருட்களை நாம் ஒதுக்குவதில்லை என்ற உண்மையை உரத்துச் சொல்கிறது. அதே சமயம், இந்தச் சிறு குறைகளைப் பொறுத்துக்கொண்டால், பெரும் நன்மை அடையப்போவது நாம்தான் என்ற உண்மையையும் விளக்குகிறது. இன்னொரு கோணத்தில், மிக உயர்ந்தவர்களிடத்திலும் கூடச் சின்னச் சின்னக் குறைகள் இருப்பது இயல்புதான்; அதை ஏற்றுக்கொள்வதே நலம் என்று நம்மைப் பழக்குகிறது.

பழக்கத்தால் அடைய முடியாதது ஒன்றுமில்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறையைப் பொறுத்துப்போவோம். அதே நேரத்தில், மற்றவர் நம்மிடம் பொறுத்துப்போகும் தேவை இருக்கிறதா என்று சுய-அலசல் செய்வோம். நம்மைச் சுற்றிலும் நேர்மறையான எண்ண அலைகளைப் பரவவிடுவோம். அதற்கான முயற்சிகளை உடனே தொடங்குவோம். எப்போதும் தொடருவோம்.

நட்புக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம். எதற்காகவும் நல்ல நட்பை விட்டுக்கொடுக்கக் கூடாது.

நீரின்றி அமையாது உலகு! நட்பின்றி அமையாது நல்வாழ்வு!!

அன்புடன்

வை. கலைச்செல்வி

உங்கள் கருத்து

Top