Images
  • 18Sep Matri Yosi (1)

திரையுலகத்திலும் விளையாட்டிலும் தீரா ஆர்வம்

திரையுலகம், விளையாட்டு. எல்லோராலும் இவை இரண்டையும் ரசிக்கமுடியாது.

மக்கள் திரைப்படங்களைப் பார்ப்பதுண்டு, பாடல்களைக் கேட்டு ரசிப்பதுண்டு. ஆனால் அதற்கு மேல் அவற்றில் என்ன உள்ளது? திரைப்பட மோகம் அதிகம் இருப்பது நல்லதன்று, அதற்கு நம் வாழ்க்கையில் அதிக இடம் கொடுக்கக்கூடாது என்றெல்லாம் சிலர் சொல்வதுண்டு.

அதேபோல விளையாட்டும் அனைவரையும் கவர்வதில்லை. பல பிரச்சினைகள் இருக்கும் வேளையில் விளையாட்டுக்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம்? என்று கேட்பவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

1995 ரக்பி உலகக் கிண்ணத்தை எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வென்றது தென்னாப்பிரிக்கா. அந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பல நிகழ்வுகளில் முக்கியப் பங்கு வகித்தார் அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா. அந்த நிகழ்வுகள் Playing the Enemy: Nelson Mandela and the Game That Made a Nation என்ற புத்தகத்தில் விரிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. பின்னர் Invictus எனும் ஹாலிவுட் படமாகவும் எடுக்கப்பட்டது.

1995 ரக்பி உலக் கிண்ணத்தைத் தென்னாப்பிரிக்கா ஏற்று நடத்தியது. அணித்தலவைர் Francois Pienaaவிடம் திரு. மண்டேலா கூறியது இதைத்தான் - "உலகக் கிண்ணத்தை வென்றுவா!"

சொந்த மண்ணில் எதிர்பார்ப்புகளை முறியடித்து கிண்ணத்தை வென்றால் பிரிந்திருந்த நாட்டு மக்கள் ஒன்றுசேரக்கூடும். கருத்து வேறுபாடு, இன வேறுபாட்டை மறந்து தென்னாப்பிரிக்கர்கள் தங்களின் தேசிய அணியை ஆதரித்துக் குரல் கொடுப்பர் என்று நம்பினார் மண்டேலா. Apartheid எனும் இன ஒதுக்கீட்டுக் கொள்கையிலிருந்து மீண்டுவரச் சிரமப்பட்டது தென்னாப்பிரிக்கா. ஒரு சராசரியான தலைவரைப் போல் யோசிக்காமல் விளையாட்டை வைத்து நாட்டை ஒன்றிணைக்க எண்ணினார் மண்டேலா.

அப்போது தென்னாப்பிரிக்க ரக்பி அணியில் இடம்பெற்றவர்கள் பெரும்பாலோர் வெள்ளையர்கள். ரக்பி, வெள்ளையர்களின் விளையாட்டு என்றே வகைப்படுத்தப்பட்டது என்றுகூடச் சொல்லலாம்.

உலகக் கிண்ணம் தொடங்குவதற்கு முன்னர், தென்னாப்பிரிக்க ரக்பி அணியினர் நாட்டு மக்களுடன் கலந்துபேசி நல்லுறவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர், அதிபர் மண்டேலாவின் உத்தரவின் பேரில். அவ்வாறு நாட்டின் பெரும்பான்மைக் கறுப்பினத்தவர் உள்ளிட்ட ரசிகர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் மனத்திலும் ரக்பி விளையாட்டாளர்கள் இடம்பெறத் தொடங்கினர்.

போட்டியின் இறுதியாட்டத்தில் புகழ்பெற்ற நட்சத்திரம் ஜோனா லோமுவைக் கொண்டிருந்த நியூஸிலந்தை வென்று தென்னாப்பிரிக்கா உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. மண்டேலா, பீனா உள்ளிட்டோரின் முயற்சிகள் கைகொடுத்தன. நாடே அணிக்குப் பின்னால் நின்றது, அணியை ஆதரித்தது, வெற்றியைக் கொண்டாடியது. இன ஒதுக்கீட்டுக் கொள்கையினால் சுமார் 50 ஆண்டுகள் அவதிப்பட்ட நாட்டிற்கு ஒருவழியாக ஒன்றாகக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

இன்றும் தென்னாப்பிரிக்காவில் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் 1995 ரக்பி உலகக் கிண்ணம் நிலைமையை ஓரளவு சுமுகமாக்கியது. "விளையாட்டு, உலகை மாற்றக்கூடிய சக்தி கொண்டது" என்பார் மண்டேலா. காரணம், விளையாட்டு என்பது உணர்வுகள் சம்பந்தப்பட்டது. மனிதர்களின் உணர்வுகளைத் தொட்டால், அவற்றை அறிந்து நல்ல வழியில் பயன்படுத்திக்கொண்டால், பலவற்றைச் சாதிக்கலாம்.

விளையாட்டைப் போன்றதுதான் சினிமாவும். திரையில் நாம் பார்க்கும் காட்சிகள், கேட்கும் வசனங்கள், பாடல்கள் மனத்தில் ஆழமாகப் பதிவதற்குக் காரணம், ஏதோ ஒரு வகையில் அவை நம் உணர்வுகளைத் தொடுகின்றன, தட்டியெழுப்புகின்றன. நம்மை அறியாமல் அவை நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளிடையே இதை நாம் அதிகம் பார்க்கமுடியும். அந்தப் பருவத்தில்தான் மனிதர்கள் தங்கள் உணர்வுகளுடன் கவலையின்றி தொடர்பிலேயே இருக்கின்றனர். வளர வளர அதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறோம். அதுவும் நவீனக் காலத்தில் நகர்ப்புற வாழ்க்கையில் கேட்கவே வேண்டாம்.

திரைப்படம், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், ஏன் நமது மக்கள் இதில் தேவையற்ற ஈடுபாடு காட்டுகின்றனர்?போன்ற கேள்விகளைச் சிலர் எழுப்புகின்றனர். நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் எதற்காக ரசிகர்கள் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் கேட்கப்படுகிறது.

நியாயமான கேள்விகள்தாம். விளையாட்டைப் பற்றிப் பேசும்போதும் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பிரச்சினை கைகலப்பு வரை செல்வதும் உண்டு. விளையாட்டு, திரைப்படம் இரண்டும் உணர்வுகள் சார்ந்தவை என்பதுதான் அதற்குக் காரணம். இதைப் பிரச்சினையாகப் பார்க்காமல் விளையாட்டையும் திரைப்படத்தையும் எவ்வாறு ஆக்ககரமாகப் பயன்படுத்தலாம் என்று யோசித்தால் பல காலமாக இருந்துவரும் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கக்கூடும்.


- பிரசன்னா கிருஷ்ணன்

 


உங்கள் கருத்து

Top