Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

சேலை கட்டினால்தான் தமிழாசிரியையா?

தமிழாசிரியை என்றால், நம் மனத்தில் உடனே காட்சியளிப்பது சேலை அல்லது வட இந்திய உடையணிந்த ஒரு மாது.

வாசிப்புநேரம் -

தமிழாசிரியை என்றால், நம் மனத்தில் உடனே காட்சியளிப்பது சேலை அல்லது வட இந்திய உடையணிந்த ஒரு மாது.

அந்த மனக்காட்சி எதைப் பிரதிபலிக்கிறது? அவர் பாரம்பரிய பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் ஒருவராகவோ நவீனக் கருத்துகள் அல்லாத ஒருவராகவோ இருக்க வேண்டும் என்பதைத்தான். இதை நான் சொல்லவில்லை. மாணவர்களிடையே நாங்கள் நடத்திய ஆய்வு ஒன்று அதனை வெளிப்படுத்தியது.

அடிப்படையாகத் தமிழாசிரியர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் இளம் மாணவர்களிடையே அதிகம் உள்ளது.

ஒவ்வொருவர் அணிகின்ற உடையும் அவரவரைப் பொருத்தது. அது அவர்களின் விருப்பம். அதில் தவறு ஒன்றுமில்லை.
தமிழாசிரியர்கள் எந்த உடையை அணிய வேண்டுமென்பதன் தொடர்பில் பள்ளிகள் எந்தக் கோட்பாடுகளையும் வரையறுக்கவில்லை.

ஆனால் நீங்கள் அணியும் உடைகளை வைத்து உங்களை எடைபோடுபவர்கள் பலர். அந்தப் பலரில் உங்கள் மாணவர்களும் அடங்குவர்.

மாணவர்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு வயது முதிர்ச்சி இல்லை என்று உதாசீனம் செய்யலாம். ஆனால் அன்று மாணவர்களாக இருந்தோர் இன்று பெரியவர்களான பின்பும்கூட இன்னும் தமிழாசிரியர்களைப் பற்றி அப்படித்தான் நினைக்கிறார்கள்.

அதில் பலர் பெற்றோராக இருப்பதால் அவர்களின் எண்ண அலைகள் அவர்கள் பிள்ளைகளையும் திசை திருப்ப வைக்கிறது.
இதுவே பல மாணவர்கள் பிற்காலத்தில் தமிழாசிரியர்களாக வருவதற்குத் தடையாய் இருக்கிறது. இந்தக் கருத்தை இளையர்கள் அண்மையில் நாங்கள் நடத்திய கருத்துப்பகிர்வு நிகழ்ச்சியில் முன்வைத்தனர்.

தமிழாசிரியராகச் சேர விரும்பும் மாணவர்களின் நிலை பாழும் கிணற்றில் விழுவதற்குச் சமம் என்று பெற்றோர் சிலர் நினைக்கிறார்கள். பதவி உயர்வு இல்லை; சம்பளம் குறைவு; மற்ற ஆசிரியர்களைப் போல் செல்வாக்கு இல்லை என்று பல குறைகள்.
இவை பரவலாக இருக்கும் கருத்துகள். ஆனால் இவையனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை.

இந்தத் தவறான எண்ணங்களை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர்கள் சிலர் பாரம்பரிய உடை அணிந்தால்தான், ஒரு நல்ல தமிழாசிரியர் என்ற உணர்வைப் பிரதிபலிக்க முடியம் என்று நினைக்கின்றனர்.

இந்தக் கூற்று, சரி என்றால், சீன மொழி கற்பிக்கும் ஆசிரியைகள் “சொங் சியாம்” அணிந்திருப்பார்கள். தமிழ் கற்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் வேட்டி அணிந்திருப்பர்.

பள்ளிக்குச் சேலை, சுடிதார் அணியாவிட்டால் நீங்கள் உங்கள் கலாசாரத்தைக் கைவிட்டுவிட்டீர்கள் என்று அர்த்தமில்லை. அது குற்றமில்லை.

வாரத்தில் ஒரு நாள் நீங்கள் மற்ற உடைகளில் வரும்போது மாணவர்களிடையே ஒரு மாற்றத்தைப் பார்க்கலாம். உங்கள் வெளிப்புறத் தோற்றத்தில் நீங்கள் செய்யும் மாற்றம் ஒரு முதல் படிதான். அந்த முதல் படி, தமிழாசிரியர் தொழிலுக்கு ஒட்டுமொத்தத் தலைமுறையொன்று வருவதற்கு இருக்கும் தடைக்கல்லை அகற்றும் ஒன்றாக அமையும்.

அன்புடன்
ந. குணாளன்

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்