Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

மிதக்கும் பனிப்பாறை

பனிப்பாறைகளைப் பார்த்திருக்கிறீர்களா?  மிடுக்கான தோற்றம். பளபளக்கும் வெண்ணிறம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில்.

வாசிப்புநேரம் -
மிதக்கும் பனிப்பாறை

(நன்றி: Creative commons)

பனிப்பாறைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

மிடுக்கான தோற்றம். பளபளக்கும் வெண்ணிறம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில்.அதன் அசையாத்தன்மையைப் பார்க்கும்போது அது மிதக்கின்றது என்ற உண்மைகூட சில வேளைகளில் மறந்துபோவதுண்டு.

நீருக்குள் மூழ்கிக்கிடக்கும் பனிப்பாறையின் அளவு, நீருக்கு மேலிருக்கும் பகுதியைவிட பன்மடங்கு பெரியது. ஆனால் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனால் அது பற்றி அவ்வளவாக யாரும் யோசிப்பதில்லை.

ஒருவர் வெளிப்படுத்தும் கருத்துகள், அவர் நடந்துகொள்ளும் விதம் முதலியவற்றை நீருக்கு மேல் நிமிர்ந்து நிற்கும் பனிப்பாறை பிரதிபலிக்கிறது.

நாம் காண்பவை, மற்றவர்களுடைய வாழ்க்கைப் புத்தகத்தின் ஒருசில அத்தியாயங்களை மட்டுமே. ஆழ்மனத்தின் எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், குணநலன்கள், பலவீனங்கள் முதலியவை பனிப்பாறையின் மூழ்கிக்கிடக்கும் கண்ணுக்குத் தென்படாத பகுதியைப் போன்றவை. புத்தகத்தின் பெரும்பகுதியைப் போல.

எப்போதும் கலகலப்பாக, மகிழ்ச்சியாகத் தோன்றுவோருக்கும் ஏதோ ஓர் ஓரத்தில் யாருக்கும் தெரியாத சோகம் இருக்கலாம். தீர்வுகாண முடியாத பிரச்சினை இருக்கலாம். நோய்வாய்ப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர் இருக்கலாம். தீர்வுகளுக்காக ஏங்கும் குழம்பிக் கிடக்கும் இதயம் இருக்கலாம்.

வாழ்க்கைப் பாதையில் சந்திக்க நேரிடும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

கண்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக அங்கு போராட்டம் இல்லை என்று அர்த்தமாகாது. மற்றவர்களின் உணர்வுகளுக்கு அவ்வப்போது முதலிடம் தருவதில் தவறொன்றும் இல்லையே?

சுடுசொற்கள் பயன்படுத்துவது, குறைகளை மட்டுமே சுட்டுவது, ஒருவரை ஏளனமாக நினைப்பது, அவருடைய கருத்துக்களை மதிக்காதது…

இவையெல்லாம், ஒருவரின் ஆழ்மனத்தை மாற்றமுடியாத வகையில் பாதிக்கலாம்.

கனிவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பாருங்கள். நிறைகளை எடுத்துக்கூறுங்கள். ஊக்கமளியுங்கள்.

ஆக்கபூர்வமான நன்மைகளை ஏற்படுத்துவீர்கள்.

என் தந்தை என்றோ என்னிடம் கூறியது, இன்று வரை என் மனத்தில் நிலைத்து நிற்கிறது.

Don't be too quick to judge. Everyone deserves a second chance.

‘யாரையும் உடனே மதிப்பிடாதே. இன்னொரு வாய்ப்புப் பெறும் உரிமை எல்லோருக்கும் உண்டு’ என்பதுதான் அது.

மற்றவரின் சூழ்நிலையில் உங்களைப் பொருத்திப் பாருங்கள்.

உங்களுடைய மனம் புண்படுமென்றால், அவர்களுக்கும் வலிக்கும் என்று அர்த்தம்.

உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று நினைத்தால் மற்றவர்களுக்கும் நீங்கள் அதனைக் கொடுத்துப் பாருங்கள்.

ஆனால் சில வேளைகளில் அதுவே பாதகமாக முடிகின்ற சிக்கலும் இருக்கவே செய்கிறது. சிலருக்குப் பல வாய்ப்புகளை வழங்கும் கட்டாயத்துக்கு நீங்கள் தள்ளப்படலாம். சிலர் மாறலாம். சிலர் மாறுவதற்குக் காலம் ஆகலாம்.

அத்தகைய தருணங்களில், உங்களுடைய உணர்வுகளையும் சுய மரியாதையையும் பாதுகாக்கும் கடமை உங்களுக்கு உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.

அன்புடன்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்