Images
  • 22Jan Pesuvoma prasana entertainment and arts (1)

திரையுலகம்: கலையா, கேளிக்கையா?

ஒரு திரைப்படம் என்றால், நல்ல கதையம்சம், தரமான நடிப்பு இரண்டில் ஒன்றாவது இருக்கவேண்டும், நடைமுறை வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஒன்றாக இருத்தல் அவசியம் என்பது சிலரின் வாதம்.

திரைப்படங்கள், பார்ப்போரை மகிழ்விக்கவேண்டும், உற்சாகப்படுத்தவேண்டும், சிரிக்கவைக்கவேண்டும்; இவை இருந்தால் போதும், நடைமுறைக்கும் திரைப்படத்துக்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை என்பது மற்றொரு கருத்து.

இந்த இரு மாறுபட்ட கருத்துகளையும் நாம் நிச்சயமாகக் கேட்டிருப்போம், குறிப்பாகத் தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடையே.

இந்தக் காலத்தில் குறைந்த செலவில் எடுக்கப்படும் நல்ல கதையம்சத்தையும் புதிய நடிகர்களையும் கொண்ட படங்கள் அடிக்கடி வெளிவருகின்றன. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்குடன் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் அவ்வப்போது வெளியாகின்றன.

ஹாலிவுட், பாலிவுட் திரையுலகங்களிலும் ஏறத்தாழ இதே நிலைதான்.
சில ரசிகர்கள் இரு வகை படங்களையும் விரும்பிப் பார்ப்பர். ஆனால் வேறு சிலரோ, நடிப்பு, கதை, கருத்து இது எதுவும் இல்லாத படம் எதற்கு என்று கேட்பதுண்டு.

ஆங்கிலத்தில் திரையுலகம், இசை ஆகியவை கேளிக்கை என்று வகைப்படுத்தப்படுகின்றன. சிறப்பான நடிப்பு, நல்ல கதையம்சம் ஆகியவற்றைக் கொண்ட படங்கள், பொழுதுபோக்குப் படங்கள்... காலத்தால் அழியாத பாடல்கள், சில நாட்களுக்கு மட்டுமே பிரபலமாக இருக்கும் நம்மை எழுந்து ஆடத் தூண்டும் விறுவிறுப்பான பாடல்கள்... அனைத்தும் இதில் அடங்கும்.

திரைப்படங்களைப் பற்றி மட்டும் பேசுவோம். எவ்வகைப் படமாக இருந்தாலும் அது பெரும்பான்மையினரைக் கவரும் வண்ணம் இருக்கவேண்டும். அப்போதுதான் படத்துக்கான வசூல் குவியும், தயாரிப்பாளர் இலாபம் பார்ப்பார். இலாபம் ஈட்டாத படம் தோல்விப் படம். தொடர்ந்து தோல்விப் படங்களைத் தரும் முன்னணி நடிகர்கள் நாளடைவில் பின்னுக்குத் தள்ளப்படுவர். இதுவே உண்மை.

அப்படி இருக்கையில் 'தரமான படம்' என்று ஒரு திரைப்படத்தை எதைவைத்து வகைப்படுத்துவது? நல்ல கதை, நடிப்பு, பாடல்கள் அனைத்தையும் கொண்ட பராசக்தி, திருவிளையாடல், மூன்றாம் பிறை, தேவர் மகன் ஆகியவையும் வெற்றிப் படங்கள்தான், எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், முரட்டுக் காளை, பாட்ஷா போன்றவையும் வெற்றிப் படங்கள்தான். அனைத்தும் காலத்தால் அழியாதவை.

திரைப்பட ரசிகர்களாகிய நாம் இரண்டையுமே பாராட்டுகிறோம். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. சிலருக்கு இரண்டில் ஒன்றின் மேல் கூடுதல் ஈடுபாடு இருக்கலாம் அவ்வளவுதான்.

தரமா, பொழுதுபோக்கா, சிவாஜியா, எம். ஜி. ஆரா, ரஜினியா, கமலா, விஜய், அஜித்தா, இதர நாயகர்களா, ஷாருக்கானா, அமீர் கானா... இந்த விவாதங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் சிந்தித்துப் பாருங்கள், ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை, ஒருவர் இருந்தால்தான் மற்றொருவரின் சிறப்பு வெளிப்படுகிறது. அனைவருக்கும் தனித்துவம் உண்டு!

பிடிக்காவிட்டால் அந்த நடிகரின் படத்தைப் பார்க்கவேண்டாம். "பிடிக்கவில்லை, ஆனாலும் பார்த்தேன்... தாங்கமுடியவில்லை. படம் கேவலம்," என்று சிலர் பிடிக்காத ஒருவரின் படங்களைப் பார்த்துவிட்டுக் கூறுவதுண்டு. அந்த நடிகரின் ஒவ்வொரு படம் வெளியான பின்னும் இந்த வசனத்தை நாம் அதே நபர் சொல்லிக் கேட்டிருப்போம். நான்கூட சில வேளைகளில் அவ்வாறு செய்திருக்கிறேன்.

பிடிக்கவில்லை என்றால் அதில் அக்கறை காட்டவேண்டியதற்கான காரணம் என்ன? எல்லோரும் பார்க்கிறார்கள், தானும் பார்த்தாகவேண்டும் என்ற சமுதாயத்தைத் திருப்திப்படுத்தவேண்டும் என்ற உணர்வா நம்மை அறியாமல் ஏற்படும் ஈர்ப்பா இரண்டுமா?

சிந்தித்துப் பாருங்கள்.


உங்கள் கருத்து

Top